உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரவு உணவு வைக்கப்பட்டு அத்துடன் தொழுகைக்கான இகாமத்தும் சொல்லப்பட்டால் முதலில் இரவு உணவை முடித்துக்கொள்ளுங்கள்.
படைப்பை குறித்து இறைவன் குர்ஆனில் இப்படிக்குறிப்பிடுகின்றான் “ உலகில் உள்ள பொருட்களை படைத்தது மனிதனுக்காக” “ மனிதனைப்படைத்தது என்னை வணங்குவதற்காக” இறைவனால் வணங்குவதற்கெண்றே படைக்கப்பட்ட மனித குலம், தன்னை எப்படி வணங்கவேண்டும் என்ற முறைகளையும் நபியின் மூலமாக சொல்லிக்கொடுத்தான்
தொழுகை என்பது இறைவணக்கதில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. இது விதியாக்கப்பட்ட கடமைகளில் முதலாவதானதாகும். இன்னும் இது இஸ்லாமிய ஆன்மீகத்தின் அடிப்படை செய்தியாகும். இப்படி கடமையாக்கப்பட்ட தொழுகையை ஒரு முஸ்லிம் எல்லா நிலையிலும் கடைபிடிக்க வலியுறுத்துகிறது.(நோயாளியாக இருப்பினும் சரியே) அல்லது அவர் போரில் இருப்பினும் அது கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கென்ற உள்ள முறைகளையும் இஸ்லாம் கற்றுத்தருகிறது. கல்வி, செல்வம், உடல்வலிமை போன்ற அனைத்து நிலைகளையும் தாண்டி இது கடமையாக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட தொழுகைக்குள் ஒரு மனிதன் நுழைய முற்படுகிற போது உள்ள மனித உளவியல் குறித்து இந்த ஹதீஸ் பேசுகிறது. முஸ்லிம் ஷரீபில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
“ உணவு வந்தவுடன் தொழுகை இல்லை, அது போன்று மலம், சிறுநீரை அடக்கிக்கொண்டும் தொழுகையில்லை”
என்ன ஒரு அற்புதமான செய்தியை நபி அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அரசர்களுக்கொள்ளாம் அரசனான ரப்புல் ஆலமீன் முன்னால் ஒரு மனிதன் நிற்க முற்படுகிறபோது அவனுக்கே உரிய இயற்கை குறைகளான பசி, தாகம், இயற்கை உபாதைகள் இன்னும் மனிதஉணர்வுகள் (கோபம், காமம்) போன்ற செய்திகளை விட்டு அவன் முழுமையாக நிறைவு பெற்றிருக்கவேண்டும்.
ஏனெனில், தொழுகை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கு இடையில் உள்ள ஒரு அற்புத சம்பாஷனை. அந்த அழகிய சம்பாஷனை நிகழ்கிற போது மனிதனின் இந்த குறைகள் அவனை இறைநினைவை மறக்கடிக்க கூடிய அளவில் ஆகிவிடக்கூடாது என்பதில் இஸ்லாம் அதிகமாகவே கவனம் செலுத்துகிறது.
ஆகையால் தான் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதனின் மனதிற்கு உகந்த உணவு அவன் முன்னால் வைக்கப்பட்டு தொழுகைக்கான அழைப்பும் வந்து விட்டால், அவன் முதலில் சாப்பிட்டு விட்டு பின்பு தொழுகையை நிறைவு செய்யட்டும். ஏனெனில், அதில் தான் அவனின் மனஓர்மை ( Concentration) இருக்கிறது. ஆகையால், இனி எந்த விஷயம் மனஓர்மையை தூரமாக்குமோ அந்த விஷயங்களில் கவனம் செலுத்தி நம் தொழுகைகளை முழுமையானதாக ஆக்குவோமாக.
- அபூ புஷ்ரா ஹஸனி |