( கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.)
மேலும் உங்களுடைய ரப்பிடத்தில் பாவமன்னிப்புத் தேடுங்கள்.பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்)தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்.அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட தவணை வரை அழகிய சுகத்துடன் உங்களை சுகம் பெறச்செய்வான்.இன்னும் நற்செயல் உடைய ஒவ்வொருவருக்கும் மறுமையில் தன் பேரருளை வழங்குவான்.நீங்கள்(அவனைப்)புறக்கணித்தால் நிச்சயமாக நான் மாபெரும் (கியாமத்)நாளின் வேதனையை உங்களுக்கு பயப்படுகிறேன் என்றும்,
'அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது;அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்'(என்றும் நபியே!நீர் கூறுவீராக.)(அல்குர்ஆன் 11- 3,4)
உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் காணாமல் போய்விட்ட தம் ஒட்டகையின் மீது விழுவாரேயானால்(அதனை அவர் பெற்றுக்கொள்வாரேயானால்), அப்பொழுது அவர் அடைகிற மகிழ்ச்சியை விட (பன்மடங்கு)அதிகமாக தன் அடியான் தன்னிடம் தவ்பா செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.(அறிவிப்பாளர்;அனஸ் பின் மாலிக்(ரலி)நூல்;புகாரி,முஸ்லிம்)
முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில்,
நபியவர்கள் நவின்றதாக அனஸ்(ரலி)அறிவிக்கின்றார்கள்,
உங்களில் ஒருவரது வாகனம்-அதில் தான் அவருடைய உணவும்,குடிநீரும் உள்ளது-அது காணாமல் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் போது காணாமல் போன அவரது வாகனம் அவர் முன் திடீரென்று தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைவாரோ?
அதனை விட பன்மடங்கு அதிகமாக தன் அடியான் தன்னிடம் தவ்பா செய்து மீளும்போது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.
அவர் தம் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக இறைவா!நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறி விடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாக்கு தடுமாறி இவ்வாறு தவறாக கூறிவிடுகிறார். இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியை விட மிக அதிகமாக தன் அடியான் தவ்பா என்னும் பாவமன்னிப்பு கோரும்போது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபுஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;
சூரியன் மறைந்ததிலிருந்து அது மீண்டும் உதயமாகும் முன்பு (இரவில்)யாரெல்லாம் தவ்பா என்னும் பாவமன்னிப்பு தேடுகின்றனரோ?அவரின் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.(நூல்;முஸ்லிம்)
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் உமர் பின் கத்தாப்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;
(மரணத்தருவாயில்)தொண்டைக்குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை (உயிர் பிரிவதற்காக தொண்டைக்குழியில் உயிர் இழுத்துக் கொண்டிருப்பதற்கு முன்பு வரை)நிச்சயமாக அல்லாஹ் தன் அடியானின் தவ்பா என்னும் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வான்.(நூல்;திர்மிதீ)
பாவமன்னிப்பு தேடுவதில் இரு வகை உண்டு!
முதலாவது வகை;
அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் ஒருவர் மாறு செய்து பாவம் செய்திருந்தால் அவர் அதனை விட்டு மீள்வதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.
1)தாம் இதுவரை செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலும் நீங்கி விடுவது.
2)தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதமுறுவது.
3)இனிமேல் எப்போதும் அப்பாவத்தை செய்வதில்லை என்று உறுதி பேணுவது.
இரண்டாவது வகை;
மனிதர்களின் உரிமைகள் விஷயத்தில் தவறு செய்திருந்தால்,சம்பந்தப்பட்ட மனிதரிடம் மன்னிப்பு கேட்குதல்
|