ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
முஹம்மத் பகீஹுத்தீன்
காசாவில் சொல்லப்படாத சோகக் கதைகள் அயிரமுண்டு. இது சோகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியான ஒரு கதை.
காசாவில் 15 மாதங்கள் நீடித்த இடைவிடாத தாக்குதல்களில் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் பெரும் உயிரிழப்புகளுக்கு பின்னர் 19 ஜனவரி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
யுத்த நிறுத்தம் அமலுக்கு வந்து 12 நாட்களின் பின்னர் இந்த சம்பவம் நடந்தது.
காசாவின் வடக்கு கபளீகரம் செய்யப்பட்ட போது ஒரு பெண் தனது குடும்பத்துடன் தெற்கே இடம்பெயர்ந்தாள். அவள் தெற்கில் இருந்தபோது தனது கணவர் இறந்த செய்தி தான் அவள் காதுக்கு எட்டியது.
யுத்தம் தந்த துன்பியல் பரிசு நிர்பந்த இடம்பெயர்வு. அந்த சோதனையில் வந்த துயரம் கணவனின் மரணச் செய்தி. அந்த நேரத்தில் அவள் கர்ப்பமாக இருந்தாள். கூடவே பிரசவ வலியும் வந்தது. சோதனை மேல் சோதனை வந்தாலும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட போராளிகள் காசா மக்கள்.
காசா பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. துணிவுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்கள். அந்த போர் கால கெடுபிடிகளுக்கு மத்தியில் குழந்தையை பெற்றெடுத்தாள்.
போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.
அவள் தன் வீட்டிற்கு வந்தபோது, அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கதவைத் திறந்ததும், உள்ளே தன் கணவன் இருப்பதைக் கண்டாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. துயரத்தின் இருளுக்கு உள்ளிருந்து ஒளி வீசியது. வாழ்கை ஒளிமயமானது. நீடித்த தொடர் துன்பம் என்றொன்றில்லை. இடையே ஒரு விடுதலை வரவே செய்யும் என்பது குர்ஆனிய சிந்தனை.
அவளது கணவன் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தாய் மண்ணை காப்பதற்காக விடுதலை போராளிகளுடன் களத்தில் இருந்து விட்டு இன்று தனது மனைவியைப் காணும் ஆவலுடன் வீடு திரும்பியுள்ளார். பேரதிர்ச்சி கொடுத்து தனது மனைவியையும் குழந்தையையும் வரவேற்றுள்ளார்.
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி.
வாழ்க காசா!
© TamilIslamicAudio.com