என். ராம்
குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
மோடி இப்போது எங்கு சென்றாலும் ஒரே ஓசை மயம். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற அவருடைய பிரச்சாரம் இப்போது வேகம் எடுத்திருக்கிறது. தன்னம்பிக்கை மிளிரும் அவருடைய பீடு நடையில் மிளிரும் உண்மை அதுதான்: பிரச்சாரத்தில் நன்றாகப் பேசுகிறார்; ஆனால், வாஜ்பாயின் பேச்சுக்கலைக்கு ஒப்பாகாது மோடியின் பேச்சு. அனாயாசமானதும், பல தசாப்தங்களின் பயிற்சியாலும் வந்த கலை வாஜ்பாயினுடையது. மோடிக்கென்று தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிறது, நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இளைஞர்களையும் அவர் கவர்ந்திருக்கிறார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு பதவிக்கு வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டதால், அரசியல் சந்தையில் பாரதிய ஜனதாவின் சரக்குக்கு முறுக்கேறி இருக்கிறது. சுமார் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்து காயலான்கடை கடைச்சரக்குபோல் ஆகிவிட்ட காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் களத்தில் நின்றால், எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் - வாக்குகள் கிடைக்கும் என்று அறிய கருத்துக்கணிப்பே தேவை இல்லை. சமூக பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் காட்டிய வறட்சி, ஈடு இணையில்லாமல் எல்லா மட்டங்களிலும் அது நிகழ்த்தியுள்ள ஊழல்கள் விளைவாக காங்கிரஸ் இப்போதே கடைநிலைக்கு வந்துவிட்டது.
எல்லா அரசியல் கருத்துக்கணிப்புகளுமே மோடியும் அவருடைய கட்சியும் முன்னிலை வகிப்பதாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்னிலை வகிக்கும் என்று கூறுகின்றன. பாரதிய ஜனதா தவிர சிரோமணி அகாலிதளம், சிவசேனை ஆகியவை மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இப்போது எஞ்சியிருக்கின்றன. இந்தக் கூட்டணி 190-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால், மக்களவையில் கூட்டணிக்கு 272 இடங்களுக்கு மேல் தேவை. கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதில் அதிசயம் என்ன?
பரிவாரங்களின் ஆவேச எதிர்பார்ப்பு இந்தி பேசும் மாநிலங்களிலும் சில மேற்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருத்த தொண்டர் படையும் மக்களிடையே ஆதரவும் இருக்கிறது. அந்த மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவச் சக்திகளான சங்கப் பரிவாரங்கள் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டுவிட்டன. பரிவாரங்கள் ஆவேச எதிர்பார்ப்புடன் இப்போதே முண்டாதட்ட ஆரம்பித்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்கள்தான் அரசியல் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளையும் இந்தியாவின் அடிப்படை பண்புக்கு முரணான இந்துத்துவக் கொள்கைகளையும் அமல்படுத்தும் சக்திகளாக இருப்பார்கள்.
கணக்கு எடுபடுமா? இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பன்மைச் சமூகம்; இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுமார் 17 கோடி வாழ்கிற நாடு இது. கர்நாடகம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களிலும் கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு அமைப்பு ரீதியான பலமோ ஆதரவோ இல்லை. அங்கிருப் |