Tamil Islamic Media

தர்ம கற்கள் - அழகிய தர்மம்

துருக்கி நாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடைவீதி, பள்ளிவாசல், மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவிலான இரண்டு மீட்டர் உயரத்தைக் கொண்ட மார்பில் கல்லை காண இயலும்,அதன் தலை பகுதியில் குழி இருக்கும்.அதில் இது ஸதகா தாஸி (ஈகை கல்) என்று எழுதப்பட்டிருக்கும்


துருக்கி மொழியில் ஸதகா தாஸி என்றால் ஈகை கல் என்று அர்த்தம்.எல்லா ஊர்களிலும் இருப்பது தானே என்று எண்ணி விட வேண்டாம்.இந்த வகையான கற்கள் சில தனித்துவத்தை உடையவை.இப்படியான கற்கள் உருவானதற்கான காரணம், எந்தவொரு ஏழையும் எவரிடமும் கையேந்தக் கூடாது. அதே நேரத்தில் கொடுப்பவனும் பெருமை கொள்ளக் கூடாது.

இதனை சாத்தியப்படுத்தும் வகையில் ஸதகா தாஸி என்ற இந்த ஈகை கற்களில் மக்கள் தங்களது தானதர்மங்களை போட்டு விடுவார்கள்.மாலை நேரத்தோடு அதில் தர்மம் போடுவதை நிறுத்திக் கொள்வார்கள் .ஏனென்றால் அதற்கு பிறகு ஆள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தப் பிறகு ஏழைகள் அங்கே வந்து அதில் உள்ள பொற்காசுகளை எடுத்துக் கொள்வார்கள். அதுவும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தங்களை போன்ற பிற மக்களுக்கு மீதியை அதிலேயே வைத்து விடுவார்கள்.


ஏழைகள் யாரிடமும் கையேந்தி தங்களது மரியாதையை இழக்க வேண்டிய தேவையும் இல்லை.செல்வந்தர்களது தர்மங்கள் முகஸ்துதியாலோ அகம்பாவத்தாலோ அழிந்துப் போக வாய்ப்பும் இல்லை.இடது கரத்திற்கு தெரியாமல் கொடுப்பதல்ல கொடுத்த கரமும் வாங்கிய கரமும் சந்திக்கவேயில்லை.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு அதிகாரி கூறுகிறார்: 'நான் ஒரு வாரம் ஒரு ஸதக்கா தாஸியை தொடர்ந்து கண்காணித்து வந்தேன், அதில் போடப்பட்ட காசுகள் அப்படியே இருந்தது.'அந்தளவிற்கு இந்த கற்கள் மக்களை தன்னிறைவுடையவர்களாக மாற்றியது.
ஸதகா தாஸி கல்லாக இருந்தாலும் வறுமையால் வறண்டுப் போன உள்ளங்களை சந்தோஷம் என்ற அருவியில் நனைத்தது.








No articles in this category...