மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!
விகடன் டீம், பிரேம் குமார் எஸ்.கே.
8 - 10 minutes
மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள்.
Published:Today at 11 AMUpdated:Today at 11 AM
மான்சா மூசா
மான்சா மூசா
கௌதம் அதானியும் முகேஷ் அம்பானியும் ஒரு முக்கியமான ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது அம்பானியை முந்திவிட்டார் அதானி. இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை, கடந்த 13 ஆண்டுகளாக வெளியிட்டுவருகிறது ஹுருன் இந்தியா என்ற நிறுவனம். இதன்படி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் கடந்த ஆண்டு இருந்த முகேஷ் அம்பானியைக் கீழே இறக்கிவிட்டு அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் கௌதம் அதானி. அவருக்கும் அம்பானிக்குமான சொத்து மதிப்பு வித்தியாசமே ரூ.1,47,100 கோடி ரூபாய்.
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் சொத்துக்கணக்கை மதிப்பிட்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி கணக்கிட்டு வெளியிடுவார்கள். தொழில் தொடங்குவதையும், நிறுவனங்களை உருவாக்கி வளர்ப்பதையும் தங்கள் ஆய்வுகள் மூலம் ஊக்கப்படுத்துவதே இந்தப் பட்டியலை வெளியிடுவதன் நோக்கம்.
2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியல் பல சுவாரசியமான விஷயங்களைத் தருகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் அதிகரித்துவருகிறார்கள், அவர்களிடம் குவியும் பணமும் அதிகமாகியிருக்கிறது.
இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
சரி... மனித குலத்தின் மொத்த வரலாற்றிலும் இவர்கள்தான் பணக்காரர்களா? என்றால், அதில் போட்டிக்கு வருகிறார் 14 ஆம் நூற்றாண்டின் மேற்கு ஆப்பிரிக் அரசராக இருந்த மான்சா மூசா.
மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள்.
2012 -ம் ஆண்டில் செலிபிரிட்டி நெட் ஒர்த் எனும் அமெரிக்க இணையதளம் மூசாவின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் என மதிப்பிட்டது. ஆனால் பொருளாதார வரலாற்றாசிரியர்கள் அவருடைய சொத்து மதிப்பிட முடியாத அளவுக்கு அதிகம் என்கிறார்கள். அதாவது அதை கணக்கில் கூறுவது கடினம்.
`தங்க’ அரசன்
மான்சா மூசா 1280 ஆம் ஆண்டில் ஒரு அரச வம்சத்தில் பிறந்தார். அவரின் சகோதரர் மான்சா அபு பக்கர் 1312 வரை ஆட்சி செய்தார். ஒரு சாகசப் பயணத்திற்காக அபு பக்கர் ஆட்சியைத் துறந்தார்.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி அபு பக்கர் அட்லாண்டிக் கடலில் ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டார். 2000 கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், அடிமைகளுடன் அவர் பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரும் அவரது கப்பல் மற்றும் அடிமைகளும் ஒருபோதும் திரும்பவில்லை. அவர்கள் தென் அமெரிக்காவை அடைந்ததாக கருதப்பட்டாலும் அதற்கு நேரடி ஆதாரம் இல்லை.
இப்படி அபு பக்கர் விட்டுச் சென்ற ஆட்சியை மான்சா மூசா பெற்றார். அவரது ஆட்சியில் ஆப்பிரிக்காவில் இருந்த மாலி இராச்சியம் வேகமாக வளர்ந்தது. நாட்டில் இருந்த 24 நகரங்களை மூசா இணைத்தார்.
மூசாவின் ராஜ்ஜியம் அட்லாண்டிக் கடலில் இருந்து 2000 மைல்கள் வரை ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்து இருந்தது. இன்றைய நாடுகளான நைஜர், செனகல், மொரிட்டானியா, மாலி, புர்கினா, காம்பியா, கினியா - பிசாவ், கினியா, ஐவரி கோஸ்ட் அனைத்தும் அவரது சாம்ராஜ்ஜியத்தில் இடம் பெற்றன.
அவரின் நாட்டில் தங்கமும் உப்பும் பெரும் வளங்களாக இருந்தன. பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் கருத்துப்படி மூசாவின் காலத்தில் உலகில் இருந்த தங்கத்தில் பாதி அளவு மாலியிடம் இருந்தது. ஆகவே அது மூசாவிற்கு சொந்தம்.
மத்திய கால வரலாற்றில் இத்தகைய செல்வவளத்தை அதிகம் வைத்திருந்தவர் மூசாதான். அவரின் ஆட்சியில் முக்கியமான வர்த்தக மையங்கள் தங்கத்தையும் பிற பொருட்களையும் வணிகம் செய்தன. அந்த வணிகத்தின் மூலம் அவர் பெரும் செல்வத்தை பெற்றார்.
மான்சா மூசா: தங்கத்தின் தாயகம்... வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!
மெக்கா பயணம்
இப்படி தங்கத்தின் தாயகமாக மாலி இருந்தாலும் அந்தநாடு உலகில் அவ்வளவாக அறியப்படவில்லை. மூசா ஒரு பக்தியுள்ள முஸ்லீம் என்பதால் சஹாரா பாலைவனம் மற்றும் எகிப்து வழியாக மெக்காவிற்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்தார். இந்த யாத்திரைதான் இவரின் செல்வளத்தை உலகிற்கு அறியச் செய்தது.
அரசர் மூசா, ஒட்டகங்கள் பிற வண்டிகளுடன் 60,000 பேருடன் புறப்பட்டார். அதிகாரிகள், வீரர்கள், பொழுது போக்காளர்கள், வணிகர்கள், ஒட்டக ஓட்டுநர்கள் மற்றும் 12,000 அடிமைகள், உணவுக்காக செம்மறி ஆடுகள் என ஒரு பெரும் பேரணியை அவர் அழைத்துச் சென்றார். அதைப் பார்க்கும் போது ஒரு பெரும் நகரமே பாலைவனத்தில் நகர்ந்து சென்றது போல இருந்தது.
அணிவகுப்பில் அனைவரும் தங்கத்தையும் பாரசீகப் பட்டுத் துணிகளையும் அணிந்திருந்தனர். நூறு ஒட்டகங்களில் தூய தங்கம் கொண்டு செல்லப்பட்டது. பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்த இந்த பயணம் எகிப்தின் கெய்ரோ நகரத்தை அடைந்தது. அங்கு மூசாவின் செல்வ வளம் மற்றவரின் பார்வைக்கு காணக்கிடைத்தது.
கெய்ரோ தங்க விபத்து
மூசா எகிப்திற்கு வந்து போன 12 ஆண்டுகளுக்கு பிறகு அல் உமாரி என்பவர் கெய்ரோவிற்கு சென்றார். அப்போது மாலிய அரசர் மூசாவைப் பற்றி மக்கள் எப்படி உயர்வாக நினைவு கூர்ந்தார் என்பதை தெரிவித்திருக்கிறார்.
மூசா கெய்ரோவில் மூன்று மாதம் தங்கினார். தங்கத்தை ஆடம்ரமாகவும் அள்ளியும் கொடுத்தார். அதன் விளைவாக பத்தாண்டுகளாக அந்தப் பிராந்தியத்தில் தங்கத்தின் விலை குறைந்ததோடு பொருளாதாரமே சீர்குலைந்தது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஸ்மார்ட் அசெட் இணைய தளத்தின் மதிப்பீட்டின் படி மூசாவின் யாத்திரையால் மத்திய கிழக்கில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
மெக்கா சென்று திரும்பும் வழியில் மூசா எகிப்தை மீண்டும் அடைந்தார். சிலர் கூற்றுப்படி அவர் சீர்குலைந்த பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சி செய்தார். அதன்படி கடன் கொடுப்பவர்களிடம் இருந்து மிரட்டி கடன் பெற்று வட்டி கொடுத்து புழக்கத்தில் இருந்த தங்கத்தை அகற்றி பொருளாதாரத்தை மீட்க முயன்றார். சிலரோ அவர் தங்கம் தீருமளவுக்கு செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.
மூசா அளவுக்கு மீறி, செல்லும் வழியெல்லாம் மாலியின் தங்கத்தை கொடுத்ததால், ஆப்பிரிக்காவின் கதைச் சொல்லிப் பாடகர்கள் அவரைப் பற்றி பாடுவதோ, புகழ்வதோ இல்லை. மாலியின் வளத்தை மூசா வீணடித்ததாக அவர்கள் கருதினார்கள்.
மான்சா மூசா: அள்ளிக் கொடுத்த வள்ளல்
தனது புனித யாத்திரையின் போது மூசா தங்கத்தை நிறைய வீணடித்தார் என்றாலும் தாராள மனதுடன் அவர் அள்ளியும் கொடுத்திருக்கிறார். இதுதான் உலகின் கவனத்தை ஈர்த்தது.
1375 ஆம் ஆண்டில் வரையப்பட்ட கட்டலான் அட்லஸ், வரலாற்று அறிஞர்களிடையே புகழ் பெற்றது. அக்காலத்திய உலக வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு இந்த அட்லஸ் வரைபடம் முக்கியமானது. அதில் மூசா ஆட்சி செய்த மாலியின் டிம்புக்டுவின் மேல், ஆப்பிரிக்க அரசர் ஒருவர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு தங்கக் கோலை கையில் பிடித்துள்ளார். இதிலிருந்தே மூசாவின் புகழ் அக்காலத்தில் பரவியிருந்தது தெரிய வருகிறது.
தென் அமெரிக்காவில் அந்தக் காலத்தில் வளமான நகரமாக இருந்த டோராடோவா போல டிம்புக்டு நகரம் குறிப்பிடப்படுகிறது. தொலை தூரத்தில் இருந்து வந்த மக்கள் இந்நகரத்தின் வளத்தை பார்த்தை ஆச்சரியப்பட்டனர்.
19 ஆம் நூற்றிண்டில் டிம்புக்டு நகரம் தங்கப் புதையலைக் கொண்டிருப்பதான நம்பிக்கை உலகெங்கும் இருந்து வந்தது. ஐரோப்பிய தங்க வேட்டைக்காரர்கள் மற்றம் ஆய்வாளர்களின் கலங்கரை விளக்க்காக இந்நகரம் திகழ்ந்தது.
கல்வி வள்ளல்
மெக்காவிலிருந்து திரும்பிய மூசா முகமது நபியின் நேரடி வழித்தோன்றல்கள் உட்பட பல இஸ்லாமிய அறிஞர்களுடன் தாயகம் திரும்பினார். அவர்களில் ஆன்டலூசியன் கவிஞரும், கட்டிடக் கலைஞருமான அபு எஸ் ஹக் எஸ் சாஹெலியும் ஒருவர். அவர்தான் புகழ் பெற்ற டிஜிங்குரேபர் மசூதியை வடிவமைத்தார். இது மாலியின் புகழ்பெற்ற கல்வி மையமாகவும் விளங்கியது.
இதைக் கட்டியமைக்காக அந்த கவிஞருக்கு அரசர் மூசா 200 கிலோ தங்கத்தை பரிசாகக் கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு 8.2 மில்லியன் டாலர்.
இது போக அரசர் மூசா இலக்கியம், பள்ளிகள், நூலகங்கள், மசூதிகள் போன்றவற்றை உருவாக்குவதற்கும் நிதியளித்தார். தலைநகரமான டிம்புக்டு விரைவிலேயே உலக கல்வியின் மையமாக மாறியது. அங்கிருந்த சங்கூர் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக உலகெங்கும் இருந்து மக்கள் பயணம் செய்து வந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இப்படி கல்வி பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்த இந்த பணக்கார அரசர் அதற்காக பாராட்டப்படுகிறார். எனினும் அவரது கதை மேற்கு ஆப்பிரிக்காவைத் தாண்டி - இன்று வரை அதிகம் அறியப்பட்டதில்லை. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய 'வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்பட்டது' என்ற கூற்று மூசாவின் பிரபலமாகாத வரலாற்றுக்கும் பொருந்துகிறது.
மூசா தனது 57 வயதில் 1337 இல் இறந்தார். அவருக்கு பிறகு அவரது மகன்களால் பேரரசை ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முடியவில்லை. சிறிய ராஜ்ஜியங்கள் பிரிந்து பேரரசு சிதைந்து போனது. இறுதியில் ஐரோப்பியர்கள் மாலியை ஆக்கிரமித்த போது மூசாவின் பேரரசு முற்றிலும் முடிவுக்கு வந்தது.
மத்திய கால வரலாறு என்றால் அது மேற்கத்திய நாடுகளின் வரலாறாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்று அமெரிக்காவில் இருக்கும் பிளாக் அருங்காட்சியகத்தின் இயக்குநர் லிசா கொரின் கிராசியோஸ் கூறுகிறார். மேலும் அவர் மான்சா மூசாவின் கதை ஏன் பரவலாக அறியப்படவில்லை என்பதையும் விளக்குகிறார்.
மூசா ஆண்ட மாலி அப்போது பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக உச்சத்தில் இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஐரோப்பியர்கள் அதற்கு முன்பாக மூசாவின் காலத்தில் வந்திருந்தால் உலக வரலாறு நிச்சயமாக வேறுவிதமாக நடந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.
இப்போது சொல்லுங்கள் இதுவரை உலகம் கண்ட பணக்காரர்களில் யார் பெரும் பணக்காரர்?