Tamil Islamic Media

தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)

அப்துற்றஹ்மான் பின் அபீ லைலா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபித்தோழர் இப்னு மஸ்வூத் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை செய்யும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்

”யாஅல்லாஹ்! நான் நின்றிருக்கும் நிலையில் இஸ்லாத்தை கொண்டு என்னை பாதுகாப்பாயாக நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தைக்கொண்டு என்னை பாதுகாப்பாயாக நான் தூங்கும் போது இஸ்லாத்தைக்கொண்டு என்னை பாதுகாப்பாயாக. யா அல்லாஹ்! என் விஷயத்தில் விரோதிக்கும், பொறாமைக்காரனுக்கும் வாய்ப்பளிக்காதே. யா அல்லாஹ் உன் வசமிருக்கும் நல்லவற்றின் பொக்கிஷத்திலிருந்து உன்னிடம் கேட்கிறேன் யா அல்லாஹ் ! உன் வசமிருக்கும் தீமைகளைனைத்தின் பொக்கிஷத்திலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் எவற்றின் பிடி உன்வசம் உள்ளதோ அந்த பொருட்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

மனித குலத்தின் எல்லா நிலைக்கும் வழிகாட்டியாக வந்த சாதிக்குல் அமீன் சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மறுமை வாழ்வு சிறக்க வழிகாட்டியது போன்றே இம்மை வாழ்க்கை எல்லா வகையிலும் சிறக்க வழிகாட்டினார்கள். அந்த வகையில் இந்த உம்மத் தனது முழுத்தேவைகளை, நிறைவேற்றி வைக்க தகுதியுள்ளவனான அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டினார்கள்.

நம்மிடம் எத்துணை சக்தி, பொருளாதாரம் இருந்தாலும் என் எல்லா தேவைகளையும் நிறைவு செய்பவன் என் இறைவனே என்ற நம்பிக்கை தான் இஸ்லாத்தின் அடிப்படை செய்தி, இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே ஒருவனின் ஈமான் முடிவு செய்யப்படுகிறது என்று பாடம் புகட்டினார்கள். அந்த வகையில் தேவைகளை நிறைவேற்றுபவனிடம் மட்டுமே தேவைகளை கேட்கவும் கற்றுக்கொடுத்தார்கள். இதன் அடிப்படையில் உலகில் உள்ள எத்துணை பெரும் கோடீஸ்வரர்களும் தேவை உள்ளவர்கள் என்பது சிந்திக்க தகுந்த செய்தி.

பொதுவாக மனிதன் ஒரு மனிதனிடம் உதவிகேட்டால் அவன் எரிச்சல் அடைகிறேன், தூரமாகிறான். இறைவன் மட்டுமே உதவிகேட்டால் சந்தோஷம் அடைகிறான், நெருக்கமாகிறான். ஆகையால் தான் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குபின் கேட்கப்படும் துஆ அங்கிகாரம் மிக்கது என்றார்கள் பெருமானார்(ஸல்). இந்த தொழுகைக்குப் பின்னால் கூட கேட்க நேரமில்லை என்று சொல்லுபவர்களுக்காகவே, தொழுகையில் ஓதும் சூரத்துல் பாத்திஹாவையே துஆவாக ஆக்கியுள்ளான் இறைவன்.

இப்படி எவ்வழியிலாவது மனிதன் தன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று இறைவனின் வழிகள் பலவாக பிரிந்து நம்மிடம் வந்து சேர்கிறது. மனித குலத்தின் வழிகாட்டிகளாக வந்த நபிமார்கள் அனைவரும் தங்களின் சுக, துக்கங்களில் தன்னிடம் எப்படி பிராத்தித்தார்கள என்பதை நமக்கு வகுப்பு எடுக்கவே இறைவன் பல பிராத்தனைகளை குர் ஆனில் இறக்கி அவற்றை நாம் ஓதுமாறு கட்டளையிட்டான்.

அறிவில் நிறைவில்லாதவர்கள் கூட புரிந்துகொள்கிற அளவில் ஆக்கியுள்ளான். தன் தாயின் வாசம் தேடி ஓடும் குழந்தையாய் தன்னை படைத்த இறைவனிடம் மனிதன் ஒடோடி வர இறைவன் விரும்புகிறான்.

து ஆ பற்றி நபி(ஸல்) அவர்களின் வார்த்தை நம்மை புரட்டிப்போடுகிறது.

விதியின் விஷயத்தில் ஒரு மனிதனின் அனைத்து தற்காப்பு முயற்ச்சிகளும் தவுடு பொடியாகிறது. ஒரு மனிதனின் விஷயத்தில் நடந்துமுடிந்துவிட்ட, நடக்க இருக்கிற அனைத்து விஷயங்களிலும் துஆ ஒரு மனிதனுக்கு உதவுகிறது.(பாதுகாப்பு பெற) அல்லாமா இப்னு கைய்யும் அழகாக சொல்வார் “துஆ மனதிற்கு ஒரு இதமான மருந்து, அது சோதனையின் எதிரி, சோதனையை எதிர்கொண்டு அதை தடுத்துவிடுகிறது, நடக்கவிருப்பதை தடுத்துக்கிறது, நடந்துவிட்டதை லேசாக்குகிறது.”

சரி செய்திக்கு வருவோம், அதவது மேலே உள்ள ஹதீஸுக்கு தான் துஆக்களின் இன்றைய நிலை கருதி, அதன் மேன்மை புரியவேண்டும் என்பதற்காக இவ்வளவு செய்திகளை எழுதினேன்.

சில தினங்களுக்கு முன் ( 20/07/2012) அன்று கல்லூரியில் இருந்து ஊர் திரும்பும்போது நடந்த நிகழ்வுதான் நான் இந்த ஹதீஸை எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது. திருச்சியிலிருந்து தஞ்சை வரும் பேருந்தில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடி, அதில் இருந்த பெண் முழு பர்தாவோடு இருந்தார் உடன் இருந்தவர் ஒரு மாற்று மதசகோதரர்.

இது வரை இவற்றை எல்லாம் செய்தியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு இப்படி கண்முன்னே நடக்கும் நிகழ்வு மிகுந்த வேதனையைத் தந்தது. எனக்கு மட்டுமல்ல வேறு யார் அந்த இடத்திலிருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும். ஏனெனில்,அந்த பேருந்திருந்த அத்துணை பேரின் கண்களும் அவர்களின் பக்கமே இருந்தது. வார்த்தைகளால் எழுதமுடியாத ஒரு காதல் கோலத்தில் அவர்கள். இத்துணைக்கு இடையில் அந்த பெண் தன் கண் கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்க்காக வலை (முழு பர்தா) வேறு போட்டிருந்தார்.

யார் பெத்தெடுத்த பிள்ளையோ இப்படி ஒரு நிலை என்று எண்ணி வருந்தினேன். என் வருத்தமெல்லாம் பெற்றோர்களை எண்ணியே, உடலை மறைக்க கண் வரை மூடவேண்டும் என்று செல்லிக்கொடுத்தவர்கள், மனதிற்கு போடும் பர்தாவைப்பற்றி எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.

இன்றைய தமிழகத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பழகிப்போன ஒரு செய்தியாக மாறிவருதில் முதன்மையானது இஸ்லாமிய பெண்களைப்பற்றிய செய்திகள் தலைப்புச்செய்தியாகி, பின் அடுத்த நிலைக்கு வந்து மீண்டும் கடைநிலைச்செய்தியாகி, கடைசியாக இதொல்லாம் சகஜமப்பா என்று சொல்கிற அளவிற்கு போய்விடும். வல்ல நாயன் இந்த சமுதாயத்தின் இந்த தலைமுறையையும், வரும் கால சந்ததியினரையும் பாதுகாப்பானாக.

இன்றைய நிலையில் பெண்ணை பெற்று விட்டு வயிற்றில் நெருப்பைகட்டாமல் இருக்கும் பெற்றோர் குறைவானவர்களே. சமீபத்தில் ஒரு பெண்கள் விழிப்புணர்வு மாநாடுக்கு பேச அழைக்கப்பட்டிருந்தேன். அதில் சில ஆயிரம் பெண்கள் கூடியிருந்ததாக தகவல், இறைவன் பற்றி செய்திகளை அவர்கள் வரை கொண்டு போய் சேர்த்துவிட்டோம் என்ற ஒரு  மனோநிறைவோடு இருக்கும்போது தான் இந்த கொடுமையான பேரூந்து நிகழ்வு.

என்னை பொருத்தவரையில் இனி எழுத, படிக்க தெரிந்தாலே பெண்பிள்ளைகளுக்கு போதுமானது. கல்லூரி என்பதெல்லாம் அவர்கள் செல்லக்கூடாத இடமாக ஆகிவிட்டது என்ற எண்ணம் என் இந்த கருத்தை பார்த்தவுடன், பெண்கள் கல்லூரிக்கு செல்லாவிட்டால் இப்படி நடக்காமல் இருக்குமா? விபத்து நடக்கிறது என்பதற்காக ரோட்டில் நடந்துபோகாமல் இருக்க முடியுமா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

இதில் கல்வி வேண்டாம் என்பதற்கில்லை, மாறாக இந்தக் கல்லூரியில் செல்லும் வழியில் உள்ள சுதந்திர சூழல்தான் அவர்களை இப்படிபட்ட நிலைக்கு ஆளாக்குகிறது. ஆகையால், சூழல் மீது தான் முழுக்கோபமே தவிர கல்வியின் மீது அரைக்கோபம் தான்.

இன்று கல்லூரி மாணவிகள் தான் தவறிப்போகிறார்கள் என்ற நிலை மாறி, வீட்டிலிருக்கும் பெண்களிருந்து திருமணம் முடித்த பெண்கள் வரை இந்த நிலை பரவிக்கிடக்கிறது. இதற்குரிய காரணங்கள் பல வகையாக பேசப்பட்டாலும், கல்லூரிப்பெண்ணிலிருந்து வீட்டுப்பெண்கள் என்று எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் ஒரு மிக முக்கியமான ஒரே ஒரு குறை தான் இதற்கு காரணம். நான் மேலே குறிப்பிட்டது போன்று உடலை மறைக்க பர்தா போடச்சொல்லிக்கொடுக்கும் நாம் அவர்களின் மனதிற்கு திரைப்போட மறந்துவிட்டோம் என்பது தான் உண்மையிலும் உண்மை.

அதற்காக நாம் பல காரணங்களை கூறி அவற்றை நாம் மாற்ற முயற்ச்சித்தாலும் உதாரணமாக மொபையில்,TV , இவை எல்லா உபகரணங்கள் தான். நாம் மாற்றவேண்டியது மனதை, உள்ளத்தை மட்டுமே. இந்த தளத்திலிருந்து பார்க்க்கும் போது கல்லூரி மாணவிகளிலிருந்து, வீட்டின் உள்ள பாதுகாப்பாக வைக்கப்படிருக்கும் பெண்கள் வரை சமமானவர்கள் என்ற உண்மை பளிச்சிடும்.

நாம் நம் பிள்ளைகளை B.com, B.C.A போன்ற படிப்புகள் படிக்கவைக்கிறோம், ஆனால்,திருமணம் முடித்து, நாளை சமுதாயத்தின் வேர்களாக இருக்கிறது குழுந்தைகளை பெற்றெடுத்து அவர்கள் வளர்த்து ஆளாக்கி அந்த குடும்பத்தை அழகுடன் நடத்துவதற்கு இந்த B.Comகல்வி எந்த அளவிற்கு உதவும் என்று நாம் யோசிக்கவில்லை. எந்த கல்வியை கற்றாலும், கற்க்காவிட்டலும். இறைவனும்,இறைவனின் தூதரும் எந்த கல்வியை கற்பதை கடமை என்று சொன்னர்களோ. அந்த கல்வியை இந்த சமுதாயம் அடையாமல் வேறு எந்த கல்வியை(கல்லூரி மாணவி) அடைந்தாலும்,அல்லது அதை பெறாவிட்டலும் (வீட்டுப்பெண்ணாக) இருந்தாலும் தொடர்ந்து இந்த சமுதாயம் இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும்.

ஆகையால்,யார் எந்த தளத்திலிருந்தாலும் இறைவனைப்பற்றிய கல்வி ஒன்றே அடிப்படையான ஒன்று. அதை அடிப்படியாக வைத்து வேறு கல்விகள் பயின்றாலும் பலனே, இல்லை வெறுமேனே வீட்டிலிருந்தாலும் பயனே! ஆகையால், இது குறித்து தொடர்ந்து எழுது, பேசி வந்தாலும் நாம் மாற்றத்திற்க்கு அடிகோலியவர்களாக ஆகமாட்டோம். அந்த அடிப்படையில் கல்வி ஒரு முழுமையான மாற்றம் ஏற்பட்டு ஒரு புரட்சி ஏற்படவேண்டும். கூடிய விரைவில் அந்த புரட்சி நடந்தே ஆகவேண்டும்.

நாம் அதில் முனைப்பு காட்டாவிட்டால் அல்லாஹ் மாற்றார்களைக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான். ஆகையால், இது ஒரு அவசரகால நடவடிக்கையாக செய்யவேண்டிய ஒரு செய்தி. இதில் காலதாமதம் செய்ய செய்ய ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பேற்க போவது நம் ஒவ்வொருவருமே..

ஆகையால், உடலால், பொருளால் இந்த மாற்றத்திற்கு உதவிசெய்யலாம் என்று எண்ணுபவர்கள் தொடர்புகொள்ளலாம்.

ஆனால், அவசகால நடவடிக்கை உடனே எடுக்கப்படவேண்டும். வெறும் ஆலோசனையும், ஐடியாக்கள் சொல்லுவர்கள் நம்க்கு தேவையில்லை. ஏனெனில் உலகில் இலவசமாக கிடைக்கும் பொருட்களில் மிக தாழ்ந்தது ஆலோசனைகள் மட்டுமே.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மேலே சொல்லப்பட்ட இந்த ஒரு அற்புதமான துஆவை இந்த ரமளானின் தொடர்வோம்

யாஅல்லாஹ் எங்களின் எல்லா நிலைகளிலும் எங்களை இஸ்லாமிய விளிம்பில் வைத்து பாதுகாப்பாயாக,எங்கள் குடும்பத்தார்களையும் பாதுகப்பாயாக.

இந்த ரமளானின் வித்ரு தொழுகையில் கூட்டாக சேர்ந்து துஆ கேட்போமாக. அருள்பொருந்திய ரமளானின் பரக்கத்தால் தமிழகத்தில் இந்த நிலை மாற இறைவனிடம் அழுது கேட்போமாக.

சில மாதங்களுக்கு முன் எங்கோ நடந்த ஒரு செய்தி, சென்ற மாதங்களில் நம் ஊர்களிலும் நம் தெருவிலும் நடக்கும் செய்தி இன்னும் என் வீட்டை தொடவில்லை என்று மேலேண்ணத்தொடு வானத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். பின் நமக்கே அது நிகழ்ந்துவிட்டால் ஒப்பரி வைத்து அழுவோம். அதற்குமுன்பே ஒரு அறிவார்ந்த மூஃமினாய் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்போமாக.

மாற்றம் ஏற்படவேண்டுமானால் முழு கல்வித்திட்டதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஏற்பட இறைவன் நம்மை காரணமாக ஆக்குவானாக, அல்லது அதற்கு உழைப்பவர்களோடு துணை நிற்க செய்வானாக. இந்த துஆவை ஒவ்வொரு தொழுகையிலும் தொடர்வோம். நம்மை, நம் சந்திகளின் பாதுகாப்பை இறைவனிடம் இஸ்லாமிய வழியில் ஒப்படைப்போம்.

 - பேரா. இஸ்மாயில் ஹஸனீ






No articles in this category...