Tamil Islamic Media

பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்

பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்

பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் விருந்தோம்பல் முறைக்கென்று ஒரு தனி பாரம்பரியம் உள்ளது. தொன்று தொட்டு பல காலங்களாக மிக சிற் சில மாற்றங்களுடன் இந்த தாவத்து என்ற விருந்தோம்பும் முறை நடைபெற்று வருகிறது.

அது, கூட்டாக தரையில், பாயில் அமர்ந்து வட்டமான சஹனில் இரண்டு அல்லது மூன்று பேராக அமர்ந்து உண்ணும் முறை. இஸ்லாமிய மரபில் இவ்வாறு கூட்டாக அமர்ந்து உண்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. "எங்களுக்கு சாப்பிட்ட (திருப்தி) உணர்வே வருவதில்லை" என்று சஹாபாக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டதற்கு "நீங்கள் தனியாக சாப்பிடுகிறீர்கள் போலும், ஒன்றாக கூட்டாக அமர்ந்து உணவருந்துங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை நாம் அறிவோம்.

எல்லாவற்றிலும் பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டுதானே! ஆனால், தற்போது புதிதாக பெருகி வரும் டேபிள் சேர், பிளாஸ்டிக் வாழையிலை, பணிபுரிய கூலிக்கு ஆட்கள் என்ற இந்த முறையை அப்படி ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோருக்கு முடிவதில்லை.

காலம் காலமாக ஹாயாக பாயில் இடம்பிடித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு ஜமாவாக பேசிக்கொண்டு, இரண்டு பேராகவோ மூன்று பேராகவோ ஒரு சஹானை சுற்றி பகிர்ந்து உண்டு எழுவதில் கிடைக்கும் திருப்தியும் நிம்மதியும் இதில் இல்லையென்பதுதான் அவர்கள் சொல்லும் முதல் காரணம்.

மேலும், பாரம்பரிய விருந்துண்ணும் முறையில் டேபிள் சேர், பிளாஸ்டிக் வாழையிலை, ஆட்கள் கூலி செலவெல்லாம் இல்லை. டேபிள் சேர் முறை எல்லாம் (அவசியமே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரங்களை இறக்குமதி செய்துக் கொள்ளும் ஆடம்பர இந்தியர்களை போல) பக்கத்து வீட்டுக்காரரை கூட அறிந்து வைத்திராத நகரவாசிகளிடமிருந்து இம்போர்ட் செய்து கொண்டதாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

திருமணத்தை எளிமையாக நடத்த வலியுறுத்துகிறது இஸ்லாம். திருமண விருந்து ஒன்றும் பர்ள் அல்ல. மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தும் அல்ல. ஆனால் சமுதாயம் அதுபோல தற்போது ஆக்கிவிட்டது. இதனால் எளிமையாக திருமணம் முடிக்க நினைப்பவர்களுக்கும் பெரும் சங்கடம் விளைகிறது. அது போல டேபிள் சேர் கலாச்சாரமும் வருங்காலத்தில் ஆகிவிடும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் இவர்கள்.

இது இப்படி என்றால், இந்த டேபிள் சேர் முறை, விருந்தில் ஒரு முறைப்பாட்டை கொண்டு வருகிறது; திருமண வீட்டாருக்கு சுமை குறைகிறது; வருபவர்களை வரவேற்பதை மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதும் என்று இந்த பக்க நியாயத்தையும் சிலர் அடுக்குகின்றனர்.

திருமண நிகழ்வு என்பது உறவுகள் கூடி களிப்பதற்கான ஒரு பொழுதுதான். திருமண வீட்டில் தங்கள் பங்களிப்பின் மூலம் தங்கள் உரிமையை, அன்பை வெளிப்படுத்திக்காட்டிட விரும்பாத உறவுகளே இருக்க முடியாது. பல இடங்களில் குறையாக போய் விடும் அபாயம் உள்ள சென்சிடிவான செண்டிமெண்ட் இது. பாரம்பரிய சஹான் விருந்து முறையில், "கலரி உலம்புவது(களரி விளம்புவது)" என்ன அழகிய சொல்லாடல்...! என்ற பெயரில் ஒவ்வொருவர் கையிலும் சஹான் சென்று வருவது முதல், தெரிந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து, "சாப்பிடுங்க" என்று சஹானை கொடுத்து உபசரிப்பது என்று உறவுகளின் நேரடி பங்களிப்பு நீக்கமற இருக்கும். இது தனது வீட்டு வைபோகம் என்ற எண்ணம் வீட்டில் குஞ்சுகுளுவான்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் திளைக்கும். திருமணத்தின் உண்மையான சாரமான 'உறவுகளின் ஒன்றுகூடல்' அழகாக இயல்பாக நிகழும்.

பிஸ்மில்லாஹ் சொன்ன பிறகே அனைவரும் ஒருசேர சாப்பிட ஆரம்பிப்பதும், ஒரு சிலர் முன்பின் சாப்பிட்டு முடித்தாலும் அனைவரும் ஒருசேர எழுந்திருப்பதும் ஒரு தனி அழகு. "பிஸ்மில்லாஹ்" என்று சொல்லி முடித்தவுடனேயே "மறுசோறு" என்ற குரல்கள் வருவது அது ஒரு அழகு.

டேபிள் சேர் கலாச்சாரத்தில் இதற்க்கு சாத்தியமே இல்லை. மாறாக, ''அதுதான் ஆளுங்க இருக்காங்களே '' என்ற எண்ணத்தில் உறவுகள் யாரும் களத்திற்கு வருவதே இல்லை. பெரும்பாலான உறவுகள் சாப்பிட்டு விட்டு 15 நிமிடத்தில் இடத்தை காலி செய்து விடுகின்றனர். கடந்த காலத்தில், திருமணம் சார்ந்த பல நிகழ்வுகள் மார்க்க அனாச்சாரம் என்றும் இஸ்ராப் (வீண்விரயம்) என்றும் புறம்தள்ளப்பட்டு பெரிதாக எந்தவிதமான கொண்டாட்டங்களும் இல்லாத ஒரு நிகழ்வாக தற்போதைய திருமண வைபவங்கள் ஆகிவிட்ட இந்த காலத்தில் உறவுகள் கூடி இயங்கும் 'கலரி உலம்புவதற்கு (களரி விளம்புவது)'' வேட்டு வைக்கும் இந்த டேபிள் சேர் முறையில் என்ன இஸ்லாமிய கலாச்சாரம் இருக்கிறது?. உறவுகளை ''உங்கள் வேலையை பார்த்துகிட்டு போங்க'' என்று ஒதுக்குதல் தான் மறைமுகமாக இருக்கிறது என்று கொஞ்சம் காட்டமாகவே முகம் காட்டுகின்றனர் பலர்.

நின்று கலரி உலம்ப குடும்பத்தில் ஆள் இல்லாத, அத்தனை உன்னத குடும்ப பாரம்பரியம் இல்லாதவர்களும், குடும்பத்தில் பிணக்குகள் எற்படுத்திக்கொண்டவர்களும்தான் முதன்முதலில் பயந்து போய் இந்த டேபிள் / ஆட்கள் முறையை யோசித்து இருக்க வேண்டும்'' என்று வேறு பகீர் கிளப்புகின்றனர்.

டேபிள் சேர் கலாச்சாரத்தால் விழுந்த பெரு அடி

பாரம்பரிய விருந்து முறையில் அனைவரும் உணவு வரும் வரை காத்திருந்து பிறகு விருந்து தரும் வீட்டார் '' பிஸ்மில்லாஹ், சாப்பிடுங்கள் '' என்று சொன்ன பிறகே உணவருந்த துவங்கும் அழகிய ஒரு மரபு பின்பற்றப்பட்டுவருகிறது பரங்கிபேட்டை உள்ளிட்ட மிக சில முஸ்லிம் ஊர்களில் மட்டுமே நடைமுறையில் இன்றும் இருக்கும் இந்த அழகிய மரபு ஆகச்சிறந்த சகிப்புனர்வுக்கு ஒரு இயல்பான உதாரணமாகும். டேபிள் சேர் முறையில் விழுந்த முதல் அடி இந்த 'பிஸ்மில்லாஹ்'சொல்லி கூட்டாக அனைவரும் உண்ணத்துவங்கும் இந்த மரபுக்குத்தான். ஆனால், பாரம்பரிய விருந்து முறையில் இந்த மரபு இன்னும் உயிர்ப்போடு உள்ளது.

வயதானவர்கள் உட்கார்ந்து உணவருந்த டேபிள் சேர் முறையே சிறந்தது என்ற வாதமும் முன்வைக்கபடுகிறது. உடனே , '' அந்த காலத்தில் எந்த வயதானவர்கள், எந்த சேரில் உட்கார்ந்து உணவருந்தினார்கள் ? போன வருடம் வரை கூட எவருமே டேபிள் சேரை விருந்துகளில் பார்த்தது கூட இல்லையே ? அவ்வளவு ஏன், மாற்றுமதத்தினர் கூட நமது இந்த பாரம்பரிய கூட்டு விருந்துண்ணும் முறையை கண்டு சிலாகித்து அதைதானே விரும்புகின்றனர்? '' என்று உடனே அதற்கான பதிலையும் தருகின்றனர் இந்த தரப்பினர்.

பாரம்பரியமே ஆரோக்கியமானது

காய்கறி, மருந்து என்று அனைத்திலும் '' ஆர்கானிக்'' என்ற இயற்கை முறைக்கு உலகமே ஆர்வத்துடன் மாறிவரும் இந்த சூழலில், இரும்பு சஹானுக்கு பதில் பிளாஸ்டிக் வாழை இலை, வீணாக போகப்போகும் தினசரி பேப்பருக்கு பதில், இதற்காகவே தயாரிக்கப்படும் பேப்பர் என்று ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் முறை இது என்று பொருமும் இவர்களின் வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் வாழை இலைக்கு மேல்புறத்தில் பேப்பர் ஊறி விடாமல் இருக்க பூசப்படும் மெலிதான மெழுகு கோட்டிங், சூடான உணவு பட்டு உருகி நம் வயிற்ருக்கு போய் ஏற்படுத்தும் உபாதைகள் சில சமயம் பெரிய நோய்களுக்கு வித்திடும் என்று எச்சரிக்கிறது விஞ்ஞானம்.

பாரம்பரிய முறையில் எக்ஸ்ட்ரா கறி / ஸ்வீட் / கோழி என்று அவரவர் இஷ்டத்திற்கு புகுந்து விளையாடி உணவு / இறைச்சி தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. டேபிள் சேர் முறை அதை தடுத்து முறைபடுத்துகிறது என்று தங்களின் முக்கிய துருப்புச்சீட்டை இறக்கி பேசுகின்றனர் இந்த தரப்பு. '' இதெல்லாம் ஒரு காரணமே அல்ல. அதெல்லாம் காலம் காலமாக நடைபெறுகிறது. எந்த முறையாக இருந்தாலும் அதை முழுதாக தவிர்க்க முடியாது. ஏன்? டேபிள் சேர் முறையில் சோறு தட்டிக்கொண்டு போனதற்கு பல உதாரணங்கள் உள்ளதே ! எல்லாம், சரியாக பிளான் பன்னி, சரியான ஆட்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதிலும் இருக்கிற விஷயம். யாரோ முகம் தெரியாத ஒரு டீமிடம் நமது உணவையும் உறவுகளின் புன்னகையையும் ஒப்படைப்பதை விட நமக்கு நன்கு தெரிந்த, கண்டிப்பான உறவு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதுதானே சிறந்தது? என்று போகிற போக்கில் நச் அடிக்கின்றனர் அந்த தரப்பினர்.

எல்லாவற்றையும் விட ரொம்பவும் உறுத்தும் விஷயம்... நமது பெண்களுக்கு யாரோ வெளியூர் அந்நிய ஆண்கள் சென்ற பரிமாறுவதும் அவர்களின் தேவையை கவனிக்கையில் நடைபெறும் ஆண்பெண் கலப்பும் தான். ''ரொம்ப சரியற்ற விஷயமாக இதனை பார்க்கிறேன்'' என்கிறார் ஆலிம் ஒருவர்.

இப்படி அமர்ந்து உண்பதற்கு தயங்கி, உணவருந்துவதையே தவிர்த்து விட்டு செல்கிற பெண்களை பற்றி இப்போதெல்லாம் அதிகம் கேள்விபடமுடிகிறது. இந்த கட்டுரை எழுதபடுவதற்கு அவர்களும் ஒரு காரணம்.

நமது நெருங்கிய உறவு பெண்களை நாமே கூட நெருங்கி பரிமாறாத பாரம்பரிய விருந்துமுறை எங்கே? முகம் திறந்து உணவருந்தும் வெட்கும் பெண்களின் மத்தியில் சென்று அந்நியர்கள் பரிமாறும் இந்த டேபிள் சேர் முறை எங்கே ? என்று இவர்கள் பொறும ... 'அவர்கள் ஜஸ்ட் உணவை வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.. ஏன், இவர்கள் வெளியூரில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதில்லையா? என்று எதிர் கேள்வி கேட்கின்றனர் இந்த தரப்பு. நிர்பந்த நிலையில் ஹோட்டல்களில் சாப்பிடுவதும், உறவுகளின் அன்பிற்காக விருந்தில் சாப்பிடுவதும் ஒன்றல்ல என்றாலும், மார்க்கம் எந்த நிலையிலும் தவிர்க்கும் ஆன் பெண் கலப்பை நாமும் தவிர்ப்பதே சிறந்தது.

பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக எவர்சில்வர் கிண்ணங்கள், வாட்டர் பாகெட், பாட்டில்களுக்கு பதிலாக மீண்டும் ஜக்கு, டம்பளர்கள், சிறிய சஹான்களுக்கு பதிலாக 6 பேர் அமர்ந்து உண்ணும் பெரிய சஹன் என்று பாரம்பரிய விருந்துமுறையை இன்னும் செழுமையாக, இன்னும் இயற்கையாக, ஆரோக்கியமாக ஆக்கிட இளைஞர்கள் நாம் இங்கே திட்டமிட்டு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், டேபிள் சேர் கலாச்சாரம் நிலைமையை மேலும் மோசமாக்குகிறதே என்று நாம் பேசிய சில இளைஞர்கள் நொந்துக்கொண்டதையும் காண முடிந்தது.

பாரம்பரிய விருந்தோம்பும் முறை வரலாற்றில், இடப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் மண்டபத்தின் ஒவ்வொரு சதுரடியையும் விருந்தாளிகள் சுதந்திரமாக பயன்படுத்திகொள்வார்கள். டேபிள் சேர் முறையிலோ "எப்படா எழுந்திருப்பார்? எப்படா இடம் பிடிக்கலாம்?" என்று சில சமயம் தள்ளுமுள்ளு நிகழும் சாத்திக்கூறுகள்கூட உள்ளன. கண்ணியமான காத்திருந்து உணவருந்தலாம் என்றெல்லாம் டேபிள் சேர் முறையில் நினைத்துகூட பார்க்க முடியாது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

எப்படி பார்த்தாலும் டேபிள் சேர் முறையை விட அழகானதும் சூழலுக்கும் மரபுக்கும் ஒத்திசைவானதுமாக பாரம்பரிய விருந்தோம்பும் முறை எல்லா வகையிலும் அழகு சேர்க்கும் விடயமாக இருக்கிறது என்பதை எவராலும் தெளிவாக உணர முடிகிறது.

மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் மாறாததுதான். ஆனால், தேவையான மாற்றமாக இருந்தால் மனம் இனிக்கும்; வரவேற்கலாம். ஒப்புநோக்கில் எந்த வகையிலும் ஒத்துவராத டேபிள் சேர் கலாசாரம் போன்ற மாற்றங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் தேவைதானா என்ற கேள்வி நமக்கு முன்னால்.. என்ன விடை சொல்லப் போகிறோம் ? இவற்றையெல்லாம் இனியும் தொடராமல் வரதட்சிணை ஒழிப்புக்கு தீர்மானம் இயற்றி முன்னுதாரணமாக இருந்த பரங்கிப்பேட்டையில், திருமணங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட்டு பாரம்பரியத்தோடு கூடிய இயற்கை முறைக்கு திரும்பி இன்னொரு அழகிய முன்னுதாரணத்தை ஏற்படுத்த ஆவணச் செய்யப்பட வேண்டும்.

குறிப்பு: இந்த கட்டுரை எந்தவிதத்திலும் குறை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, பொதுமக்களின் மத்தியில் இதுபற்றி நிலவும் எண்ணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

http://mypno.com/index.php?option=com_content&view=article&id=8820:2016-01-26-14-33-25&catid=36:mytown&Itemid=76

 






No articles in this category...