சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்

ஜெருஸலம் நகருக்கு அண்மையில், அதன் வடமேற்கே, மத்தியத் தரைக்கடலில் ஜாஃபா துறைமுகம் அமைந்துள்ளது. அது இயற்கைத் துறைமுகம். இத்தாலியின் ஜெனொவா நகரிலிருந்து ஆறு கப்பல்களில் கிளம்பி வந்த வலிமையான கடற்படை ஒன்று ஜுன் மாதத்தில் அந்தத் துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டது. கப்பல்கள் நிறைய, போர் ஆயுதங்கள், கவசங்கள் மட்டுமின்றிக் கயிற்றுப் பொதிகள், சுத்தியல்கள், பெட்டி பெட்டியாக ஆணிகள், கோடாரிகள், மண்வெட்டிகள், போன்ற பலதரப்பட்ட உபகரணங்களையும் ஏராளம் சுமந்து வந்து கரை இறக்கினார்கள் அவர்கள். போர் வீரர்களுடன் சேர்ந்து கொல்லர்களும் தச்சர்களும் கைவினைஞர்களுமாகப் பெரும் படை வந்து இறங்கியது. ஒரே ஓர் ஏணியை வைத்துக்கொண்டு ஜெருஸலம் நகரை முற்றுகையிடவும் போரிடவும் நின்றிருந்த சிலுவைப் படை, திரைக்கடலில் வந்து சேர்ந்த உதவியைக் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கியது.



இதற்கிடையே, சிலுவைப் படையில் இருந்த பரங்கி இளவரசர்கள் உள்ளூர் கிறிஸ்தவர்களின் உதவியுடன் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றைக் கண்டுபிடித்தனர். அவர்கள் அங்கிருந்து மரங்களை வெட்டி ஒட்டகங்களின் முதுகில் கட்டி, களத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். மரக்கட்டைகள் சேகரமாகிவிட்டன; உபகரணங்கள் கிடைத்துவிட்டன; வேலைக்கேற்ற வினைஞர்கள் வந்து விட்டார்கள் என்றதும் அசுர பலத்தை உணர்ந்தது சிலுவைப் படை! அடுத்த மூன்று வாரங்கள் துரித கதியில் வேலைகள் நடைபெற்றன. முற்றுகை இடுவதற்கு மரத்திலான முற்றுகைக் கோபுரங்கள், கவண் பொறிகள், அரண் சுவர்களை இடித்துத் தகர்ப்பதற்கு உலோகப் பூணுடன் கூடிய பிரம்மாண்ட உருக்குத் தூண்கள், ஏணிகள் ஆகியன கிடுகிடுவென உருவாகின. நகரின் வெளியே இவ்விதம் சிலுவைப் படை தன் காரியத்தில் கண்ணாயிருக்க, நகரத்திற்குள் இருந்த இஃப்திகார் அத்-தவ்லாவோ எகிப்துப் படைகள் எந்நேரமும் உதவிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் நகரின் தற்காப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். கவண்பொறிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டன; கோபுர அரண்கள் வலுப்படுத்தப்பட்டன; ஆயுதங்கள் சாணை தீட்டப்பட்டன.

மும்முரமான இந்த ஏற்பாடுகளுக்கு இடையே இரு தரப்பும் தத்தம் எதிர்தரப்பை முரட்டுத்தனமாகச் சீண்டுவதும் அவர்களது மனவுறுதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதும் என்று அந்தக் களேபரங்களும் தீவிரமாக நடைபெற்றன.

ஃபாத்திமீக்கள் என்ன செய்தார்கள் என்றால் சுவர்களின் உச்சியில் சிலுவைகளை இழுத்துச் சென்று, அவற்றின்மீது உமிழ்ந்து, அவமதித்துச் சிலுவைப் படையினரைக் கோபப்படுத்தினர். பரங்கியர்களோ தங்களிடம் அகப்படும் முஸ்லிம்களின் தலைகளை, கோட்டைச் சுவர்களிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் படையினர் கண்ணெதிரில் கொய்து எறிந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் அந்த வெறி உச்சத்தை எட்டியது. முஸ்லிம் உளவாளி ஒருவரை, கவண்பொறியில் வைத்துக் கட்டி, நகரின் உள்ளே தூக்கி வீசினர். ஆனால் அந்தக் கவண் அவரது எடையைத் தாங்காமல் தொய்வடைந்து, அவர் உள்ளே சென்று விழாமல் சுவர்களுக்கு அருகிலுள்ள கூர்மையான கற்களில் விழுந்து, கழுத்து எலும்பு உடைந்து நொறுங்கி இறந்தார்.

1099ஆம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. சிலுவைப் படையும் முற்றுகைக்கான ஆயுதங்களைப் பெருமளவு உருவாக்கி முடித்திருந்தது. அதே நேரத்தில் எகிப்தில் ஃபாத்திமீக்களின் நிவாரணப்படையும் தயாராகிவிட்டது என்ற செய்தி அவர்களுக்கு வந்து சேர்ந்தது. இனியும் தாமதிப்பது சரியில்லை; விரைந்து செயல்பட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று உணர்ந்தது சிலுவைப் படை. “மூன்று நாள்கள் சடங்கு சம்பிரதாயம் செய்து உங்களைச் சுத்திகரிப்புச் செய்துகொள்ளுங்கள். பிறகு தாக்குங்கள். புனித நகரம் உங்கள் வசப்படும்” என்று அச்சமயம் அவர்களுக்குத் தீர்க்கதரிசனம் வழங்கினார் ஒரு பாதிரியார். இவரது பெயரும் பீட்டர். முழுப் பெயர் பீட்டர் டெஸிடெரியஸ் (Peter Desiderius).

சோர்ந்து, களைத்து, ஆயாசத்தில் இருந்த அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டவும் மனவுறுதியை அதிகரிக்கவும் அப்படி ஒரு தீர்க்கதரிசனம் தேவைப்பட்டது. அதைச் செவ்வனே செய்தார் பாதிரியார் பீட்டர். தொடர்ச்சியாகப் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. சிலுவைப் படையினர் மத்தியில் ஆன்ம உணர்ச்சிப் பெருக்கெடுத்து, தங்களுக்கு உகந்த பாதிரியார்களிடம் சென்று மண்டியிட்டு அழுது, கதறி பாவமன்னிப்புக் கோரினார்கள். பனை ஓலைகளை ஏந்திக்கொண்டு வெறுங்காலுடன் நகரின் சுவரைச் சுற்றிப் புனிதப் பேரணி ஒன்றையும் நிகழ்த்தியது படை. நடப்பவை அனைத்தையும் கோட்டைச் சுவர்களின் மீதிருந்து வேடிக்கை பார்த்தபடி இருந்த ஃபாத்திமீக்களின் படை அந்தப் பேரணியின்மீது ஆசீர்வாதம் புரிந்தது – அம்புகளால்!

- * -

ஜூலை 14, 1099. விடியும் நேரம். நகரின் தென்மேற்கே சியோன் மலையில் துலூஸின் ரேமாண்டும் அவருடைய ஆதரவாளர்களும் நிறுத்தப்பட்டனர். வடக்கே இருந்த பீடபூமியில் காட்ஃப்ரேயும் டான்கிரெட்டும் கொண்ட படை. இரு முனையிலிருந்தும் ஒரே நேரத்தில் போருக்கான எக்காளம் ஊதப்பட்டது. அந்த ஒலியைச் செவியுற்றதும் விறுவிறுவென்று எழுந்த ஃபாத்திமீக்களின் துருப்புகள் வடமேற்கு மூலையில் இருந்த நாற்கோணக் கோபுரத்தை நோக்கித்தான் ஓடின. விடிந்தும் விடியாத அந்த அரை வெளிச்சத்தில் மேலிருந்து எட்டிப்பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது!. சிலுவைப் படையின் முற்றுகைக் கோபுரத்தை அங்குக் காணவில்லை!

அதற்கு முந்தைய மூன்று வாரங்களும் காட்ஃப்ரே தலைமையில் போருக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிலுவைப் படை, பெரியதொரு முற்றுகைக் கோபுரத்தை நகரின் வலிமைமிக்க நாற்கோணக் கோபுரத்தின் எதிரில் ஃபாத்திமீக்களின் கண்பார்வையில்தான் உருவாக்கிக்கொண்டிருந்தது. உத்தேசம் அறுபது அடி உயரம் உயர்ந்து நின்ற அந்த மூன்று அடுக்குக் கோபுரம் சிறிது சிறிதாக வளர்ந்ததை நாள்தோறும் ஃபாத்திமீப் படையினர் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். முந்தைய நாள்வரை, உயர்ந்து வளர்ந்ததொரு மிருகத்தைப்போல் அங்குதான் நின்றிருந்தது அது. அவர்கள் அங்கிருந்துதான் தாக்கப் போகிறார்கள் என்று ஃபாத்திமிப் படையும் தங்களது தற்காப்பை அந்தக் கோபுரத்தில்தான் வலுப்படுத்தியிருந்தது. வீரர்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது எட்டிப் பார்த்தால் அந்த முற்றுகைக் கோபுரம் மறைந்து போயிருந்தது.

விரைவில் பிரித்துக் கட்டி விளையாடும் சிறுவர்களுக்கான லெகோ பொம்மைகள் போல், சிறப்புத் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது அந்த முற்றுகைக் கோபுரம். அத்துணைப் பெரிய மரக் கோபுரத்தை, பெரும் துண்டுகளாகக் கழற்றி எடுத்து, மற்றோர் இடத்திற்கு அப்பகுதிகளைச் சுமந்து சென்று, விரைவில் ஒன்றிணைத்து, மீண்டும் கோபுரத்தைக் கட்டி எழுப்பிவிடுவதுபோல் வடிவமைக்கச் செய்திருந்தார் காட்ஃப்ரே! விடிவதற்குமுன், இரவோடு இரவாக, அந்தக் கோபுரத்தை நகரின் கிழக்கே, அரை மைல் தொலைவிலிருந்த டமாஸ்கஸ் வாயிலைத் தாண்டிக் கொண்டுபோய் நிறுத்திவிட்டனர். ஃபாத்திமீக்கள் சற்றும் எதிர்பாராத திருப்பம் அது. சந்தேகமேயின்றி அது காட்ஃப்ரே கையாண்ட மிகச் சிறந்த போர் தந்திரம்.

முதலாம் சிலுவைப் படை ஜெருஸலம் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியது. முதலாம் சிலுவைப் போரின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தன. முதல் அடுக்கான வெளிப்புறச் சுவரைத் தகர்ப்பதற்கு காட்ஃப்ரே தமது படையினரை முடுக்கினார். இரும்பைக் கலந்து கடினமான உருக்குத் தூண் ஒன்றைப் பரங்கியர்கள் தயாரித்திருந்தனர். உருளைகளின் மீது அமைக்கப்பட்ட தள்ளுவண்டியின்மேல் அதைப் படுக்க வைத்து, உருட்டிச் சென்று சுவரின் மீது வேகமாக மோதி, சுவரை இடித்துத் தள்ளுவது திட்டம். பெரும் எடை கொண்ட அந்த உருக்குத் தூணை வலுவான தள்ளுவண்டியொன்றில் வைத்து, சிலுவைப் படையின் ஓர் அணி உருட்டிக் கொண்டு ஓடியது. அதே நேரத்தில் சுவர்களின் மீதிருந்த ஃபாத்திமீக்களின்மீது சிலுவைப் படையின் கவண் பொறியிலிருந்து கற்கள் பாயத் தொடங்கின. ஆயினும், ஃபாத்திமீக்கள் அதைச் சமாளித்து, உருக்குத் தூணை உருட்டிக்கொண்டு ஓடிவரும் சிலுவைப் படையினர் மீது மேலேயிருந்து அம்புகளை விடாது எய்து தாக்கிக் கொண்டே இருந்தனர். அந்தத் தூணை ஓட்டிக் கொண்டு வந்து சுவரை நெருங்குவதும் மோதுவதும், பின்வாங்குவதும் மீண்டும் ஓட்டிச் சென்று மோதுவதுமாகப் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. சில மணி நேரம் தொடர்ந்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு சுவரில் பெரிய பிளவு ஒன்றை ஏற்படுத்தியது சிலுவைப் படை.

முதற் அடுக்குச் சுவர் பிளவுற்று, அடுத்த அடுக்கில் உள்ள நகரின் பாதுகாப்புச் சுவருக்கு ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்ததும் ஃபாத்திமீக்கள் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். கந்தகம், கீல், மெழுகு பூசப்பட்ட நெருப்புக் குண்டுகளை அந்தத் தூணின்மீது விடாமல் தொடர்ந்து வீசினர். தூணில் தீ பற்றியது. எரியத் தொடங்கியது. திகுதிகுவென்று எரிந்த அத்தூணில் தீயை அணைக்கச் சிலுவைப் படை ஓடியது. ஆனால் சேதமடைந்து பயனின்றிக் கிடக்கப்போகும் எரிந்த மிச்சம், தங்களது முற்றுகைக் கோபுரத்தை முன் நகர்த்துவதற்குப் பெரும் இடைஞ்சல் என்பதை உணர்ந்தார் காட்ஃப்ரே. உடனே அவர் உத்தரவிட, சிலுவைப் படையினரே அதன் மிச்ச மீதியையும் முற்றிலுமாகக் கொளுத்தி விட்டனர். ஒருவாறாக, முதற்கட்ட அரணாகச் செயல்பட்ட சுவரைத் துளைத்துத் தாண்டி ஜெருஸலம் நகரின் முக்கியச் சுவரைத் தாக்கும் அளவிற்கு முன்னேறி நின்றது காட்ஃப்ரே தலைமையிலான அணி.

அதே நேரம், நகரின் தென்மேற்குப் பகுதியில் போர் தொடுத்த சிலுவைப் படையின் நிலைமையைப் பார்ப்போம். இப்பகுதியில் சுவர்களை ஒட்டி, உலர்ந்த அகழி ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அகழியைக் கடக்க துலூஸின் ரேமாண்ட் ஒரு யுக்தியைக் கையாண்டார். போர் தொடங்குவதற்கு முந்தைய நாள்களில், இந்த அகழியை நிரப்ப அதன் பள்ளத்தில் வீசப்படும் ஒவ்வொரு மூன்று கற்களுக்கும் ஒரு காசு சன்மானம் என்று தம் படை அணிக்கு அறிவித்தார். அது வேலை செய்ய ஆரம்பித்தது. இந்த அணியினரிடமும் உருளைகள் பதிக்கப்பட்ட முற்றுகைக் கோபுரம் இருந்தது. அதை உருட்டிக்கொண்டு மெதுமெதுவே அவர்கள் சுவர்களை நெருங்க, நெருங்க ஃபாத்திமீக்களின் தாக்குதல் எல்லைக்குள் வகையாகச் சென்று சிக்கினர். இஃப்திகார் அத்தவ்லாவின் தற்காப்பு ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்த பகுதி இது. முன்னேறி வரும் சிலுவைப் படையினரை ஃபாத்திமீக்களின் படை இடைவிடாமல் அம்புகளால் தாக்கித் துளைத்தது. கவண்களில் இருந்து அவர்கள்மீது பெரும் கற்கள் வீசப்பட்டன. முற்றுகைக் கோபுரத்தைத் தடுத்து நிறுத்த இங்கும் தீக் குண்டுகள் வீசப்பட்டன. ஆணிகளைச் சாக்குத் துணியில் சுற்றி, கயிறுகளால் கட்டி, அதன்மீது கீல், மெழுகு, கந்தகம் ஆகியனவற்றைப் பூசி, அதைக் கொளுத்திப் பரங்கியர் படை மீது வீசினர் ஃபாத்திமீக்கள். விழுந்த பகுதிகளில் தீ பற்றியது மட்டுமல்லாமல் ஆணிகளும் குத்திப் பெரும் சேதத்தை விளைவித்தன. இந்தத் தாக்குதலைச் சமாளித்து முன்னேற முடியாமல் தவித்த ரேமாண்ட், இருள் கவியத் தொடங்கியதும் ஏமாற்றமும் அவமானமுமாகத் தம் படையினருடன் பின்வாங்கினார்.

அன்றைய போர் அத்துடன் முடிவடைந்தது. இரு தரப்பும் நிம்மதியின்றி அச்சத்துடன் தவிக்க, நகரை இருள் சூழ்ந்தது.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 23
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 25

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

 




1 மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!
  மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள்.
 
2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி
  அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.
 
3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்
  கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.
 
4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி
  ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?
 
5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு
  அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.
 
6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
27 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
28 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
32 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
33 திருநெல்வேலி வரலாறு...!
34 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
35 அந்த இரண்டணா ......
36 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
43 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
44 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
45 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
46 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
47 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
48 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
49 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
56 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
57 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
58 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
59 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
60 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
61 சூஃபிக்களும் புனித போர்களும்
62 யார் தேச விரோதி?
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
65 விடுதலைப்போரில் வீரமங்கையர்
66 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
67 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
68 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
69 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
70 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
71 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
72 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
73 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
74 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
75 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
76 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
77 தமிழகத்தில் முஸ்லீம்கள்
78 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
79 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
80 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
81 பாடலியில் ஒரு புலி
82 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
83 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
84 முதல் சுதந்திரப் பிரகடனம்
85 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
86 காலித் பின் வலீத் (ரலி)
87 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
88 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
89 முதல் வாள்!
90 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
91 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
92 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்