Tamil Islamic Media ::: PRINT
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.


- நன்றி மணிச்சுடர் 17-10-2008


பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., �ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான suffer வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.

ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டுதான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை.

பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம்.

பிறப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொருவருடைய மரணமும் இரணமும் நிர் ணயிக்கப்பட்டு விடுவதாக மார்க்க அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். எல்லாமும் அல்லாஹ் - இறைவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது என்றும், ஒவ்வொரு மனித வாழ்வும் அப்படித்தான் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.

ஆக, வாழ்க்கைப் பயணத்தில் என்ன வரும்? எது இன்பம் தரும்? எதனால் இன்னல் - இடைஞ்சல் - துன்பம் வரும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயணம் போக முடியாது என்பதுதான் உண்மை.

வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்! இன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயங்குவதில்லை! துன்பம் வரும் போது மயங்குவதில் அருத்தமில்லை!

சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை உரைத்துச் சென்றிருக்கிறார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் 
இன்னாது என்றலும் இலமே; �மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் 
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 
(புறநானூறு - பாடல் 192)

தமிழ் இலக்கியத்தில் மனிதனின் வாழ்க்கைத் தத்துவம் பற்றிய இந்தப் பாடல் மிகமிக அற்புதமானது. இதற்கு விளக்கமும் - விரிவுரையும் எழுதிப் பலப்பல நூற்கள் படைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும், இந்தத் தமிழ் நெறியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள இயல்பான உறவுகளும், தொடர்பும் வெளிப்படும். அறிஞர் பெருமக்கள் இந்த ஒப்புநோக்கு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பாடலுக்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமது �சங்கத் தமிழ் என்னும் நூலில் அருமையான விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டி யது.

1951இல் முதன் முதலில் இந்தப் பாடலை பற்றிக் கேட்டதை இப்போது நினைக்கும்போது, ஒரு வியப்பு தோன்றுகிறது.

திருச்சி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் - பீமநகர் பென்ஷனர் தெரு வீட்டில் இருந்து பாலக்கரை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் பழக்கம்; பாலக்கரையில் தி.மு.க.வில் உள்ள ஷரீப் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் படிப்பகம் நடத்தி வந்தார்; அங்கே முரசொலி பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; என் காதுகளில் விழுகிறது; ஒருவர் படிக்கிறார்.

யாது மூரே யாவரும் கேளீர்

இதைக் கேட்கும் மற்றொருவர் கேட்கிறார் மூரே கத்தோ கியாரே (மூரே என்றால் என்ன?) இந்த உரையாடல் வழிப்போக்கனாகிய என் காதுகளில் படுகிறது!

சங்கப் பாடலின் இந்த வரியை முதன் முதலில் ஒரு பீடித் தொழிலாளி படிக்கக் கேட்ட எனக்கு, பிற்காலத்தில் அந்தப் பாடலை பற்றி ஆய்வு செய்வதற்கு அதுவே காரணமாக அமைந்தது.

கலைஞரின் பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொண்ட சங்கப் பாடலுக்கு, இன்றைய தினம் கலைஞர் கூறும் விளக்கத்தோடு, இஸ்லாமிய விளக்கத்தையும் அதற்கு இணைத்துக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் கற்பனை செய்யவில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்த சம்பவம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்கு வந்தது? இப்படிச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் பயன்படு கிறது.

வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றிலும் எத்துணை அளவு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கும் போது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுகிறது. இறை நம்பிக்கை பலப்படுகிறது.!

ஓர் அணுவுக்குள் எத்தனை அண்டங்கள்! ஆகா, இறைவனின் அற்புதம் என்னே!

இஸ்லாமிய மார்க்கம் தரும் விளக்கத்தின்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னதாக நிர்ண யிக்கப்பட்டபடி ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டி ருக்கிறது என்று நம்புகிறோம்.

இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.

மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.

இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.

இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.

இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.

வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.

எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த �தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.

இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.