இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலுவைப் படையினருடன் நிகழவிருக்கும் போர்களில் அவ்விரு அமைப்புகளின் பங்கும் செயல்பாடுகளும் வெகு முக்கியமானவையாக அமையப் போகின்றன என்பதால் அவர்கள் உருவான காலகட்டத்தை நாம் கடந்துகொண்டிருக்கும் போதே, அவர்கள் யார் என்று பார்த்து விடுவோம்.
கி.பி. பதினோராம் நூற்றாண்டில், முதலாம் சிலுவை யுத்தம் தொடங்கும் முன்பே, ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சமய அறநிலையம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். இத்தாலிய வணிகர்கள் அந்த அறநிலையத்தின் செயல்பணியாக ஜெருசலத்தில் கிறிஸ்தவர்கள் வசித்த பகுதிகளில் மருத்துவமனையை நிறுவினார்கள். செயிண்ட் ஜான் பாப்டிஸ்ட் (St. John the Baptist) மடாலயப் பகுதியில் அமைக்கப்பட்ட அம்மருத்துவமனையின் பெயர் செயிண்ட் ஜான் மருத்துவமனை (Hospital of St. John). அச்சமயம் அதன் அடிப்படை நோக்கம் வெகு எளிமை. ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் வரும் பயணிகளுக்கு மருத்துவ சேவை – இதுதான் அவர்களுக்கு இடப்பட்ட செயல்பணி. அவர்களும் அதைக் கர்ம சிரத்தையாகச் செய்து வந்தார்கள். ஜெருசலம் முஸ்லிம்களால் ஆளப்பட்டு வந்த காலத்திலிருந்தே அதற்கு அவர்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜெருசலம் பரங்கியர்களால் கைப்பற்றப்பட்டதும் அந்நகருக்குப் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி, அதன் விளைவாக இந்த அறநிலைய அமைப்பின் சேவையும் அதிகரித்து, அவ்வமைப்புக்கு முக்கியத்துவம் கூடி, மளமளவென்று அதன் அதிகாரம் பெருகியது.
கி.பி. 1113ஆம் ஆண்டு இந்த சமய அறநிலைய அமைப்புக்கு போப் ஆசி வழங்கித் தமது அங்கீகாரத்தையும் அளித்துவிட்டார். அந்த அங்கீகாரம் அவர்களுக்கு உலகளாவிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. அந்த அங்கீகாரமும் ஆதரவும் அது வலுவான கட்டமைப்புடன் வளர்ச்சியடைய உதவி, அதன் பலம் பெருகி, இறுதியில் அது கிறிஸ்தவ மத இராணுவப் பிரிவாக, பெரும் சக்தியாக உருவாகி நின்றது. அதன் உறுப்பினர்களுள் போர்த்திறன் மிகுந்த சேனாதிபதிகள் ஏராளமாக இருந்தனர். அவர்களது ஆதிமூலமான மருத்துவச் சேவையே காரணப் பெயராகி, அவர்கள் ஹாஸ்பிடலர்கள் (Hospitaller) என்று அழைக்கப்பட்டனர்.
பிரான்சு நாட்டின் பிரபு , ஹூயுஜ் டெ பேயென்ஸ் (Hugh of Payns or Hugues de Payns). அவருடைய தலைமையில் Knights எனப்படும் சேனாதிபதிகளின் சிறு குழுவொன்று, கி.பி. 1119 ஆம் ஆண்டு தங்களைத் தொண்டுப் பணி ஒன்றுக்கு அர்ப்பணித்துக்கொண்டது. என்ன பணி? அது ஜெருஸலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறித்தவப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது. ஜஅஃபா நகருக்கு வந்திறங்கி ஜெருஸலத்திற்குச் சாலை வழியாகச் செல்லும் அப்பயணிகளுக்கு வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாவல் அளிக்கச் சாலையை ரோந்து புரிவது என்றுதான் அவர்களது சேவை தொடங்கியது. ஆனால் வெகு விரைவில் ஹூயுஜின் Knights குழுவுக்குப் பேராதரவு கிடைத்துவிட்டது. அதையடுத்து இலத்தீன் தலைமை குரு, Knights குழுவுக்கு, ‘சமய சாரணர் படை’ என்ற தகுதியை அளித்து அங்கீகரித்தார். ஜெருசல ராஜாவோ தம் பங்குக்கு அவர்களுக்கு அக்ஸா பள்ளிவாசலில் இருப்பிடம் ஒதுக்கித் தந்துவிட்டார். சாலமன் ஆலயம் (Temple of Solomon) எனக் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும் இடத்தில் தங்களது பெட்டி, படுக்கையை இறக்கி வைத்தது இக்குழு. சாலமன் டெம்பிளில் ஜாகை அமைத்த அவர்களுக்கு டெம்ப்ளர்ஸ் (Templars) என்று பெயர் ஏற்பட்டுவிட்டது. துறவிகளைப் போல் ஏழ்மை, ஆன்மீக ஒழுக்கம் ஆகியனவற்றைத் தங்களது அடிப்படை வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்டவர்கள்தாம் இவர்கள். இருவருக்கு ஒரு கால்நடை வாகனம் என்ற அளவிற்கு விநயம். ஆனால், நாளடைவில், “ஜெருஸலம் என்ற புனித நிலத்தைக் காக்கும் தற்காப்பு வீரர்கள் நாங்கள்” என்று, வாளும் ஆயுதங்களும் சுமந்து போராடும் படைக்கள வீரர்களாக டெம்ப்ளர்கள் பரிணாம மாற்றம் அடைந்தார்கள்.
வெள்ளை மேலாடை, அதில் சிவப்பு நிறச் சிலுவை. இதுதான் அவர்களின் ஆடை அடையாளம். சிலுவைப் படையில் உள்ள Knights எனப்படும் சேனாதிபதிகள்போல் டெம்ப்ளர்ஸ் தங்களளவில் தனித்திறன் வாய்ந்த போர்வீரர் அணியாக ஆகிப்போனார்கள். நாளாவட்டத்தில் சிலுவைப் படையின் முக்கிய வீரர்கள் ஆகி, அடுத்து நிகழ்ந்த முக்கியமான போர்களில் எல்லாம் அவர்கள் வகித்தது பெரும் பங்கு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுக் காலம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த இந்த டெம்ப்ளர்கள் அமைப்பு கி.பி. 1312 ஆம் ஆண்டுதான் போப் க்ளெமெண்ட் V என்பவரால் நிரந்தரமாக ஒடுக்கப்பட்டது.
டெம்ப்ளர்களும் ஹாஸ்பிட்டலர்களும் சிலுவைப் போர் வரலாற்றில் வலிமையான இராணுவ அமைப்பினராகக் குறுக்கிடப் போவதால் அவர்கள் உருவான வரலாற்றை நாம் இங்கு இந்தளவிற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. அடுத்து இல்காஸியைத் தொடர்வோம்.
oOo
சர்மதா யுத்தத்தில் இல்காஸி சாதித்த வெற்றியின் பின்விளைவாக சிரியா- மெஸபடோமிய்யா முஸ்லிம் ஆட்சியாளர்கள் இடையே இணக்கம் ஏற்பட்டு ஒருங்கிணைந்த இஸ்லாமியப் படை ஒன்று உருவானது. பண்டைய மெஸபடோமியா என்பது இன்றைய இராக்கின் பெரும்பகுதியாகும். ‘மெஸ’ என்றால் கிரேக்க மொழியில் “இடையில்”; ‘படோமியா’ என்றால் “நதிகள்”. யூப்ரடீஸ் மற்றும் டைகிரீஸ் நதிகளுக்கு இடையிலுள்ள வளமான நிலப்பரப்பு எனும் காரணப் பெயரால், ‘மெஸபடோமியா’ என்று வழங்கப்பட்டது.
ரித்வானின் ஆட்சியின்போது அந்தாக்கியாவின் பரங்கியர்களிடம் ஒடுங்கிக் கிடந்த அலெப்போ மக்கள் நாசிகளில் இப்பொழுது நிம்மதி மூச்சு. ரோஜர் கொல்லப்பட்டதும் சரியான தலைமை இன்றி இருந்த அந்தாக்கியா, அடுத்து இல்காஸி இங்குதான் விரைந்து வரப்போகிறார் என்று எதிர்பார்த்தது. அங்கிருந்த பரங்கியர்களின் படை பலமும் குன்றியிருந்தது. தற்காப்புக்கு என்ன செய்யலாம் என்று பரபரத்தவர்கள், தம்மிடையே வசித்த சக கிறிஸ்தவர்களான, அந்நிலத்தைச் சேர்ந்தவர்களான சிரியர்கள், அர்மீனியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. எதற்காக?
இலத்தீன் கிறிஸ்தவர்கள் படையெடுத்து வந்து புகுந்த நாள் முதல் அவர்களுக்கும் மண்ணின் பூர்வக் குடிகளான கிழக்கத்திய கிறிஸ்தவர்களுக்கும் மனத்தளவில் இணக்கம் ஏற்படவே இல்லை. தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆகிவிட்டதாகவே அவர்கள் எண்ணினார்கள். அது உண்மையுங்கூட. இந்த உள்ளூர் அதிருப்தியாளர்கள், தாங்கள் மரண அடி வாங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இதுதான் வாய்ப்பு என்று தங்களுக்கு எதிராக அலெப்போவின் இல்காஸியுடன் கைகோர்த்து விட்டால் என்னாவது என்ற அச்சமே பரங்கியர்களது அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஆனால் அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கும் உள்நாட்டு கிறிஸ்தவர்களுக்கும் இடையே பூசலைத்தான் அதிகப்படுத்தியது. பரங்கியர்களுக்குத் தாங்கள் அடிமைகளைப்போல் ஆகிவிட்டதாகவே அவர்களுக்குத் தோன்றியது. கொதித்துப் போனார்கள்!
ஆனால் இவ்விதம் கனிந்த அத்தனை நல்வாய்ப்புகளையும் சாதகமாக்கிக்கொண்டு, இல்காஸி அடுத்துப் பரங்கியர்கள் மீது பெரிய அளவில் போர் தொடுக்கவோ, வெற்றிகளை ஈட்டவோ தவறிவிட்டதுதான் பெரும் கைசேதம். துக்தெஜினுடன் இணைந்துகொண்டு அந்தாக்கியாவையும் கினாஸ்ஸரீனையும் முற்றுகையிட்டுப் பார்த்தார். ஆனால் அவை எப்பலனும் இன்றியே முடிவுற்றன.
ஹி.515/கி.பி. 1121 ஆம் ஆண்டு, தம் மற்றொரு மகனான சுலைமான் இப்னு இல்காஸியிடம் அலெப்போவின் ஆட்சிப் பொறுப்பை அளித்துவிட்டு மர்தினுக்குத் திரும்பிவிட்டார் அவர். அதை நோட்டமிட்டு அறிந்த பரங்கியர்கள், ஜெருஸல ராஜா இரண்டாம் பால்ட்வினின் தலைமையில் கிளம்பிவந்து அலெப்போவின் சுற்றுப்புறப் பகுதிகளையெல்லாம் தாக்கி, வீடுகளையும் பயிர்களையும் கொளுத்தினர். ஷைசர் பகுதியின் மீது பாய்ந்து தாக்கி, முஸ்லிம்கள் பலரைச் சிறைப் பிடித்தனர். அவர்களை மீட்க அந்நகரின் அமீர் அபுல் அஸாகிர் சுல்தான் இப்னு முன்கித் சிலுவைப் படையுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தும்படி ஆனது. அதே வேகத்தில் அலெப்போவையும் முற்றுகையிட்டது அச்சிலுவைப் படை. அலெப்போவின் முஸ்லிம்கள் தாக்குப் பிடித்து சமாளித்து அவர்களை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டியடித்துவிட்ட போதிலும் அலெப்போவின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
வேறு வழியின்றி ஷைசரைப் போல் அலெப்போவும் ஜெருஸல ராஜா இரண்டாம் பால்ட்வினுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் அதைச் சிலுவைப் படை காற்றில் பறக்க விட நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. எடிஸ்ஸாவின் அதிபராகியிருந்த ஜோஸ்லின் அந்த ஆண்டே அலெப்போவைச் சார்ந்த பகுதிகள் சிலவற்றைக் கபளீகரம் செய்தார். ‘ராஜா! என்ன இது அநியாயம்?’ என்று இந்த அத்துமீறலைக் குறித்துக் கடுமையான மொழியில் ஜெருஸல ராஜா இரண்டாம் பால்ட்வினுக்கு அலெப்போ அனுப்பிய தகவலுக்கு, ‘ஜோஸ்லின் மீது எனக்கு அதிகாரம் இல்லை; அவரை நான் கட்டுப்படுத்த முடியாது’ என்று அப்பட்டமாகத் தட்டிக்கழித்து அலட்சியமான பதில்தான் வந்தது.
கொதித்துப்போன அலெப்போ மக்கள் களேபரத்தில் இறங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருந்த சுலைமானுக்கும் தம் தந்தையின்மீது மிகுந்த அதிருப்தி. அதனால் அவர் அந்தக் களேபரத்தை அடக்காமல் தம் தந்தைக்கு எதிராகத் திரும்பி அலெப்போ இனி இல்காஸிக்குக் கட்டுப்படாத சுயேச்சை அரசாங்கம் என்று அறிவித்து விட்டார். ‘விஷயம் இந்தளவிற்கு முற்றிவிட்டதா?’ என்று ஆத்திரத்துடன் கிளம்பி அலெப்போ வந்து சேர்ந்தார் இல்காஸி. அவர் வருவதை அறிந்த சுலைமான் டமாஸ்கஸுக்குத் தப்பி ஓடி துக்தெஜினிடம் தஞ்சமடைந்துவிட, அலெப்போவில் சுலைமானுக்குத் துணையாய் இருந்தவர்கள் தலைகளிலெல்லாம் இல்காஸியின் அரச தண்டனை இறங்கியது. ஒருவாறு அலெப்போவின் களேபரம் கட்டுக்குள் வந்ததும் தம் உடன்பிறந்தாரின் மகனான பத்ருத் தவ்லா சுலைமான் இப்னு அப்துல் ஜப்பார் இப்னு அர்துக் என்பவரை, தம் ஆட்சிப் பிரதிநிதியாக நியமித்தார் இல்காஸி. அதே வேகத்தில் சிலுவைப் படையினருடன் அடுத்த ஓராண்டிற்குப் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படுத்திக்கொண்டார்.
சிலுவைப் படையினர் தரப்பிலும் உட்பூசல் ஏற்படத்தான் செய்தது. ஜெருஸல ராஜா இரண்டாம் பால்ட்வினுக்கும் திரிப்போலியின் போன்ஸுக்கும் இடையே பிளவு உருவானது. அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று மர்தினிலிருந்து பெரும் எண்ணிக்கையில் படை திரட்டிச் சென்றார் இல்காஸி. அவருடைய மற்றோர் உடன்பிறந்தாரின் மகனான பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் என்பவரும் துக்தெஜினும் இல்காஸியுடன் இணைந்தனர். ஆயினும் அவர்களால் சிலுவைப் படையை எதிர்த்துச் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெற முடியவில்லை. போலவே சிலுவைப் படையும் அலெப்போவின்மீது தம் ஆதிக்கக் கரத்தை வலுவாக நீட்ட முடியவில்லை.
ஹி. 516/கி.பி.1122. இல்காஸியின் ஆரோக்கியம் குன்றத் தொடங்கியது; மோசமடைந்தது. மரணமடைந்தார் இல்காஸி. அவரது மரணம் முஸ்லிம்களுக்கு இழப்பு என்பதையும் தாண்டிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்ன பாதிப்பு? வாரிசுச் சண்டை.
இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தைமுர்தாஷ், ‘மர்தின் என்னுடையது’ என்று அதை எடுத்துக்கொண்டார். மற்றொரு மகன் சுலைமான் ‘மையாஃபாரிகின் எனக்கு’ என்று அதைப் பறித்துக்கொண்டார். அவருடைய உடன்பிறந்தார் மகன்கள் இருவருள் பத்ருத் தவ்லா சுலைமானிடம் அலெப்போ தங்கியது. கார்பெர்த் கோட்டை பலக் இப்னு பஹ்ராம் வசம் சென்றது.
பத்ருத் தவ்லா சுலைமான் போட்டிப் போட்டு அலெப்போவின் ஆட்சியைத் தமதாக்கிக் கொண்டாரே தவிர, அவருக்குப் பரங்கியர்களை எதிர்த்து ஏதும் பெரியளவில் சாதிக்க இயலாத பலவீன நிலை. அல்-அதாரிப் கோட்டையைத் தந்துவிடுகிறேன் என்று பரங்கியர்களுக்கு அதைத் தந்துவிட்டு, சமாதான உடன்படிக்கைதான் ஏற்படுத்திக்கொண்டார் அவர். அடுத்த மூன்று ஆண்டுகளில் அவரது ஆயுளும் முடிவுற்று விட்டது.
அவரது மரணம் அலெப்போவினருக்குத் துக்கமளித்ததைவிட ஒருவித ஆறுதலைத்தான் தந்தது. வலுவான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க அதை ஒரு நல்வாய்ப்பாகத்தான் அவர்கள் கருதினார்கள். நம்பிக்கையானவரைத் தேடினார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. அடுத்து ஒருவர் அமைந்தார். அடுத்த சில மாதங்களில் அவர் அரபுலகின் நாயகராகவும் உயர்ந்தார். பார்ப்போம்.
.
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 37 |
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 39 |
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன்
© TamilIslamicAudio.com