கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்
கல்பின் கனியே கண்ணின் மணியே யா ரசூலல்லாஹ் யா ரசூலல்லாஹ் !
*
உம்மைப் புகழ எம்மைத் தடுப்பார் யார் ? யா ரசூலல்லாஹ் யா ரசூலல்லாஹ் !
*
விழியாய்த் தாங்கள் வாராதிருந்தால் யா ரசூலல்லாஹ் ஒளியாம் இறையை உணர்ந்திருப்போமோ யா ரசூலல்லாஹ் !
*
கை விரலாட்டிக் கண்ணைக் குத்துவோர் யா ரசூலல்லாஹ் நன்றி பாராட்டும் நடைமுறை தடுப்பதோ யா ரசூலல்லாஹ் !
தன் சுமை குறைத்ததற்காகத் தணல் நரகும் புகழுமே யா ரசூலல்லாஹ் !
*
சகலமும் படைத்தோனே சலவாத் சொல்கையில் யா ரசூலல்லாஹ் சர்வதேச உண்டியல்கள் சலசலப்பதேனோ யா ரசூலல்லாஹ் !
*
சக்கராத் ஹாலிலும் எம் சமூகத்துக்காக யா ரசூலல்லாஹ் தௌபா செய்த தனிப்பேரருளே யா ரசூலல்லாஹ்
*
கொளமையே இங்குக் காட்டிக் கொடுப்போர் யா ரசூலல்லாஹ் கண்ணிய மொவ்லிதுக்குக் கதவை அடைப்பதோ யா ரசூலல்லாஹ் !
*
கண்ணாடியென முன்னோர்கள் வரக் கண்ணாகவே வந்தும் யா ரசூலல்லாஹ் முன்னை இறை நேசர்தம்மை கண்ணியம் செய்தீர் யா ரசூலல்லாஹ் !
*
சமரச சன்மார்க்க தர்காக்கள் நோக்கி யா ரசூலல்லாஹ் எச்சில் துப்பினால் எழுஞாயிறு அணையிமோ யா ரசூலல்லாஹ் !
*
பிறந்த பெண்சிசு மண்ணில் புதைத்துச் சொர்கத்துக்கு ஏற்றுமதி செய்த பூமியில் யா ரசூலல்லாஹ் சொர்க்கத்தைத் தாயின் காலடிக்குக் கீழே இறக்குமதி செய்த புரட்சியாளரே யா ரசூலல்லாஹ் !
*
மார்க்கத் தாயின் மார்பில் வாள் பாய்ச்சிவிட்டு யா ரசூலல்லாஹ் புட்டிப்பால் பிள்ளைக்குப் புகட்டுவோர் உம் புகழ்பாடத் தடுக்கின்றார் யா ரசூலல்லாஹ் !
*
இருலோகத் தூதர் உம் இறுதிமூச்சு அடங்கும் வேளை யா ரசூலல்லாஹ் அணையும் விளக்கேற்ற தங்கள் வீட்டில் எண்ணெய் இல்லை யா ரசூலல்லாஹ் !
*
என்ன இல்லை இவர்கள் வீட்டில் யா ரசூலல்லாஹ் எடுத்துப் புகழ்வதைத் தடுத்திடலாமோ யா ரசூலல்லாஹ் !
*
காற்றுக்கு வலிக்குமெனக் கைவீசி நடந்ததில்லை யா ரசூலல்லாஹ் கசக்கிய கரத்திற்கும் நறுமணமூட்டிய கருணை மலரே யா ரசூலல்லாஹ் !
*
கட்டைப் பஞ்சாயத்துக் கடத்தல்கார அடிதடியார் யா ரசூலல்லாஹ் கபர்ஸ்தானிலும் பிரிவினைச் செய்தோர் கழுத்து நெரிப்பினும் தகைத்திட முடியுமோ யா ரசூலல்லாஹ் !
*
வெயிலும் தங்கும் விந்தை நிழலே யா ரசூலல்லாஹ் அடிமையின் விடுதலை ஆரம்பம் செய்தீர் யா ரசூலல்லாஹ் !
*
இளையோரைத் தூண்டி சிறையோராய் ஆக்கியோர் யா ரசூலல்லாஹ் வேதத்தினால் பேதம் ஒழித்த வேந்தர் புகழ்க் கடல் சிப்பியடக்குமோ யா ரசூலல்லாஹ் !
... நன்றி : நமது முற்றம் & ஆசிரியர் அபூஹாசிமா |