Tamil Islamic Media ::: PRINT
உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

பொதுவாக சோதனை என்பது மனித வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத, பிரிக்கப்படாத ஒன்று. அந்த சோதனைக்கு பின் தான் மனிதன் முடிவு செய்யப்படுகிறான், அதைக்கொண்டு அவன் வளர்ந்திருக்கிறானா? அல்லது தாழ்ந்திருக்கிறானா? இறைவனின் வேதவசனத்தைப்பருங்கள்

“அவன் தான் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான், உங்களில் யார் செயலால் சிறந்தவர் என்று சோதிப்பதற்க்காக”

இதில் இறைவன் வாழ்வையும், மரணத்தையும் மனிதனின் சோதனைக்காவுள்ள ஒன்று என்று கூறுகிறான்.சோதனைகள் இல்லை என்றால் மனித வாழ்வு சுவைக்காது. இன்னும் இந்த ஆயத்தின் விளக்கத்தில் நமக்கு வேத வியாக்கியானிகள் தருகிற தகவல் முதலில் இறைவன் மரணம் என்று பின்பு வாழ்க்கையை படைத்ததாக குறிப்பிடுகிறான். வாழ்க்கை என்பது சோதனைக்கும், மரணம் என்பது அந்த சோதனையில் நாம் எப்படி செயல்பட்டோம் அதனால் என்ன பெறப்போகிறோம் என்பதற்கும்.

இன்னும் சிலர் மனிதனின் வாழ்விற்கு முன் அவன் கருவில் இருக்கும் போது மரணமும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்தவும், என்று பல செய்திகளை பதிவு செய்கின்றனர். பிறப்பு என்று ஆகிவிட்டால் எது நடக்கிறதோ இல்லையோ இறப்பு என்பது நிச்சயமாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்த சோதனைகள் தான் மனிதன் இறைவனை நெருங்குவதற்க்கான சாதனமாக உள்ளது. ஆனால் திடீரென மனிதன் சோதனைக்குள்ளக்கப்படும் போது, அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் அப்படியே திகைத்துவிடுகிறான். இறைவன் சில மனிதர்களை உள்ளாக்குகிற சோதனைக்களைக்குறித்து பேசும்போது

”நாம் அவர்களை அழகிய சோதனையாக சோதித்தோம்" என்று கூறுகிறான்! அது என்ன சோதனையில் "அழகு" வேறு? இதற்கு முபஸ்ஸிரீன்களின் தரும் விளக்கம் சோதனையின் முடிவு நல்லதாகவே அமையும்.

மனிதன் என்றால் யார் என்பது குறித்து குர் ஆன் கொடுக்கும் விளக்கம் நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான் அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்; ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.(70:19,20,21)

எதாவது ஒன்று அவனுக்கு நடந்து விட்டால் பதற ஆரம்பிக்கிறான். அவன் பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், சிறுவனும், வயோதிகனும் எல்லாம் இந்த நிலையில் ஒன்றுதான். அது போன்று நன்மைகிடைத்து விட்டால் நம்வாழ்வை விட்டு அவை ஒரு காலமும் பிரியக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுகிறான்.

பல வேலை இவன் பயந்த கெடுதிகளே இவனுக்கு நன்மையாகிப்போகிறது, பலவேலை இவன் நன்மை என்று தடுத்து வைத்திருந்தவை இவனுக்கு எதிராகிப்போகிறது. அந்தோ இந்த மனிதனின் அவசரகார நிலை என்னோ!

எதாவது கஷ்டம் ஒன்று ஒரு முஃமினுக்கு நிகழ்ந்தால் அவனின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து குர் ஆன் கூறும் வழிமுறை:

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.(2:155)

முஃமினுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டால் உடன் அவர் "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்" என்று சொல்லவேண்டும்.

ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக சென்றிருந்தேன், அப்பொழுது அங்கு ஒரு கண்ணாடிப்பாத்திரம் வீட்டுக்காரரின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து  உடைந்துவிட்டது. உடன் பழக்கதோஷத்தில் நான் இன்னாலில்லாஹி என்று கூறினேன். அவ்வளவு தான் அந்த வீட்டிலிருந்தவர்கள் பதறிவிட்டார்கள்.  என்ன இப்படி கூறிவிட்டீர்கள்! இது மெளத் வீட்டில் சொல்லப்படுகிற ஒன்று அதை ஏன் இங்கு கூறினீர்கள் என்பது தான் அவர்களின் பதற்றத்திருக்கு காரணம்.

உடைந்த கண்ணாடி குவளையைவிட உடையாத என் வார்த்தைகள் அவர்களை கீறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இது ஒரு இடத்தில் நடந்த சம்பவம். ஆனால், இது தான் பலரின் மனோநிலை. மெளத் நடந்தால் மட்டுமெ இன்னாலில்லாஹ் என்று கூற வேண்டும் என்று எங்கும் இல்லை.துன்பம் நடந்தால் என்று தான் வந்துள்ளது, அதற்கு அளவுகோல்கள் இல்லை. ஒரு சிறு வருத்தமோ அல்லது ஒரு பெரு வருத்தமோ எது நடந்து விட்டாலும் உடனே இதை குர்ஆன் கூறச்சொல்கிறது.

இடுக்கண் வருங்கால் நகுக என்பது நம் தமிழ் வட்டார வழக்கு (குறள்) நமக்கு ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால் சிரிக்கவேண்டும் என்பது தான் இதன் அர்த்தம். உள்ளங்கள் உடைந்து இருக்கும் போது உதடுகளால் மட்டும் எப்படி சிரிக்க முடியும். இது உளவியலுக்கு உவக்காத ஒரு செய்தி.

ஆனால், இறைவன் தருகிற மருந்திருக்கிறதே “நாம் இறைவனுக்கே, அவன் பக்கமே நாம் மீளுவோம்” என்பது கொண்டு தற்கால மனோநிலைக்கும் மருந்து, இதை கூறிய பின் இறைவன் தான் இதை தந்தான் என்ற மனதோடு அடுத்துள்ள நிலைகளை கவனமாக கவனிக்கசென்றுவிடுகிறான்.

ஏனெனில் இது வெறும் வார்த்தைகளின் வெளிப்பாடு அன்று மாறாக இது ஒரு மனோநிலை வெளிப்பாட்டின் இரகசிய செய்தி. இந்த வசனம் ஸாபிர்கள் என்றால் யார்? என்பதற்கு விளக்கமாக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வழக்கில் இருப்பது போன்று பொறுமையாளர்கள் (ஸாபிர்கள்) என்று சொன்னால் மிக அமைதியானவர். எந்நேரமும் அகிம்சா கொள்ளைகளை மேற்கொண்டிருப்பவர் என்பது தான் நம் பொது சிந்தனை. ஆனால், குர்ஆனிய பாஷையில் போர்களத்தில் நூறு பேரை ஒரு நேரத்தில் வீழ்த்தக்கூடியவருக்கு ஸாபிர் (பொறுமையாளர் என்று பெயர்). இப்பொழுது இந்த வசனத்தை பார்க்கும் போது மிக தெளிவாக விளங்கும், அந்த ஸாபிராக இருக்கிற மனோநிலையப் பெற்றுத்தருவதே இந்த வார்த்தை தான்.

இந்த நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வரலாற்றுப்பக்கங்களிருந்து இது குறித்த சில தகவல்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இந்த இடத்திற்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். ஒரு முறை உம்மு ஸலமாவின் கணவர் அபூ ஸலமா தன் மனைவியிடம் கூறினார். நான் இன்று நபி பெருமானிடமிருந்து ஒரு புதிய செய்தியை கேட்டேன் ஆச்சிரியமாக இருந்தது. எந்த ஒரு அடியானும் ஒரு சோதனையினால் சோதிக்கப்பட்டு அவன் ”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி அதன் பின் ”அல்லாஹும்ம ஆஜிர்னி ஃபி முசிபத்தி வக்லும்லி ஹைரம் மின்ஹா” என்று கூறினால் அல்லாஹ் அவரின் சோதனையிலிருந்து அவருக்கு ஒரு அழகிய வழியைக் காட்டி நல்ல முடிவுகளையும் அதன் பின் தருகிறான். து ஆவின் பொருள் : யா அல்லாஹ் என் சோதனையில் எனக்கு நற்கூலியைத்தருவாயாக / என்னை பாதுகாப்பாயாக ! இன்னும் அதனின் சிறந்த பகரத்தை எனக்கு தருவாயாக.

இந்த து ஆவை நான் கேட்டு மனனம் செய்து கொண்டேன். இந்த துஆவை பயன்படுத்தும் நேரமும் எனக்கு வந்தது. அபூஸலமாவின் இறப்புச்செய்தி என்னை வந்தடைந்தது. அந்த துஆ என் உள்ளத்தில் நிழலாடியது. நான் அந்த துஆ கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் என் மனமோ இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தது அபூ ஸலமாவை விட வேறு எந்த ஒரு நல்ல பகரம் உனக்கு எங்கே கிடைக்கப்போகிறது ஆனால் நான் என் துஆவை விடவில்லை.

திடீரென அபூபகர் (ரலி) அவர்கள் என்னை திருமணம் முடித்துக்கொள்வதாக சொல்லி அனுப்பினார்கள். நான் வேண்டாம் என்று மறுப்பு சொல்லி அனுப்பிவிட்டேன். அதன் பின் நபிபெருமான் அவர்கள் என்னை திருமணம் முடித்துக்கொளவதாக சொல்லி அனுப்பினார்கள். நான் அதன் பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை திருமணம் முடித்தேன். அபூ ஸலமாவை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, இன்னும் அவரை விட சிறப்பானவர்களே.

நாம் எல்லோருடைய வாழ்விலும் இது போன்ற தருணங்கள் கடந்திருக்கலாம் அல்லது கடக்க இருக்கலாம். அப்படி துன்பமான சூழல்கள் ஏற்படும்போது அழுது புலம்பி உலகமே இருண்டுவிட்டது போன்று வெறுமையான மனோநிலை ஏற்படுத்தாமல். நபி வழியை நம் வழியக்குவோம்

ஆறாதரணங்களை இறைவன் புறம் சாட்டிவிட்டு அற்புதமான அன்பளிப்பை நமதாக்குவோம். சம்பலை தட்டி எழும் பினிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுவோம். நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நமக்கு வரும் துன்பங்களை வென்றேடுபோமாக.

- பேரா. இஸ்மாயில் ஹஸனீ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.