தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
இரண்டாவது பகுதி:
உயிர் வாங்குமுன் ஷைத்தானோடு ஏற்படுகின்ற சந்திப்பு மற்றும் உயிர் வெளியேறுகிற அமைப்பு:
கடுமையான வலியை எனக்குள் உணர்ந்தேன் மேலும் ஏதோ ஒரு விதமான பயங்கரத்தையும் அறிந்தேன் ஏதோ நடக்கப்போகிறது என்பது எனக்கு பட்டது, இதுதான் எனது முடிவா? எனது மனதில் கூறியவாறு சிந்திக்க ஆரம்பித்தேன்.
சுப்ஹானல்லாஹ்!!
இதன் பின் கைசேதப்பட ஆரம்பித்தேன் என் வாழ்நாளில் வீனாகக் கழிந்த ஒவ்வொரு வினாடிகளும் என்மூலம் ஏற்பட்ட ஒவ்வொரு குறைபாடுகளும் என்னை வெட்கிக்க வைத்தது !!
இப்பொழுது தப்பிக்க முடியாத ஒரு உண்மையிற்கு முன்னிலையில் நான் இருக்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ள சப்தங்களெல்லாம் மறைய ஆரம்பித்தது, என் கண்களுக்கு முன்னிலையில் இருள் சூழ ஆரம்பித்து, கத்தியை வைத்து வெட்டுகிற மாதிரி உடம்பிலே வலி, ஏதோ ஒன்று கழுத்தை நெறிக்கிற மாதிரி உணர்வு, என் கிட்னிக்கு ஆக்ஸிஜன் போகவில்லை, தலையிலே ஒரு வலி குறிப்பாக அடி விழுந்த இடத்திலே நெருப்பு எரிகிற மாதிரி வேதனை,
எனக்கு முன் உள்ள இருளில் ஒரு வெண்ணிற தாடியுடைய மனிதர் தோன்றி என்னிடம் சொன்னார் : மகனே! இது உனது கடைசி வினாடிகள், உன் ரப்பை சந்திப்பதற்கு முன் உனக்கு உபதேசம் செய்ய வந்துள்ளேன், நீ நல்லதை விரும்புகின்ற புத்திசாலி என எனக்கு நன்கு தெரியும், அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான் எனவே உனக்கு ஒரு உபதேசம் செய்கிறேன்,
நான் : உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன் ?
அவர் : சிலுவை வாழ்க! என சொல், சத்தியமாக! அதுவே உனக்கு ஜெயம்!! என்றான், இதை நீ ஈமான் கொண்டால் உன்னை உனது குடும்பத்தினரிடமும் உன் குழந்தைகளிடமும் திருப்பி அனுப்பி, உன் உயிரையும் உனக்கே திருப்பி கொடுத்து விடுவேன். சீக்கிரம் சொல்லு! சந்தேகப்படுறதுக்கோ, தாமதப்படுத்துறதுக்கோ இது நேரமில்லை என்றான்
நான் : அவன்தான் ஷைத்தான் என்று தெரிந்து கொண்டேன்.
நான் எவ்வளவுதான் வலி (வேதனையிலே) கஷ்டப்பட்டாலும் என் ரப்பு இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்; மீது ரொம்பவே நம்பிக்கை இருந்தது,
நான் : ச்சீ அல்லாஹ்வின் விரோதியே! நான் முஸ்லிமாகவே வாழ்ந்தேன், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதன் மீதே இறப்பேன் என்று அவனிடம் சொன்னேன்,
அவனது (ஷைத்தானது) முகம் மாறிவிட்டது அதோடு சொன்னான் : நல்லா கேட்டுக்கே! நீ கிரிஸ்தவனாகவோ யூதனாகவோ மரணித்தால்தான் உனக்கு நிச்சயம் ஜெயம், இல்லையெனில் வலி (வேதனை)யை கூட்டிடுவேன், உயிரையும் வாங்கிடுவேன் என்றான்,
நான் : மௌத்து, ஹயாத்து எல்லாம் அல்லாஹ் கையிலே இருக்கு, உன் கையிலே இல்லை, நான் முஸ்லிமாகவே மரணிப்பேன் என்றேன்,
அவன் மூஞ்சு (கோபத்திலே) சிவந்துடுச்சி,
அவன் : இதுக்கு முன்னாடி பல பேரை வழி கெடுத்து அவங்கலெல்லாம் வழி கெட்டுப்போவலையா? சரி.. எப்படியோ உன்னை அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைச்சு, அதுவும் தைரியமா அந்த பாவத்தை செய்ய வைக்க என்னாலே முடிஞ்சுது, அதுவே எனக்கு போதும் என்றான் திடீரென ஏதோ பயப்படுகிறமாதிரி ஒன்றை மேலே பார்த்தான், அதோடு வேகமா ஓடிட்டான், வேகமாக திரும்பி ஓடிப்போனது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, அவன் ஓடி விடுவதற்கு அப்படி என்ன வந்தது என்று விடை தெரியாமல் இருந்தேன், திடீரென அறிமுகமற்ற மற்றும் மிகப்பெரிய உடல்களைக் கொண்ட சில முகங்களை அங்கே கண்டேன், அவர்கள் இறங்கி:
அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்
நான்: வஅலைக்குமுஸ்ஸலாம் என்றேன்
அவர்கள் : அமைதி காத்தனர், ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவர்களிடம் கஃபன் துணிகள் இருந்தன,
நான் : இறுதியாக: நிச்சயம் அவர்கள் மிகப்பெரிய மலக்குகள்தான் இறங்கியிருக்கிறார்கள் என நான் தெரிந்து கொண்டேன்
அவர்களில் ஒருவர் : அமைதியடைந்த ஆத்மாவே! இறைவனது மன்னிப்பு மற்றும் திருப்பொருத்தத்தை நோக்கி வெளியேறி வா என சொன்னார், இவ்வார்த்தைகளை செவியுற்றபின் வர்ணிக்க முடியாத நற்பாக்கியத்தை உணர்ந்தேன் மேலும் அவரிடம் : அல்லாஹ்வின் மலக்கே! மிக சிறந்த நற்செய்தி என்றேன்.
அவர் என் உயிரை உருவிக் கொண்டார்
தற்பொழுது நினைவிற்கும் கனவிற்கும் இடையில் இருப்பது போன்று உணர்ந்தேன், மேலும் என் உடலுடன் எழுந்திருப்பதுபோலும் கீழே திரும்பிப்பார்த்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வது போன்றும் எனக்குத் தெரிந்தது, இந்நிலையில் என் உடலைக்கண்டேன் பலர் (மனிதர்கள்) என் அருகில் கூடி என் உடலை முழுமையாக மூடி விட்டாhர்கள் அவர்களில் சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வதையும் செவியுற்றேன்.
இரு வானவர்களைக் கண்டேன், என் உடலை பெற்றுக்கொண்டு தான் கொண்டுவந்த கஃபனில் அவசரம் அவசரமாக வைத்து என்னை வான்(மேல்) நோக்கி கொண்டு செல்வதுபோல தெரிந்தது, அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன், மிகத் தொலைவில் உள்ள ஆகாயத்தைப் பார்த்தேன், என் உயரம் அதிகரித்துக் கொண்டே சென்றது, மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்கிறேன், நான் விமானத்தில் செல்வது போல எனக்கு கீழே உள்ளவை யாவும் மிகச் சிறியதாக தென்படுகிறது, இன்னும் உயரம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது, என் கீழே பூமியைப் பார்த்தேன் ஒரு சிறிய பந்து போன்று காட்சியளித்தது.
நான்: பின்னர் அவ்விரண்டு வானவர்களிடமும் : அல்லாஹ் என்னை சுவர்க்கத்தில் நுழையவிடுவானா? என்றேன்
வானவர்கள் : இதைப்பற்றி அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும், நாங்கள் உயிர்களை பெற்றுவருவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளோம், நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டவர்கள் என்றனர்.
என் பேச்சை நிறுத்திக்கொள்ள:
இந்நேரத்தில் சில வானவர்கள் எங்களை கடந்து மிக வேகமாக சென்றனர், அவர்களோடு ஆச்சரியமான ஓர் உயிர் இருந்தது அதன் நறுமணம் என்றுமே நுகர்ந்திராத ஒரு கஸ்தூரி போன்று கமழ்ந்தது,
நான் :ஆச்சரியப்பட்டு அந்த வானவர்களிடம் இது யார்? நபி முஹம்;மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்தான் இறுதி நபி என எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் இது எனது நபியவர்களின் உயிர் என சொல்லியிருப்பேன் என நான் அவர்களிடம் சொன்னேன்.
அவர்கள் : அதற்கு அவ்விருவரும் : இல்லை (மாறாக) இது பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஒரு தியாகி (ஷஹீத்) வுடைய உயிர், யூதன் ஒருவன் சற்று முன் கொன்று விட்டான், தன் நாட்டிற்காகவும் தன் மார்க்கத்திற்காகவும் எதிர்த்துப் போராடியவர், அவரது பெயர் அபுல் அப்த் எனப்படுகிறது, அல்லாஹ் அவரிடம் (ஜிஹாத்) தியாகப் போரையும் வணக்க வழிபாட்டையும் சேர்த்தே கொடுத்திருந்தான் என்றனர், நான் : நானும் ஒரு ஷஹீத் ஆக மரணித்திருக்கலாமே! என்றேன் பின்னர் அதே வேளையில் திடீரென மற்றும் சில வானவர்களைப் பார்த்தேன், அவர்களிடம் ஒரு உயிர் இருந்தது அதிலிருந்து கடுமையான துருவாடை வந்து கொண்டிருந்தது இது யார் என நான் கேட்டேன்? அதற்கவர்கள் : இது மாடு வணங்கியின் உயிர், சற்று நேரத்திற்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட புயல் காரணமாக மரணித்தவர் என்றனர். உடனே அல்லாஹ் எனக்கு வழங்கிய இஸ்லாமிய அருட்கொடையின் மீது அல்ஹம்து லில்லாஹ் என சொன்னேன்
நான் : என்ன நடக்கும் என எவ்வளவுதான்; நிறையவே படித்திருந்தாலும்; இந்த அளவுக்கு நடக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
அவ்விருவர்: நற்செய்தி பெறு இருந்தாலும் உனக்கு முன் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள் என்றனர்.
நான்: ஆச்சரியத்தோடு அப்படி என்ன ? என கேட்டேன்
அவ்விருவர் : விரைவில் அந்த அனைத்தையும் பார்ப்பாய் ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அல்லாஹ் விஷயத்தில் நம்பு என்றனர் நாங்கள் மலக்குகளின் கூட்டத்தைக் கடந்து சென்றோம் அவர்களுக்கு சலாமும் சொன்னோம்
அவர்கள்: இது யார் என (என்னைப்பற்றி என்னைக்கொண்டு சென்ற வானவர்களிடம்) விசாரித்தனர்
அவ்விருவர்; : முஸ்லிமான மனிதர், சற்று முன் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது, அவரது உயிரை மலக்குல் மௌத்திடமிருந்து வாங்கி வருமாறு இறைவன் எங்களுக்கு ஆணை பிரப்பித்திருந்தான் என்றனர்
அவர்கள் : அவன் (அல்லாஹ்) முஸ்லிம்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் வழங்கியுள்ளான் அது அவர்களுக்கு நல்லது மற்றும் அவர்கள் என்றும் நல்லவற்றிலே இருப்பார்கள் என்றனர்.
நான்: இவ்விரு மலக்குகளிடம் இவர்கள் யார் என கேட்டேன்
அவ்விருவர் : இவர்கள் தான் வான்-காவலர்கள், ஷைத்தானின் மீது நெருப்புக் கங்குகளை வீசுகின்றனர் என்றனர்.
நான்: இவர்கள்தான் படைப்பால் மிகப் பெரியவர்களா!! என்றேன்
அவ்விருவர்;: இவர்களைவிட மிகப்பெரிய மலக்குகள் இருக்கிறார்கள் என்றனர்
நான் : யார் அது என்றேன்
அவ்விருவர்;: ஜிப்ரயீல் மற்றும் அர்ஷை சுமப்பவர்கள், அவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒருவர், அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யவே மாட்டார்கள், அவர்களுக்கு ஆனை பிறப்பிக்கப்பட்;டதை அப்படியே செய்வார்கள் என்றனர்
நான் : சுப்ஹானக் ரப்பே! எந்த அளவுக்கு வணங்கவேண்டுமோ அந்த அளவுக்கு உன்னை நான் வணங்கவில்லையே! என்றேன். பின்னர் : உலக வானம் வரை போய்ச் சேர்ந்தோம்
நான் : ஆச்சர்யம் மற்றும் ஆர்வத்துடன் எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ அதையும், எது இனிமேல் நடக்க இருக்கிறதோ அதைப்பற்றி எனக்குள்ள அச்சத்தையும் பீதியையும் உங்களிடம் நான் மறைக்கவில்லை. உலக வானத்தை மிகப்பெரியதாக பார்த்தேன், அதன் வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன, ஒவ்வொரு வாயலிலும்; மிகப்பெரிய வானவர்கள் நின்றிருந்தனர்.
இவ்விருவர் : இவ்விரு வானவர்களும் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர், நானும் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அந்த வானவர்கள் : வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு என்று சொல்லியவாறு, ரஹ்மத்தின் மலக்குகளே! வாருங்கள், என்றவாறு அவர்கள் சற்று கூர்ந்து பார்த்துவிட்டு இவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் ? என்றனர்
அவ்விருவர் : ஆம் என்றனர்
அந்த வானவர்கள் : வருக! வருக! ஏனெனில் இவ்வானம் முஸ்லிம்களுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன ஏனெனில் அல்லாஹ் : இறைநிராகரிப்பாளர்களின் விஷயத்தில் : لاَتُفْتَحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاءِ (லா-துஃப்தஹு லஹும் அப்வாபுஸ் ஸமாயி) அவர்களுக்காக வானின் கதவுகள் திறக்கப்பட மாட்டாது (அல் குர்ஆன் 7:40) என கூறியுள்ளான் என்றனர். நாங்கள் நுழைந்தோம்
அங்கு கண்ட பல ஆச்சரியங்களில் ஒன்று : கஃபா போன்று மிகப்பெரிய ஒன்றை பார்த்தேன் அதை ஏராளமான வானவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர், இது நிச்சயம் ''பைத்துல் மஃமூர்' தான் என உடனே சொன்னேன்,
இருவானவர்கள் : இருவரும் புன்முறுவலிட்டனர் மேலும் சொன்னார்கள் : அல்ஹம்து லில்லாஹ், இங்கு நாங்கள் கொண்டுவருகின்ற முஸ்லிம்களில் பலர் இது பற்றி அறிந்திருக்கின்றனர், இது அல்லாஹ்வின் அருள் மற்றும் அந்த நல்ல மனிதர் உங்களது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களில் சிறப்பின் காரணமாகத்தான் ஏற்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் எதையும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் விடவில்லை என்றனர்.
நான் : அவர்களிடம் எத்தனை வானவர்கள் இதில் நாள்தோறும் நுழைகின்றனர் என்றேன்
அவ்விருவர்: 70 ஆயிரம் ஆனால் அவர்கள் வலமிட்டு வெளியேறிவிட்டால் வலமிட திரும்ப வரமாட்டார்கள் என்றனர்
பின்னர் வேகமாக உயர்ந்து இரண்டாவது வானத்தை சென்றடைந்தோம் இவ்வாறாக ஏழாவது வானத்தை சென்றடைந்தோம், அது மிகப்பெரிய வானமாக இருந்தது, அங்கே மிகப்பெரிய கடல் போன்று கண்டேன், வானவர்கள் அனைவரும் தன் சிரங்களைப் பணித்தனர் மேலும் அவ்விரு வானவர்களும் : اللّهُمَّ اَنْتَ السّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ وَ تَبَارَكْتَ ياَذاَ الْجَلاَلِ وَ الْاِكْرَامِ (அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வ மின்கஸ்ஸலாம் வ தபாரக்த்த யா-தல்ஜலாலி வல்இக்ராம்) இறைவா! நீயே அமைதி தருபவன் மேலும் உன்னிடமிருந்தே அமைதி உருவாகின்றது மேலும் கம்பீரமும் மகிமையும் உரியவனே! நீயே அபிவிருத்தி நிறைந்தவன் என்றனர்
நான் : ஒரு வித மரியாதை கலந்த பயத்தை உணர்ந்தேன் மேலும் நானும் என் சிரத்தை பணித்தேன் என் கண்கள் கண்ணீர் விட்டன
அல்லாஹு: (ரப்புல் இஜ்ஜத்- அல்-அஜீஜ் அல்-ஜப்பார்) சொன்னான் எனது அடியானுடைய பதிவேட்டை இல்லிய்யீனிலே எழுதுங்கள் மேலும் அவனை பூமியின் பக்கம் திரும்ப கொண்டு செல்லுங்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அவர்களை அதிலிருந்தே படைத்தேன் மேலும் அதிலேயே அவர்களை திருப்பி அனுப்புவேன் மேலும் அதிலிருந்தே அவர்களை அடுத்த முறையும் வெளியாக்குவேன் (அல் குர்ஆன் 20:55) என்றான்.
கடுமையான அச்சம் மற்றும் பயம் கலந்த மகிழ்ச்சியின் காரணமாக என்னால் பேச முடியவில்லை மாறாக : சுப்ஹானக (நீ பரிசுத்தமானவன்) எந்த அளவுக்கு வணங்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே! என நான் சொன்னேன்.
என்னை அவ்விரண்டு வானவர்களும் உடனே கீழே இறக்கினார்கள், பல வானவர்களைக் கடந்து வந்தோம், பார்க்கும் யாவருக்கும் சலாம் கூறியவாறு வந்து கொண்டிருந்தோம்
நான்: அவ்விரண்டு மலக்குகளிடமும் என் உடல் மற்றும் குடும்பத்தினர் பற்றி விசாரித்தேன்
அவ்விருவர்: இதோ நீ பார்ப்பது தான் உன் உடல், உன் குடும்பத்தினர்களில் உனக்காக செய்து அனுப்பி வைக்கக்கூடிய செயல்கள் வந்து சேரும் ஆனால் நிச்சயமாக அவர்களை நீ பார்க்க முடியாது என்றனர், என்னை தரையில் இறக்கி விட்டு அவ்விருவரும் சொன்னார்கள்:
உன் உடலுடன் நீ இருப்பாய், எங்களது பணி முடிந்து விட்டது, மற்ற வானவர்கள் கப்ரில் உன்னிடம் வருவார்கள்.
நான் : அவர்களிடம் بَارَكَ اللهُ بِكُمَا وَ جَزَاكُمَا خَيْرَ الْجَزَاءِ (பாரகல்லாஹு பி(க்)குமா வ ஜஸாக்குமா கைரல் ஜஸாயி); அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்யட்டும் மேலும் உங்கள் இருவருக்கும் நல்ல அழகிய கூலியை தரட்டும் என்றேன்
மேலும் அவர்களிடம் : திரும்ப உங்களை சந்திக்க முடியுமா? என்றேன்.
அதற்கவர்கள் : கியாம நாளில் கூடவே நாங்களும் நிற்போம், அது அனைத்தையும் கண் முன் கொண்டுவரும் நாள் என்றனர், கியாம நாள் என்றவுடன் அவர்கள் சப்தங்கள் பயத்தால் தடுமாறிவிட்டது
பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.
அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன், என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.
என் மனதில் சொல்லிக் கொண்டேன் : அல்லாஹ்வே! நான் என் உடலை அல்லாஹ்வின் பாதையில் சமர்ப்பித்து நான் ஒரு ஷஹீதாக இறந்திருக்கலாமே! என்றும், அல்லாஹ்வின் ஞாபகத்திலே அல்லது தொழுகையிலே அல்லது வணக்க வழிபாட்டிலேயே எல்லா நேரத்தையும் கழித்திருக்கலாமே என்றும், இரவு பகலாக நான் பல தருமங்கள் செய்திருக்கலாமே என்றும் பலவாராக எண்ண ஆரம்பித்துவிட்டேன், என் கவலையெல்லாம் கப்ரில் என்ன நடக்கப் போகிறதோ என்பதைபற்றித்தான்.
குளிப்பாட்டுபவர் : அஸருக்குப்பின் தொழ வைக்கப்போகிறீர்களா? என விசாரிப்பதை நான் செவியுறுகிறேன்
என் தந்தை : அழுது கொண்டே இன்ஷா அல்லாஹ் என சொன்னார்கள், என் உடலை குளிப்பாட்டிவிட்டு எடுத்து செல்கின்றனர், என் உடலைப் பார்க்கிறேன், ஒதுங்கி விடவோ அல்லது உள்ளே நுழைந்து விடவோ என்னால் முடியவில்லை, ஆச்சர்யமான திகைப்பில் ஆக்கக் கூடிய விஷயம், என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்தில் என்னை நுழைத்து விட்டனர் ஆனால் அது மய்யித்கள் வைக்கக்கூடிய ஐஸ் பெட்டி என்பதை உணர்ந்தேன், எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.
மிகப்பெரிய சப்தம், வந்து தூக்குங்கள் என சொல்வது என் சிந்தனையை முறித்து விட்டது, என்னை உயர்த்தித் தூக்கினார்கள்;, அவர்களின் அழும் சப்தத்தை செவியுற்றுக் கொண்டே இருக்கிறேன், என் தந்தையின் அழும் ஓசை என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆக்கியது, என் தந்தையே! கவலைப்படாதீர்கள் அல்லாஹ்விடம் எதுவுள்ளதோ அதுவே மிக சிறந்தது, தந்தை அவர்களே! நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், எனக்காக அழாதீர்கள், சத்தியமாக இது என் மனதை புண்படுத்துகிறது, எனக்காக துஆ செய்யுங்கள், இதுவே எனக்குத் தேவை என சொல்லலாம் என நான் ஆசைப்பட்டேன், நான் பல ஓசைகளைக் கேட்கிறேன், என் சகோதரர்களின் ஓசையையும் அவர்கள் அழுவதையும், அதைப்போலவே என் சாச்சா பிள்ளைகளின் ஓசையையும் பிரித்துணர முடிந்தது, என் நண்பர்களில் ஒருவர் : அல்லாஹ் அவரை மன்னிக்கட்டும், அல்லாஹ் அவர் மீது இரக்கப்படட்டும் என சொல்ல வேண்டுமென பிறருக்கும் அறிவூட்டியது தாகித்தவனுக்கு குளிர்ந்த நீர் கொடுத்தது போன்று இருந்தது.
பள்ளியில் தொழ என்னை இறக்கிவைத்துவிட்டு அவர்கள் தொழும் சப்தத்தை நான் செவியுறுகிறேன், நான் அவர்களோடு தொழ வேண்டும் என ஆசைப்பட்டேன், நீங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் உங்களின் நன்மைகள் அதிகரிக்கின்ற உலகில் இருக்கிறீர்கள், நானோ எல்லா அமல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன என நானே சொல்லிக்கொண்டேன்.
மக்கள் தொழ தயாரான பின்னர் முஅத்தின் (மோதினார்) ஒரு ஆண் மையித்திற்காக தொழவைக்கப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! என்றார், இமாம் தொழவைக்க நெருங்கி தொழுகையும் ஆரம்பித்து விட்டது, தொழுகையின் இடையில், மலக்குகளின் கூட்டம், தொழுகையாளிகளின் எண்ணிக்கையைப்பற்றியும், இதில் எத்தனை பேர் இணைவைக்காமல் ஒரே இறைவனை ஏற்றவர்கள் என்பது பற்றியும் ஒருவர் மற்றொருவருடன் விசாரித்துக் கொள்கின்றனர்,
மூன்றாவது தக்பீர், இதிலேதான் எனக்காக துஆ செய்யும் முறை வருகிறது, வானவர்கள் பல விஷயங்களை எழுதினார்கள் உடனே இவர்கள் மக்களின் துஆவை கணக்கிடுகிறார்கள் என தெரிந்து கொண்டேன், யா அல்லாஹ்! இமாம் இந்த தக்பீரை கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே! என ஆசைப்பட்டேன் ஏனெனில் ஒரு வித மன அமைதி, மகிழ்ச்சி, நற்பாக்கியம் மற்றும் ஒரு ஆச்சர்யத்தைப் பார்;த்தேன்,பின்னர் நான்காவது தக்பீர் சொல்லி சலாம் கொடுத்து விட்டார்.
என்னை கப்ரை நோக்கி தூக்கிச் சென்றார்கள், அங்கு பல ஆச்சரியங்களும் பல திகில்களும் இருந்தன.
- அபூ யஹ்யா
தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி.
பார்க்க: தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3)
ஜனாஸா தொழுகை எவ்வாறு தொழ வேண்டும்..( நாம் சரியாக தொழுதால் தான் நமக்கு சரியாகத் தொழுவார்கள்.)
No articles in this category... |