(புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
தமிழகம் முழுவதும் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட காவல்துறை முடிந்தளவு முயற்சிகள் எடுத்திருந்தது. பாராட்டுகள்..
அவர்களுக்கும் வீடுவாசல் குழந்தைகள் கொண்டாட்டம் என எல்லாம் இருந்தும் கொட்டும் பணியை பொருட்படுத்தாமல் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நின்று விபத்துகளை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர்.
புத்தாண்டு இரவு தேவாலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன. கடற்கரையில் மக்கள் வெள்ளம் புதிய ஆண்டின் துவக்கத்தை வரவேற்று மகிழ்ந்தது. ஆனால் இன்னொரு பக்கம் நடக்கக் கூடாதவைகள் எல்லாம் அரங்கேறியது.
அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வரம்பு மீறி ஒரு சிலர் செய்த அட்டூளியங்கள் பொருத்துக் கொள்ள முடியாதவை. கொண்டாடுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தும் பொது ஜனங்களுக்கு இடையூறு செய்து அதில் மகிழ்ச்சி கொள்வது மனித தன்மையற்ற மன்னிக்க முடியாத செயல்.. வரம்புமீறி நடந்து கொண்டவர்கள் பலரது வருத்தங்களையும் சாபத்தையும் புத்தாண்டுப் பரிசாக பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.
பணி முடிந்து இரவில் வீட்டின் முன் இவர்களின் சேட்டைகளை கவனித்தவாறு நின்று கொண்டிருந்தேன். காதை பிளக்கும் அளவு சில பைக்குகள் சீறிப்பாய்ந்தன. பைக்குகளை கொண்டு சாலையில் தீப்பொறிகள் எழச்செய்து ஊலையிட்டுக் கொண்டு மகிழ்ந்து திளைத்தது ஒரு கூட்டம். பைக்குகளில் சாகசம் செய்வது ஓர் கலை. அதை முறையான பாதுகாப்போடு செய்ய வேண்டிய இடத்தில் செய்து காட்டுவது தான் புத்திசாலித்தனம்.
ஒரு நாள் கூத்துக்காக யாரை பற்றியும் துளியும் கவலையின்றி பயமறியாமல் மின்னலுக்கு ஈடு கொடுக்கும் முயற்சியில் எதிரில் வருபவர்கள் குறித்தும் அக்கறை கொள்ளாதது அவர்களின் முட்டாள்தனமான கொண்டாட்ட மனோ பாவத்தை வெளிச்சமிட்டு காட்டியது.
வீட்டுக்கு எதிரே இருந்த மேம்பாலத்தில் சீறிப்பாய்ந்து சாகசத்தில் ஈடுபட்ட பைக்குகளுக்கு பின்னாலேயே வேரொரு உயிரை காக்க ஆம்புலன்ஸ் ஒன்று ஒலி எழுப்பியவாறு விரைந்தது. மனதுக்குள் புலம்பியவாறு கோபம் கொப்பளிக்க இது எங்கு முடியப்போகுதோ என்று எண்ணிய தருணத்தில் தான் அந்த துரதிஸ்டமும் நடந்தது.
அதே மேம்பாலத்தில் சிறிது நேரம் கழித்து பேருந்தை வேகமாக முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒன்று வேகமாக தரையில் மோதியது.
எத்தனையோ கனவுகளோடு இப்புவியில் பிறந்த ஒருவன் சாலையின் நடுவில் வீழ்ந்து கிடந்தான். நடக்கக்கூடாது நடந்து விட்டதால் வேகமாக வந்த காவலர்களின் முகத்தில் பரபரப்பு தொற்றியது. யாரென்றே தெரியாதவனுக்கு அவர்கள் தங்கள் ‘கடமையைச்’ செய்தனர். உயிரற்ற உடலை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் வேகம் எடுத்தது. ஆனால் அந்த வேகம் அவன் ஓட்டி வந்ததை விட சற்று குறைவு தான். அவன் அணிந்திருந்த காலணிகள் தன் எஜமானரை தேடிக்கொண்டிருந்தது. ஆனால் அவனோ அனைத்தையும் இழந்து விட்டு புத்தாண்டை வரவேற்பதற்கு முன்பே வேரொரு புது உலகத்தை காண புறப்பட்டிருந்தான்.
ரத்த ஆறு மணல் போட்டு மூடப்பட்டது. கொஞ்ச நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. எதுவுமே நடக்காதது போல் மேம்பாலம் தன்னை காட்டிக்கொண்டது. சிதறிக்கிடந்த சில துளி ரத்தங்களை கவனிக்கவும் யாருக்கும் நேரம் இருந்திருக்கவில்லை. சாலையில் படிந்த அவனது ரத்தக்கரைகளை வெகு சீக்கிரத்தில் மறையச் செய்ய எதுவும் அறியாத மற்றவர்கள் வேகமெடுத்து பறந்து கொண்டு தான் இருந்தனர்.
விழுந்து உயிரிழப்பதற்கான எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் வைத்துக்கொண்டு விழுந்து மடிவதை விபத்தாக ஏற்றுக்கொள்ள மனம் முன்வரவில்லை. அது தற்கொலைக்குச் சமம்.
உயிரிழப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மேம்பாலத்தின் மேலும் கீழும் ஒன்றும் அறியாதவர்களின் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை..!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 1.1.2019 அன்று விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் விவரங்கள்
வேகமாக வந்த டூவீலர் மோதி சாலையில் நடந்து சென்ற அப்பாவி உட்பட மொத்த உயிரிழப்புகள் - 8.
1. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - 44 பேர், ஒருவர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்.
2. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை - 140 பேர், அதில் 29 பேருக்கு தீவிர சிகிச்சை, 3 பேர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர்.
3. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை - 68 பேர், அதில் 23 பேருக்கு தீவிர சிகிச்சை, 2 பேர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர்.
4. ஸ்டான்லி அரசு மருத்துவமனை - 30 பேர், அதில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை.
சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை..
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் - 263 வழக்கு
இருவருக்கு மேல் பைக்கில் பயணம் - 233 வழக்கு
அதிவேக பயணம் - 33 வழக்கு
கொண்டாட்டங்களை முறைப்படுத்தி அதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது தான் உண்மையில் அறிவுடையோருக்கு அழகு. வேகத்தை குறைத்து சுயக்கட்டுபாட்டுடன் வாழப்பழகுவோம்..
~ Asfhaq Ahmed.M
No articles in this category... |