Tamil Islamic Media ::: PRINT
பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?

பல்க் நாட்டின் அரசராக இருந்து பின்பு ஆத்மாஞான பாதையில் வாழ்ந்த ஹஜரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் ஒரு குழுவினர் சென்று பொரியார் அவர்களே, இறைவன் எவ்விஷயத்திற்கும் என்னிடமே பிராத்தனை புரியுங்கள் நான் உங்களின் பிராத்தனைகளை நிறைவேற்றுகிறோன் என்று திருமறையில் கூறுகிறான். அதற்கேற்ப எங்களின் கஷ்டங்களைப் போக்க பாவங்களை மன்னிக்க ,நாங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனிடம் துஆக் கேட்கிறோம், ஆனால் அதை ஏற்று அல்லாஹ் எங்களுக்கு அருள் புரியவில்லையே.....? என்ன காரணம்  என வினவினார்கள். அப்போது ஹஜரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள், குழுவினர்களே! உங்களின் இதயம் பத்து வகையான காரணங்களால் ஒளி மங்கி இருளடைந்துவிட்டது. அத்தகைய இருளடைந்த இதயத்திலிருந்து எழும் பிராத்தனைகளை இறைவனின் சமுகம் ஏற்பதில்லை எனப் பதிலளித்தார்கள்.

உடனே வந்திருந்தவர்கள் பதறிப்போய் அந்த பத்து வித காரணங்களையும் பகருமாறு பணிவுன்புடன் கேட்டு நின்றனர். நேயர்களே உங்கள் நெஞ்சங்களிலும் அந்தப் பத்துவித காரணங்களை அறியும் ஆசை அலைமோதுகிறதல்லவா இதோ!....

வந்திருந்த குழுவினரை நோக்கி கூறினார்கள்;

1, இறைவன் ஒருவன்தான் என நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால் அவனின் ஆணைகளை நிறைவேற்றாமல் மறந்திருக்கிறீர்கள்.

2, அல்லாஹ்வினால் அருளப்பெற்ற தித்திக்கும் திருமறையை தினமும் ஒதுவதில் சாதனை காட்டுகிறீர்கள்,ஆனால் அதிலுள்ள போதனைப்படி நடக்காமலிருக்கிறீர்கள்.

3, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரில் ஆழமான அன்பிருப்பதாக வாதிக்கின்றீர்கள். ஆனால் அவர்கள் சொன்னதை செயலில் காட்டாமலிருக்கிறீ ர்கள்.

4, ஷைத்தான் உங்களின் பகைவனென்று சொல்கிறீர்கள், ஆனால் அனுதினமும் அவனையே பின்பற்றி நடக்கிறீர்கள்.

5, சொர்க்கத்தை அடைய ஆசிக்கிறீர்கள், ஆனால் அதை அடைவதற்கான நற்செயல்களைச் செய்ய மறுக்கிறீர்கள்.

6, நரகத்திற்கு பயப்படுவதாக பகருகிறீர்கள், ஆனால் பாவச் செயல்களை செய்வதை விட்டும் விலகாமல் இருக்கிறீர்கள்.

7, மரணம் நிகழ்வது உண்மைதான் என உறுதியுடன் உரைக்கிறீர்கள், ஆனால் அது ஏற்படுமுன் நற்செயல்களைப் புரியத் தயங்குகிறீர்கள்.

8, மற்றவர்களின் குற்றம் குறைகளைத் தேடித் திரிகிறீர்கள், உங்களின் குற்றங் குறைகளை சிந்தித்து உணரத் தவறிவிட்டீர்கள்.

9, அல்லாஹ்வினால் அளிக்கப்படும் ஆகாரங்களை உண்கிறீர்கள், ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தத் தவறிவிட்டீர்கள்.

10, உங்களில் மரணமடைந்தோரை அடக்கம் செய்கிறீர்கள், ஆனால் நீங்களும் ஒருசமயம் மரணத்தில் விழும்போது இப்படித்தான் அடக்கம் செய்யப்படுவோம் என்று பய உணர்வு கொள்ளத் தவறிவிட்டீர்கள்.

என ஹஜரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) மறுமொழி பகர்ந்தார்கள்...

இதிலிருந்து நாம் தெரிய வேண்டியவை யாதெனில் நாம் அல்லாஹுத்தஆலாவையும், ரசூல் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டிருந்தால் மட்டும் போதாது, அவர்களின் போதனைப்படி நடக்க வேண்டும். நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஷைத்தானை வீழ்த்துவதற்கும், நரகத்தைவிட்டு தப்பித்துக் கொள்வதற்கு சொர்க்கத்தை அடைவதற்கு உரிய முறையான செயல்களை செய்தாக வேண்டும். அப்போது தான் இறைவனின் அன்பும், அருளும் நம் மீது ஏற்படும்



The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.