நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.
மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.
நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.
அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.
ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.
எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.
அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.
நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.
இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!
அதாவது, இறந்த உடல்!
எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.
என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.
குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?
குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந் |