மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது.
ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும் குற்றச் செயல் அது. அல்லாஹ்வின் கிருபையால் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நபிகளார் விசாரித்தார்கள். அதற்கு அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத உமர் (ரலி), "இறைத்தூதரே! இவர் நயவஞ்சகர். இவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள்'' என்றார்.
அப்போது நபிகளார்: "உமரே! இவர் பத்ர் போரில் கலந்துகொண்டவர். பத்ரில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, "நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்'' என்று அல்லாஹ் கூறியது உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். அதுகேட்ட உமர் (ரலி) அழுதுவிட்டார். (புகாரி)
ஒருவரிடம் ஒரு தவறைக் கண்டால் அவரது கடந்த கால நன்மைகளை உடனடியாக நாம் மறந்து போகிறோம்.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?
தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
எய்யப்படும் அம்புகள் எல்லாம் இலக்கை துல்லியமாக தாக்குவதில்லையே. யானைக்கும் அடி சறுக்கத்தான் செய்யும்.
மனைவியின் ஒரு தவறு, கணவனின் ஓர் அலட்சியம், பிள்ளையின் ஒரு கவனக் குறைவு, பணியாளரின் ஒரு குற்றம், நண்பனின் ஒரு புறக்கணிப்பு என அனைத்தையும்…
"அவருக்கும் ஒரு பத்ர் இருக்கும்'' என்ற கண்ணோட்டத்தில் நோக்குவோம்.
ஒரேயொரு தவறுக்காக ஒருவரது கடந்த கால நன்மைகளை உதாசீனம் செய்ய வேண்டாம்.
மனிதர்கள் எல்லோரும் எப்போதும் மலக்குகளாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பாக்கிறோம்?
- நூஹ் மஹ்ழரி
© TamilIslamicAudio.com