Tamil Islamic Media ::: PRINT
தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை

தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை: பல லட்சம் லிட்டர் தண்ணீரை தாரை வார்க்க திட்டம்

நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி, குடிநீர் பாட்டில் தயாரிக்கும், 'பெப்சி' நிறுவன ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித் தான் ஆண்டுக்கு, இரண்டு போக நெல் சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது.

திறக்கப்படவில்லை:

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து பொய்த்து வரும் மழையினால், தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதி, கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு, ஜூன் மாதம் முடிந்தும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இரண்டு மாவட்டங்களிலும், ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர். இந்தசூழலில் தான், விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், 36 ஏக்கர், 'பெப்சி' குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.கங்கைகொண்டானில், ஏற்கனவே,'கோககோலா' நிறுவனம் துவக்கப்பட்ட போது பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அதையும் மீறி, நிறுவனம் துவக்கப்பட்டது.அந்த நிறுவனம், சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செய்து தருவதாக உறுதியளித்த எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், 'பெப்சி' நிறுவனத்தை துவக்க, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, அந்நிறுவனம் தமிழகத்திற்குள் வந்தது.

கைவிடப்பட்டது:

துவக்கத்தில், நெல்லை மாவட்டம், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டனர். ஆனால், அங்கு தி.மு.க.,வின் எதிர்ப்பு காரணமாக, அந்த திட்டத்தை கைவிட்டனர்.தற்போது சத்தமில்லாமல், கங்கைகொண்டானில், 36 ஏக்கர் வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு, 1,000 லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும், 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர். அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரை, 37 பைசாவுக்கு வாங்கி, ஒரு லிட்டர், 'அக்வாபினா' குடிநீர் பாட்டிலை, 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஒரு ஏக்கருக்கு, ஏழு லட்சம் ரூபாய் வீதம், 36 ஏக்கர், 95 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பெரும்படையார் கூறுகையில், ''ஏற்கனவே, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின் விவசாயம் பொய்த்துவிட்டது. குடிநீருக்காக, மக்கள் குடங்களை ஏந்தி அலைகின்றனர். 'கோக்' ஆலைக்கு அனுமதியளித்த போல, 'பெப்சி' நிறுவனத்தை துவக்க விட மாட்டோம். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்,'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., (எம்.எல்.,) மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ரமேஷ் கூறுகையில், ''இந்த ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மழுப்புகின்றனர். குளிர்பான ஆலை என்ற பெயரில், குடிநீர் பாட்டில் ஆலையை துவக்க உள்ளனர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்,'' என்றார்.

கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் பிரபாகரன் கூறியதாவது:இந்த திட்டத்தால், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும். 'கோக், பெப்சி' நிறுவனங்களுக்கு போகத்தான் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படும் நிலை ஏற்படும்.மேலும், 'கோக்' நிறுவனம் தண்ணீருக்காக செலுத்தவேண்டிய குறைந்த கட்டணத்தை கூட செலுத்தாமல் மோசடி செய்து வருவது குறித்து புகார் அளித்துள்ளோம். எனவே, கங்கைகொண்டானில் மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மற்ற தொழில்களுக்கு அனுமதியளிக்கலாமே தவிர, இத்தகைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது.இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர்
Engr Sulthan

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.