( Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் )
‘தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்’ எட்மண்ட் பர்க்.
‘உண்மையை அறிந்த பின்னரும், உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்’ மார்டின் லூதர் கிங்.
இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன. ஆனால், இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ, மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே, பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல், அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால்தான், நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதை எந்தச் சமூகமும் மறந்து விடக்கூடாது.
‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை’ என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி, உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்தும், அநீதியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும்.
“முஸ்லிம்களே ! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமுதாயத்தினராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள், தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்.”
( குர்ஆன் 3:110 )
“நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகின்றார்களோ, உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.”
( குர்ஆன் 3:104 )
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமுதாயமே சமுதாயம் என்றும், வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன.
அநீதிகளுக்கு எதிராக நம்மால் முடிந்த அளவுக்கு போராட வேண்டும்.
‘தீமையைக் கண்டால் கைகளால் தடு ! அது முடியாத போது நாவினால் தடு ! அதுவும் முடியாத போது மனத்தளவில் தடு ! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் தமது பதவியைப் பயன்படுத்தி அநீதிகளை ஒழிக்க வேண்டும். சட்டம், நீதித்துறை, இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் உதவியோடு அநீதிகளைக் களைய வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் தொலைக்காட்சியில் உரையாற்றுதல், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல், அறிக்கை வெளியிடுதல் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக் கொள்வது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் கோழைச் செயலாகவே கரு
|