Tamil Islamic Media

தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்

ஜுனைத் ஜம்சேத்

பாகிஸ்தானின் மிகவும் புகழ் பெற்ற பாப் பாடகராக விளங்கியவர். பணத்திலும் புகழிலிலும் எந்த ஒரு வாலிபரின் கனவும் இவரது வாழ்வில் நிஜம்.

1997-ல் மெளலானா தாரிக் ஜமீல் அவர்களுடன் இவரது சந்திப்பு நடை பெற்றது. மெளலானா தாரிக் ஜமீல் அவர்கள் தப்லீக் பணியில் உலக அளவில் மாபெரும் சேவை செய்து வருபவர். மென்மையான பண்பும், ஹிக்மத்துடன் தாவா செய்வதிலும் மிகச் சிறந்தவர். மெளலானாவிடம் சிறிது நேரம் உரையாடிய ஜுனைத் ஜம்சேத் கூறினார், எனக்கு பணத்திற்கோ புகழிற்கோ குறைவில்லை. பாகிஸ்தானின் இளைஞர்கள் கனவு காணும் வாழ்க்கை என்னிடமுள்ளது. உங்களது வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது, ஆதலால் கேட்கிறேன்.. இவ்வளவு இருந்தும் உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறேன். நிம்மதியில்லை ஏன்?

மெளலானா கூறினார்கள் நீங்கள் ஒரு காலில் வலியிருக்கிறது ஆனால் மருந்தை அடுத்த காலில் தடவிக் கொண்டிருக்கிறேர்கள் என்றார். உங்களது இந்த வலி உங்களது ரூஹில் உள்ளது உடம்பில் இல்லை. ஆனால் நீங்களோ இசையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில், ஆடம்பர வாழ்க்கையில் உடம்பிற்கான சுகத்தை கொடுத்துக் கொண்டிருக்கீறீர்கள். எப்போது ரூஹிற்கு மருந்தை கொடுப்பீர்களோ அப்போது நிம்மதியை உள்ளத்தில் உணர்வீர்கள்.. இது போன்று சம்பாஷைணைகள் தொடர்ந்தன..

இதற்கு பின்னரும் ஜுனைத் ஜம்சேத் தனது பாடல்களையும் தொடர்ந்தார், நோன்பு போன்ற அமல்களையும் தொடர்ந்தார். மெளலான தாரிக் ஜமீல் அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார்.

ஒருமுறை அவர் மெளலானவிடம் கூறினார், நீங்கள் நமது முதல் சந்திப்பிலேயே நீ செய்வது முற்றிலும் தவறானது, ஹராமானது என்று கடின வார்த்தைகளை கூறியிருந்தால் நமது முதல் சந்திப்பே நமது இறுதி சந்திப்பாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னை அது போன்று பேசியதில்லை கடிந்ததுமில்லை. அல்லாஹ் அவனாகவே எனது உள்ளத்தில் ஹிதாயத்தை போட்டுவிட்டான், நான் இப்போது சிறிது சிறிதாக இசையை விட்டும் விலகிவிட்டேன்.

 

இதனைத் தொடர்ந்து ஜுனைத் ஜம்சேத் அவர்கள் நான்கு மாத ஜமாத்தில் சென்றார். ஒரு நாள் ஜமாத்தில் இருக்கும் போது
மெளலானா தாரிக் ஜமீல் அவர்களைத் தொடர்பு கொண்டு கூறினார். ”இப்போது நான் வந்த ஜமாத்துடன் பாலக்கோட் என்ற இடத்தில் ஒரு சிறிய, பழைய பள்ளியில், ஒரு கிழிந்த பாயில் இருக்கிறேன். இது வரை வாழ்க்கையில் அனுபவத்திராத, ஒரு ஆத்மார்த்த நிம்மதியை உள்ளத்தில் உணர்கிறேன். இதைத் தான் நான் இவ்வளவு நாளும் இசையிலும், 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் இது வரை தேடிக் கொண்டிருந்தேன்” என்றார்.

தனது வாழ்வாதரமான பாடும் தொழிலை விட்டு விட்டதால் உல்லாசத்தின் உச்சத்திலிருந்த இவர் வாழ்க்கையில் வறுமையின் உச்சத்தை தொட்டார். ஒருமுறை மெளலானவை போனில் தொடர்பு கொண்டு கூறினார். இப்போது எனது வீட்டில் எனது தாயாருக்கு மருந்து வாங்கக் கூட பணமில்லை, பெப்சி நிறுவனத்தினர் போன் மேல் போன் செய்கின்றார்கள். ஒரே ஒரு சீடி பெப்சி நிறுவனத்திற்காக தயார் செய்து கொடுங்கள், நான்கு கோடி ரூபாய்கள் தருகிறோம் என்று. ஆனால் நான் அவர்களிடம் மீண்டும் அந்த பாதாளத்தில் விழமாட்டேன், அது முடியாது கூறிவிட்டேன்.

அல்லாஹ் தனது அடியார்களை சோதிக்கின்றான் ஆனால் கைவிடமாட்டான். பின்னர் JJ என்ற பெயரில் ஆடைகள் விற்பனைகளை தொடங்கினார், அதில் அல்லாஹ் அவருக்கு பரக்கத்தை அருளினான்.

அல்லாஹ் தன்களித்த குரல் வளத்தில் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புகழ்ந்து பல கவிதைகளை பாடியுள்ளார்.

தப்லீக் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உலகில் பல இடங்களுக்கும் தீன் பணிக்காக சென்றுள்ள இவர், 10 நாள் ஜமாத்தில் சித்ரால் சென்று திரும்பும் போது 7-Dec-16 அன்று நடந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.

இவரைப் போன்று வாழ்வின் எந்த ஒரு நிலையிலும் தீனுக்கு முன்னிரிமையளிக்கும் புனிதர்கள் இன்றும் இந்த பூமியில் இருப்பதால் தான் அல்லாஹ் இந்த உலகை இன்னும் விட்டு வைத்திருக்கின்றான்.

இவரது மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் இவருக்கு ஷஹீத்களின் அந்தஸ்தை வழங்குவானாக! ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

Nellai Eruvadi S. Peer Mohamed
http://www.TamilIslamicAudio.com
http://www.nellaiEruvadi.com






No articles in this category...