மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
இவ்வுலகில் அல்லாஹ்விற்கு மாறுதல் செய்கின்ற மனிதர்களுக்கு மறுமையென்னும் இறுதி நாளில் மிகப்பெரிய நரக வேதனை உண்டு என்பதற்கு மனிதன் உண்டு மகிழும் மீன்களே எடுத்துக்காட்டாக இருக்கிறது! பரந்து கிடக்கும் கடலுக்கடியில் வசிக்கும் மீன்களை பிடித்து உண்ண நினைக்கும் மனிதனின் தூண்டில் முள்ளில் இருக்கும் மண் புழுவை பார்த்ததும்; அதை சாப்பிட ஆசைப்பட்டு தூண்டிலில் வாயை வைத்து இழுக்கும் போது தூண்டில் போடுபவன் மிதப்புக்கட்டை தண்ணீருக்குள் போவதை பார்த்ததும் தூண்டிலை சுண்டி மேலே இழுக்கிறான்;மீன் அவனின் கையில் சிக்கிக்கொள்கிறது. பிறகு இந்த மீனை மனிதன் தான் எப்படியெல்லாம் சுவைக்க வேண்டுமென நினைக்கிறானோ? அப்படியே சமைத்து உண்டு மகிழ்கிறான். இதே போன்று தான் ஒரு முறை கடலில் தூண்டில் முள்ளில் இருக்கும் புழுவை பார்த்ததும் ஒரு சிறிய மீன் ஆசைப்பட்டு அருகில் சென்றபோது மற்றொரு பெரிய மீன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது; சிறிய மீனே!அதன் அருகே செல்லாதே,ஆசைப்பட்டு அதை சாப்பிட நினைத்தால்,நீ ஒரு மனிதனின் கையில் அகப்பட்டுக்கொள்வாய்.அந்த மனிதனுக்கு இரண்டு கை,இரண்டு கால் அதன் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்கள் இருக்கும். உன்னை பிடித்ததும் அவன் ஒரு கூர்மையான கத்தியை கொண்டு அறுத்து எண்ணைச்சட்டியில் போட்டு வறுத்து சாப்பிட்டு விடுவான். பிறகு நீ இவ்வுலகமாகிய இந்த கடலுக்குள் கடைசி வரைக்கும் வரமுடியாது!காரணம் கடலை விட்டு கரைக்கு சென்ற எந்த மீனும் திரும்பிய சரித்திரமில்லை. ஆகையால்,நீ ஜாக்கிரதையாக இருந்துகொள் எனக்கூறுகிறது. இந்த பெரிய மீனின் வார்த்தை உண்மையென உறுதி கொண்டால் சிறியமீன் மனிதனின் வேதனையை விட்டும் தப்பித்துக்கொள்ளும். மாறாக பொய்யென நினைக்குமேயானால்,மனிதனின் வேதனைக்குட்பட்டு சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.இதே போன்றுதான் மனிதனின் நிலையும். இவ்வுலக வாழ்வின் ஆசைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நாளை மறுமையின் வாழ்க்கைக்குரிய நல்ல செயல்களின் மீது நம்பிக்கை இல்லாமல் வாழும் மனிதர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்! - கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
No articles in this category... |