Tamil Islamic Media

உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!

தஞ்சாவூரின் பிரபல தனியார் மருத்துவமனை அது. பரபரப்பான அந்த மருத்துவமனையின் தனி அறை ஒன்றில் அலறுகிறார் ராஜப்பா. ஒரு மாதத்துக்கு முன், சாதாரண சளித் தொந்தரவு வந்தது ராஜப்பாவுக்கு. மருத்துவரைச் சென்று பார்த்தார். மருத்துவர் தந்த மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஆனால், எப்போதும்போல சளி குணமாக வில்லை. வாரங்களைத் தாண்டி நீடித்தது. சில நாட்களுக்கு முன் அவருடைய வயிறு வீங்க ஆரம்பித்தது. சிறுநீர் பிரியவில்லை. மலம் கட்டிக்கொண்டது. தொடர்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தார். இப்போது அவருடைய சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிக்கொண்டு இருக்கின்றன. மருத்துவர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.

ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி? எது அவரை இந்த நிலைக்குத் தள்ளியது? இது ஒரு புது வகைக் கோளாறு. மருந்து எதிர்ப்புச் சக்திப் பிரச்னை (Drug resistant problem) என்று இதற்குப் பெயர். அதாவது, அதீதமான மருந்துப் பயன்பாட்டால், ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.

ராஜப்பா ஒரு தவறு செய்தார். மருத்துவர் எவ்வளவு மாத்திரைகளை எழுதினாலும், எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே எடுத்துக்கொள்வார். ராஜப்பாவின் மருத்து வர் ஓர் அதிரடி ஆசாமி. சாதாரணக் காய்ச் சல், ஜலதோஷத்துக்கே நான்கு மாத்திரை கள் எழுதுவார். அந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் நான்கு மருந்துச் சேர்க்கை கள் இருக்கும். இப்படிப்பட்ட அதிரடி மருத்துவர்கள்தான் இந்தப் புதிய நோயின் பெற்றோர்கள். இன்றைக்கு ராஜப்பா; நாளைக்கு நீங்களாக இருக்கலாம்!

ஏனென்றால், வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறது சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்’ (சி.டி.சி.). சமீபத்தில் இந்தியா வந்திருந்த இந்த மையத்தின் இயக்குநர் தாமஸ் ஃப்ரிடா, ''முறையற்ற மருந்துப் பயன்பாடு இந்தியாவை மிகப் பெரிய துயரத்தில் கொண்டுபோய்விடப்போகிறது'' என்று வெளிப்படையாக எச்சரித்து இருக்கிறார்.

சக்திவாய்ந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும், எந்தப் பரிசீலனை யும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் மிகமிக அதிகம். இந்தியாவின் 50 ஆயிரம் கோடி மருந்துச் சந்தையில் தேவையற்ற மருந்துகளின் விற்பனை 60 சதவிகிதத்துக்கும் அதிகம். குறிப்பாக, 80 சதவிகித ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.

ஜலதோஷம் ஏற்பட 80 சதவிகிதம் வைரஸ் தொற்றுதான் காரணம். ஆனால், ஜலதோஷத்துக்குத் தரப்படும் 80 சதவிகித மருந்துகள் ஆன்டிபயாடிக்குகள் என்கின் றன மருந்து விற்பனைப் புள்ளிவிவரங்கள். அதாவது, ஆன்டிவைரல்கள் தேவைப்படும் இடங்களில்கூட ஆன்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஒரு சாதாரண ஜலதோஷத்துக்கான சிகிச்சையை ஒரு நல்ல மருத்துவர் நோயாளியை ஆவி பிடிக்கச் சொல்வதில் இருந்து தொடங்கலாம். கை வைத்தியம் பலன் அளிக்காத நிலையில் மருந்து. உதாரணமாக, 'கோ டிரைமாக்ஸஸோல்’ அல்லது 'அமாக்ஸிசிலின்’ மருந்துகளை நோக்கி அவர் செல்லலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே ஒரு மருத்துவர் 'அமாக்ஸிசிலின் பொட்டாசியம் க்ளாஉல்னெட்’ மருந்தைப் பரிந்துரைக்கிறார் என்றால், அதன் பின்னணி எளிமையானது. 10 மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டை 'கோ டிரைமாக்ஸஸோல்’ விலை 7; 'அமாக்ஸி சிலின்’ விலை 30. 'பொட்டாசியம் க்ளாஉல்னெட் அமாக்ஸிசிலின்’ விலை 210. அதாவது, மருந்துக் கடைக்காரருக்கு 600 சதவிகிதம் முதல் 2,900 சதவிகிதம் வரை கூடுதல் விற்பனை. மருத்துவர் எந்த நிறுவனத்தின் மருந்தைப் பரிந்துரைக்கிறாரோ, அந்த மருந்து நிறுவனம் மூலமாகவும் மருந்துக் கடை மூலமாகவும் மருத்துவருக்கு லாபத்தில் பங்கு போகும். மருத்துவரே மருந்துக் கடைக்காரர் என்றால், இன்னும் லாபம். தவிர, சீக்கிரமே நோயைக் குணப்படுத்திவிடுகிறார் என்று நோயாளிகளிடம் நல்ல பெயரும் கிடைக்கும். இப்படித் தேவை இல்லாமல் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொள்வது எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைக் கொன்றுவிடும் என்று எந்த நோயாளிக்குத் தெரியப்போகிறது?

அமெரிக்காவையோ, ஐரோப்பிய நாடுகளையோபோல எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவச் சிகிச்சை முறை இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை. மருத்துவர்களைக் கண்காணிக்க வலுவான சட்டங்களோ, கண்காணிப்பு அமைப்புகளோ நம்மிடம் இல்லை. அரசின் பொறுப்பின்மையால், மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகளாக்கிக்கொண்டு இருக்கின்றன.

சென்னையில் இந்தக் கல்வி ஆண்டில் ஒரு எம்.பி.பி.எஸ். இடம் 50 லட்ச ரூபாய் வரை பேரம் போகிறதாம். மும்பையில் எம்.டி. இடம் கடந்த ஆண்டே ஒரு கோடியைத் தாண்டி போணியானது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

இத்தகைய செய்திகளின் எதிரொலி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!






No articles in this category...