(தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் - அலைபேசி : 9444272269)
இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் குன்றுகளை உடைக்கும் வெடி மருந்துகளை எவரும் மறுதலிப்பதில்லை ! அழிவுக்கு அடுப்பூதாமல், ஆக்கங்களுக்கு அக்னியாகின்ற எவையொன்றும் வரவேற்பு வாசிக்கப்படும்; அதற்கு உடன்பாடாகும் போது உனக்கும் வாழ்த்துரைக்கப்படும் ! இளைஞனே ! நீயும் ஒரு நெருப்பு தான் ! நெருப்பில்லாமல் நீராவியில்லை; நீராவியில்லாமல் உந்து சக்திகள் உடைதரிப்பதில்லை. நீ அமர்ந்திருப்பதே அரசத் தோரணை என்னும் போது – நீ நிமிர்ந்து நிலை கொள்ளத் தொடங்கி விட்டால் – அதிகார அக்னிக் குழம்பைத் துப்பும் எரிமலை கூட வேறு இருப்பிடத்தைத் தேட வேண்டியதேற்பட்டுவிடும் ! நீ அளவில் குண்டுமணிதான் ! ஆனால், தங்கத்தை நிறுக்க உனையன்றி தரணியில் எவர்? நீ அற்பக் குண்டூசிதான். ஆனால், சேவகப் பட்டியலை உனையன்றி சேகரித்து வைக்க வல்லவர் எவர்? இளைஞனே ! நீ கைகட்டிக் கொண்டிருந்தால், முன்னேற்றங்கள் கால் கட்டிக் கொண்டிருக்க நேரும்; நீ வெள்ளோட்டங்கள் கொண்டு விட்டால், வெற்றியெலாம் – உன் மீதே கண்ணோட்டங் கொண்டு விடும் ! துணிவு கொள் வருகையாளனுக்குத்தான் வரவேற்பு மாலையே அன்றி – பயந்து ஒதுங்குபவனுக்கன்று உயர மேடைகள் ! எனினும் – நீ படைப்பது பசிக்குச் சோறானால், எவரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை நீ உடைப்பது அடுப்புக்கு விறகானால், எவரது உத்தரவுக்காகவும் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை ! நீ அடைப்பது, அணையின் விரிசலென்றால் எத்தகைய தனி ஆணைக்காகவும் தாமதிக்க வேண்டியதில்லை ! ஆனால், நீ கொளுத்துவது விளக்குத் திரியேயென்றாலும் கூரை வீடுகள் அக்கம்பக்கம் இருப்பதைக் கவனங் கொள் ! நீ தீட்டுவது அரிவாள்மனையேயென்றாலும், விபரீத விளையாட்டுப் பிள்ளைகளும் உடன் உள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள் ! நீ குடிப்பது பாலே என்றாலும், நிற்பது பனைமரத்து நிழலாக இல்லாமல் பார்த்துக் கொள் ! உன் பூர்ணிமைப் பொழுதுகளில் நீ பூக்களைப் பறித்தாலும், வேர்களைப் பறிக்கும் வேலையென்பதாக – உன் நிம்மதிகளைக் கால்கோலவிடாமல் கால் தடுக்கி விடலாம் ! எனவே, உன் சுட்டுவிரல் நிழல் கூட துப்பாக்கி முனையாகத் தப்பர்த்தம் கொண்டுவிட நீ காரணமாகி விடாதே ! இளைஞனே ! வயிற்றுப் பாட்டுக்கே நீ வாய்ப்பாடு பாடிக் கொண்டிருக்கும் போது – வாழ்க்கைப் பயன்பாட்டில் உன் முயற்சி சிறகுகளின் அவசிய விரிவைக் கூட அனாவசியத் தடுப்புகள் ; தடைகள் ! இந்தப் புகை மூட்டங்களுக்கிடையேயும் நீ, தன்னந்தனியாய் – உன் தண் முகத்தைக் காட்ட வேண்டிய தலையெழுத்துனக்கு ! விரக்திக் கண்ணிவெடிகள் உன் வீதியெங்கும் தான்; எனினும் – வெற்றிக் கன்னிகளின் விழிநோக்குகளுக்காக – உன் ஆண்மைத் தோள்களை இன்னும் அகல விரி ! உன் கைகளே உனக்குக் கொடிக்கம்பம் ! உன் கண்களே நள்ளிரவின் தெருவிளக்கு ! (இளைஞனே ! எனும் நூலிலிருந்து ) |