பெற்றோர்களைப் பேணுவோம்!
உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.
தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.
பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.
உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிப்பதுடன்,பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.
வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.
இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?
ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது' எனக் கூறுகிறார்கள்.
அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!
முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.