- முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர்
இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி !
புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் புனித நீர் உலக நாடுகள் அனைத்திலும் மதிக்கப்பட்டு உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது !
“ஜம் ஜம்”! அது ஒரு கடலோ, ஏறியோ, நதியோ அல்ல ! இரண்டு ஒன்று நபர்கள் கட்டிப் பிடித்தால் அதற்குள் அடங்கி நிற்கும் அளவுள்ள ஒரு ஊற்றுக் கிணறு தான் ! ஆனால் அது படைத்து நிற்கும் சரித்திரமோ வரலாற்று நாயகர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி நிற்கச் செய்திருக்கிறது !
வறண்ட பாலைப் பகுதியில் வற்றாத சுனையாகக் கிளம்பி நிற்கும் அந்த ஊற்றின் அஸ்த்திவாரமே இஸ்மாயில் நபியின் பூவையொத்த பஞ்சுப் பாதங்கள் தான் !
ஆமாம் ! அன்னை ஹாஜராவையும், பூம் பாலகன் இஸ்மாயீலையும் பாலை வனக்காட்டில் விட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விடும்படி இறைக்கட்டளை பிறந்தது நபி இப்றாஹீம் அவர்களுக்கு ! அவ்வாறே செய்து திரும்பினார்கள் !
அக்கினிக் குழம்பாகக் கொதித்துக் கிடந்த அந்தப் பாலை மணற்காட்டில் கண் எட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை. உலக உருண்டையில் இரண்டு எறும்புகள் இருப்பது போல அந்த வனத்தில் அன்னை ஹாஜராவும் பிள்ளை இஸ்மாயீலும் இருந்தனர்.
அனல் பறக்கும் கொடும் வெய்யிலில் தரையில் கிடத்தப்பட்டிருந்த பிஞ்சுப் பாலகன் இஸ்மாயீல் தாகக்கொடுமை தாழாமல் கதறிப் பீறிட்டுக் கத்தி அழுது கொண்டு கிடந்தார்கள். பசியும் சேர்ந்து சோதித்தது !
குழந்தையின் அழுகுரல் கேட்டு மனம் பதைத்த அன்னை ஹாஜரா அவர்கள் செய்வதறியாது விழித்தார்கள். மார்பிலே அமுது வற்றிப் போயிருந்தது. மண்ணிலே நீர் வறண்டு போய்க் கிடந்தது. தொண்டை கிழியக் கதறி அழும் மழலைக்குத் தொண்டையை நனைத்து விடக்கூட அங்கு ஒரு துளி நீரும் இல்லை. பெற்ற மனம் பதறியது !
இடப்புறம் திரும்பிப்பார்த்தார்கள். அன்னை ஹாஜரா அம்மையார் ! “ஸபா” குன்றில் நீர் வடிவம் தெரிந்தது ! ஓடிச் சென்று பார்த்தார்கள் ! அது காணும் நீரல்ல ! கானல் நீர் ! மீண்டும் வலப்புறம் பார்த்தார்கள். “மர்வா” குன்றில் நீர் வடிவம் நெழிந்தது. ஓடிச்சென்று பார்க்கையில் அதுவும் வெற்றுக் கானல் நீரே ! இப்படியே ஏழுமுறை ஸபா – மர்வா மலைக்குன்றுகளில் தன் பெண்மையின் மென்மையை சிதைத்து வதைத்து ஓடி ஓடிப் பார்த்தார்கள். எல்லாம் ஏமாற்றமே ! குழந்தையின் அழுகுரல் தவிர எதையும் பெற முடியவில்லை. அந்தோ பரிதாபம் !
தாகக் கொடுமையால் தளிர் பாதம் உதறி உதறிக் கதறும் இஸ்மாயீல் அவர்களின் மேல் இறைவன் கருணை கொண்டு விட்டான். அவர்களின் பிஞ்சுப்பாதம் உதைத்து உதைத்துத் தோண்டிய சின்னஞ்சிறு குழியில் புனித அமுத “ஜம் ஜம்” நீர் பொங்கிப் பெருகி ஓடத் துவங்கியது ! திடீரென்று இதைக் கண்ணுற்ற அன்னை ஹாஜரா அவர்கள் அத்தண்ணீர் எங்கே ஓடி மறைந்து விடுமோ என்ற பயத்தால் தன்னிரு கரம் கொண்டு மணல் அணை கட்டி தன் தாய் மொழியால் “ஜம் ஜம்” “நில் ! நில்” என்றார்கள். அள்ளிப் பருகினார்கள் ! ஆனந்தம் கொண்டார்கள் ! இறைவனுக்கு நன்றி சொன்னார்கள் !
அன்று அன்னை ஹாஜரா அவர்கள் அணை போட்டுத் தடுத்து ஜம் ஜம் (நில் நில்) என்று சொல்லாமல் இருந்திருந்தால் இக்காலமும் இனி எக்காலமும் அந்நீர் உலகமெல்லாம் ஓடிக் கொண்டு இருக்கும். இறைவன் எண்ணம் அப்படி நடந்து விட்டது!
ஒரு பெண்மையின் பாதம் புண்ணாகிப் போன நிலைக்கு இறைவன் அளித்த அருட்கொடை தான் “ஜம் ஜம்” தண்ணீர் ! இறைவனுக்காக எதையும் தாங்கும் இதயம் கொண்ட குடும்பத்துக்குக் கிடைத்த பரிசு தான் “ஜம் ஜம்” தண்ணீர் !
|