“வேர்கள்” நூலின் மூல நூலான “ரூட்ஸ்” (Roots) என்ற ஆங்கில நாவலுக்கான வரலாறு மிக்க சுவாரஸ்யமானது. அதனை அறிய வேண்டுமென்றால் நாவலாசிரியரின் வரலாறை கொஞ்சம் அலசினால்தான் பொருத்தமாக இருக்கும்.
அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர்தான் இந்த நூலை எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரியும். அவர் 1921ம் ஆண்டு, ஆகஸ்ட் 11 அன்று நியூயார்க்கில் இதாகா என்ற இடத்தில் சிமோன் ஹேலி-பெர்த்தா ஜார்ஜ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
இளவயதில் கடலோரக் காவற்படையில் பணிபுரிந்தார். பின்னர் பத்திரிகைத்துறைக்கு வந்தார். பின்னர் கைதேர்ந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest), பிளேபாய் (Playboy) ஆகிய பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றினார்.
மால்கம் எக்ஸின் வரலாறை எழுதுவதற்கு இவர் பணிக்கப்பட்டார். மால்கம் எக்ஸ் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் மிக்க பரபரப்பாக இருந்ததால் அலெக்ஸ் ஹேலியிடம் ஓர் இடத்தில் அமர்ந்து பேட்டி கொடுப்பதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கவில்லை. எனவே மால்கம் எக்ஸ் செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியும் சென்றார்.
|
மால்கம் எக்ஸ் (வலது) தன் வாழ்க்கை வரலாறைச் சொல்லச் சொல்ல அலெக்ஸ் ஹேலி அதனை டைப் அடித்து பதிவு செய்கிறார் |
அந்தப் பயணத்தின்போது காரில் வைத்து மால்கம் எக்ஸிடம் இவர் பேட்டியெடுப்பார். இப்படி 1963 முதல் 1965ம் ஆண்டு பிப்ரவரியில் நியூயார்க்கில் அவுடுபோன் அரங்கத்தில் வைத்து மால்கம் எக்ஸ் சுட்டுக்கொல்லப்படும் வரை ஹேலி அவரிடம் எடுத்த 50க்கும் மேற்பட்ட ஆழமான பேட்டிகளின் தொகுப்புதான் “மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு” (The Autobiography of Malcolm X) என்ற நூல்.
இதுதான் அலெக்ஸ் ஹேலியின் முதல் நூல். இந்நூல் 1965ம் ஆண்டு வெளியாகி, விற்பனையில் சாதனை படைத்தது. முதல் நூலிலேயே அலெக்ஸ் ஹேலி மிகப் பிரபலமானார். 1966ம் ஆண்டு இந்த நூலுக்காக அலெக்ஸ் ஹேலி அனிஸ்ஃபீல்டு-வோல்ஃப் புத்தக விருது (Anisfield-Wolf Book Award) வாங்கினார்.
|
மாலிக் அல் ஷாபாஸ் என்ற மால்கம் எக்ஸ் |
1977 வரை இது 60 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை கூறுகிறது. 1998ம் ஆண்டு டைம் என்ற ஆங்கிலப் பத்திரிகை இந்நூல் இருபதாம் நூற்றாண்டின் அதிக பிரசித்தி பெற்ற, செல்வாக்கு பெற்ற நூல் என்று பறைசாற்றியது.
இதனை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் ரூட்ஸ் நாவலின் துவக்கப் புள்ளி இங்கேதான் ஆராம்பாகிறது. மால்கம் எக்ஸ் பல பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகளில் உரையாற்ற அழைக்கப்பட்டார். அங்கே ஆற்றிய உரைகளிலெல்லாம் மால்கம் எக்ஸ் சொன்ன ஒரு வரலாற்று உண்மைதான் அலெக |