- சேயன் இபுறாகிம், கடையநல்லூர்
'இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹன் மூபினா'
கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு பை இத்தகைய ஒரு தோற்றப்பொலிவுடன் காட்சி அளித்தவர் இரவணசமுத்திரம் மர்ஹூம் எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் அவர்கள். அது அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, சமுதாயக் கூட்டமாக இருந்தாலும் சரி, இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் சரி அவரது தோற்றப்பொலிவில் மாற்றம் இருக்காது.
“சொல்லின் செல்வர்” என்று காயிதெ மில்லத் அவர்களாலும் ‘செந்தமிழ்த் தேனருவி’ என டாக்டர் கலைஞர் அவர்களாலும் பாராட்டப்பட்ட இரவணசமுத்திரம் பீர் முஹம்மது சாஹிப் அவர்கள் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சென்று தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் புகழ் பரப்பியவர். இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்தியம்பியவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகளை நயம்படி உரைத்தவர்.
எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினாலும் அது பிற சமயத்தார் நடத்தும் நிகழ்ச்சியானாலும் சரி ‘இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹன் மூபினா (நிச்சயமாக நாம் உங்களுக்கு வெற்றியைத் தந்தோம்) என்ற இறை வசனத்துடன் தான் தனது உரையைத் தொடங்குவார். அதைத் தொடர்ந்து ‘எல்லாம் வல்ல அல்லாஹ்வை மொழி, மெய் ஆத்மாவால் வணங்கிப் பணிந்து நற்குணத்தின் தாயகம் நானிலத்தின் நாயகம் எம் பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு முன் உலகத்தில் தோன்றிய எண்ணற்ற நபிமார்களையும், அவர் தம் அருமைத் தோழர்களையும் இறை நேசச் செல்வர்களையும், இறையருள் பெற்ற அடியார்களையும், மெய்நிலை கண்ட ஞானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரஹ்) அவர்களையும் போற்றிப் புகழ்ந்து அவர்கள் தம் அனைவருடைய ஆத்ம் ஆசியையும் வேண்டிப் பெற்றவனாக என் உரையைத் துவக்குகிறேன்’ என்பார்.
பொது நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனைப் பற்றி கூறும் போதெல்லாம் ‘காலத்தால் மாறாத – காலத்தின் கோலத்தால் சிதையாத காலத்துக்கும், கருத்துக்கும் ஏற்ற ஞானப் பெரும் கருவூலமாம் திருக்குர்ஆன்’ என்று சொல்வதும் அவரது வழக்கமாகும். உச்ச தொனியில் அழகிய தழில் ஆற்றொழுக்கு போன்ற நடையில் மணிக்கணக்கில் மேடைகளில் பேசும் ஆற்றல் அவர் பெற்றிருந்தார். அவரது உரையில் திருக்குர்ஆன் வசனங்கள் இருக்கும் – நபிகளாரின் பொன்மொழிகள் இருக்கும் – அரசியல் கருத்துக்கள் இருக்கும் – புள்ளி விவரங்கள் இருக்கும். ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் அவரது உரை அமைந்திருக்கும். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பிற பேச்சாளர்கள் உணர்ச்சிகரமான கருத்தாழமிக்க கருத்துக்களை வெளியிடும் போது ‘ஆஹா ஆஹா’ என்று குதூகலித்துக் குரல் எழுப்புவது அவரது வாடிக்கையாகும். ஒரு அரை நூற்றாண்டுகாலம் அவர் தமிழக மேடைகளில் வலம் வந்தார். தனது வசீகரமான கருத்துக்களால் மக்களின் மனம் கவர்ந்தார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, அவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். (தி.மு.க. கூட்டணி) தனது அண்டை தொகுதியான சேரன்மகாதேவியில் அப்போதைய சபாநாயகர் திரு. செவலபாண்டியன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், திரு. எஸ். ரத்தினவேல் பாண்டியன் தி.மு.க. வின் வேட்பாளராகவும் களத்தில் நின்றனர்.
தனது தொகுதியின் தேர்தல் பிரசாரத்திற்கு இடையிலேயே தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக சேரன் |