மவ்லவி S.N.R. ஷவ்கத் அலி மஸ்லஹி,
98658-04000
லப்பைக் … அல்லாஹும்ம லப்பைக்…
லப்பைக் … லாஷரீக்க லக லப்பைக்…
இந்த தெருக்குரலுக்கு சொந்தக்காரன் யார்…? நம்மை நிம்மதியாக இருக்கவே விட மாட்டார்களா…? இன்றைக்கு கட்டாயம் அவனது தலையை வெட்டி எடுத்து விட வேண்டும்…ஒரே எண்ணத்தோடு ஓர் இளைஞர் படை ஓடி வரத்துவங்கியது. கையில் அரிவாள்களுடன்.
நல்லவேளை அத்திருக்குரலுக்கு “யார் சொந்தக்காரர்” என்பதை ஊர் பெரியவர்கள் உடனடியாக புரிந்து கொண்டு நிகழவிருந்த கொலை வைராக்கியத்தை எப்படியோ தடுத்து நிறுத்தி விட்டார்கள். அவசர புத்திக்காரர்களே… இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா…?
”இவர்தான் எமாமா மாகாண மன்னர்” இவர் வழியாகத்தான் நமக்கான தானியப்பொருட்கள் தாராளமாக நம்மூருக்கு வந்து கொண்டிருக்கின்றன. திகைத்து நின்றார்கள். மக்கத்து இளைஞர்கள் மன்னரே… நீங்கள் எப்போது மதம் மாறினீர்கள்…? இஸ்லாமியக் கோலத்தில் இங்கு நிற்கிறீர்கள்…? உங்களது மூதாதையர்களின் மார்க்கத்தை விட்டுவிட உங்களுக்கு எப்படி துணிவு வந்தது…?
ச்சே…! நான் மதம் மாறவில்லை மார்க்கங்களிலேயே மிக அற்புதமான மார்க்கமான இஸ்லாமை நான் தழுவி இருக்கிறேன்… மனிதர்களிலேயே மிக அற்புதமான மனிதரான நபி முஹம்மதை நான் பின்பற்றத் தொடங்கி இருக்கிறேன். இச்சொற்களை கேட்கக் கேட்க தேகக் குருதிகள் கொதிக்கத் தொடங்கின என்றாலும் என்ன செய்வது… பொருளாதாரத்திற்கான ஒரே வாசல் இந்த எமாமா தான் அதுவும் அடைபட்டுப் போனால்… நமது நிலை என்ன… பஞ்ச கால பயங்கரங்கள் பயமுறுத்தின.
இரத்தக் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது. அந்தவேளை சற்றும் எதிர்பாராத நிலை எமாமா மன்னர் சொன்னார். “இனிமேல் ஒருபோதும் உங்களுக்கு என் மாகாணத்திலிருந்து எந்த வித தானியமும் வராது இது இறைவன் மீது சத்தியம்… உங்களில் கடைசி நபர் இஸ்லாமை ஏற்கும் வரை இதே நிலை தான் தொடரும்…’ மீண்டும் சொல்லத் தொடங்கினார் …லப்பைக்… அல்லாஹும்ம லப்பைக்… லப்பைக்… லாஷரீக்க லக லப்பைக்…
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு…
இஸ்லாமை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்த வேண்டும்… இனி என்ன செய்யலாம்… யோசித்த வேளை திடீர் என அந்த யோசனை அண்ணலாருக்கு வரத் தொடங்கியது…
திசை எட்டும் எட்டட்டும்… எழுதத் தொடங்கினார்கள். எட்டுக்கடிதங்கள் இதுவரை எவரும் அவ்வளவு தைரியத்துடன் செய்திராத செயல் அது. பெரும் பெரும் மாகாணப்பிரபுகளுக்கு “இஸ்லாமிய அழைப்பிதழ்” அனுப்புவது என்பது அவ்வளவு சாதாரணமானதா என்ன… அக்கடித அழைப்பிதழ்களுல் ஒன்று “எமாமா” மன்னருக்கும் பறந்தது எதிர்பார்த்தது போலவே அவரது “எதிர்வினை” செயல்படத் தொடங்கியது.
புதிய மார்க்கத்தை முஹம்மது தானே அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்… இன்றைக்கு என் அரசவைக்கே அஞ்சலா? அவரது தலையை கொய்துவிட்டால்… இனி என்றைக்குமே இல்லையல்லவா இன்னொரு அஞ்சல்… சைத்தானிய மனம் கொலை வானில் வட்டமடிக்கத் தொடங்கியது… முஹம்மதியத் தோழர்களில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து “ஷஹீத் வீரத்தியாகி” என்ற பட்டமளிப்பு விழாவும் நடத்தவே செய்தார் என்றாலும் இறைவனின் விதி வேறு ஒன்றாக இருந்தது.
இம்மஸ்ஜிதின் தூணில் இவரை கட்டி வைத்தது யார்…?
“இறைத்தூர்: இவர் யார் என்று தெரியுமா…?
“இறைத்தூதரே … எங்களுக்குத் தெரியாது.
“இவர் தான் ஃசுமாமா பின் ஆஸால் அல் ஹனஃபீ” இவரை கனிவுடன் கவனித்துக் கொள்ளுங்கள்… முறையான உணவும், சரியான உடையும் கொடுங்கள்”
உலகிலேயே கைதியை பெயர் சொல்லி அழைத்த ஒப்பற்ற ஒரே தலைவர் இவராகத் தான் இருக்க முடியும் அதுவும் “கனிவுடன்” கவனித்துக்கொள்ளுங்கள் (அஹ்சினூ…) என்று சொன்ன தலைவர்/ அதிபதி/மன்னர்/ இராணுவத்தளபதி இவரைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்…?
ஃசுமாமாவுக்கு ஒன்றுமே புரியவில்லை நான் எப்படி இங்கு வந்தேன்… நான் என் நாட்டிலிருந்து இறை ஆலயத்தை தரிசித்து இறைவனுக்காக அவனை நினைவூட்டும் திருச்சிலைகளின் பொற்பாதங்களில் திருப்பலி கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே மக்கா நோக்கி புறப்பட்டேன்… எனக்கு என்ன ஆனது… இப்படி நான் மதீனத்து மஸ்ஜிதின் தூணில் கட்டுண்டு கிடக்கிறேனே… எண்ண ஓட்டம் அலை அலையாய் அலைக்கழித்தது.
ஃசுமாமா… அவர் முன்நாட்களில் செய்திருந்த கொலைகளுக்காக தேடப்படும் நபராக இருந்தார். அவர் மக்கா நோக்கிச் செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த “குதிரைப்படை” ஒன்று அவரை மதீனப்பள்ளித் தூணில் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டது. இறைவனின் திருவிளையாடல் என்பது இதுதானோ… நாட்கள் நகர்ந்தன… ஃசுமாமா எதிர்பார்க்கவில்லை. யாருடைய தலை கொய்யப்பட வேண்டும் என்று இதுவரை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கப்பட்டதோ, யாருடைய முகம் பார்க்கப்படக்கூடாது என எண்ணப்பட்டதோ இதோ… அவரே அங்கு வந்து விட்டார். நடு நடுங்கிப் போனார் ஃசுமாமா.
ஃசுமாமா உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது? “முஹம்மதே ! நீங்கள் நினைத்தால் என்னை “கொலை” செய்துவிடலாம்… நீங்கள் நினைத்தால் எனக்கு “உயிர்ப்பிச்சை” கொடுக்கலாம்… நீங்கள் விரும்பினால் உங்களுக்கான பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
“நபி ஒன்றும் சொல்லவில்லை நபி ஒன்றுமே சொல்லவில்லை” இன்னும் இரண்டு நாள் உருண்டோடியது மீண்டும் அவரிடம் அதே கேள்வி ஃசுமாமா உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது? அதே பதில்… இறைத்தூதரின் இனிய எதிர்பார்ப்பு வேறு ஒன்றல்லவா… ஆனால் அவருக்கு அது எங்கே தெரியப்போகிறது?
அடுத்தநாள்… அதே கேள்வி… அதே பதில் என்ன நடக்கும்… யாருமே எதிர்பார்க்கவில்லை “ஃபக்கூ…வ – அத்லிகூ…” அவரை விட்டு விடுங்கள்! அவிழ்த்து விடுங்கள் !! திகைத்துப் போனார் ஃசுமாமா.
கடந்த சில நாட்களாக மதீனப்பள்ளியில் நடந்தவற்றை எல்லாம் கண்கூடாக பார்த்துப் பார்த்து பரவசப்பட்டுப் போயிருந்தார். அணு ஆயுதங்கள் இல்லை, சண்டை சச்சரவுகள் இல்லை. அமைதி… அமைதி… அமைதியைத்தவிர அங்கு வேறொன்றும் இல்லை. அங்கு பேதங்கள் இல்லை கறுப்பு / வெள்ளை கலர் பேதங்கள் இல்லை அரபு/ அஜமி மொழி பேதங்கள் இல்லை உயர்வு/ தாழ்வு குல பேதங்கள் இல்லை வர்க்க பேதங்கள் இல்லை, வர்த்தக பேதங்களும் இல்லை. அடடே… எங்கு பார்த்தாலும் அணி அணியாய் பணிவும் குனிவும் தான் அதைத்தவிர வேறொன்றுமே அங்கு இல்லை.
ஒரே இறைவன், ஒரே இறைத்தூதர், ஒரே வேதம், ஒரே நடைமுறை ஆஹா… எவ்வளவு அற்புதம்… ஆஹா என்னே அதிசயம்…ச்சை… இந்த மார்க்கத்தையா நாம் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எண்ணினேன்… தன்னைத்தானே நொந்து கொண்டார்… தான் போட்ட கொலைத்திட்டத்திற்கு பரிகாரம் என்ன… அதிருப்தி மனம் அசைபோடத் தொடங்கியது. திடீரென்று அவரது இதய வானில் மின்னல் வெட்டத்தொடங்கியது.
வேக வேகமாக மஸ்ஜிதை விட்டு வெளியேறினார். நேராக கிணற்றுக்குச் சென்றார் (நல்லவேளை உள்ளே குதித்து தற்கொலை ஒன்றும் செய்து கொள்ளவில்லை) குளித்தார், புத்தாடை அணிந்தார், நறுமணம் பூசினார் மீண்டும் மதீனப்பள்ளிக்கு ஓடோடி வந்தார் அப்போது அவரது உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின… “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ – அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ – ரசூலுஹு” அடடே… இதைதானே இறைத்தூதர் “ஃசுமாமா… உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது” என்று அடிக்கடி கேட்டதின் சூட்சுமம் என்பது அன்று அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்…
திருக்கலிமாச்சொற்களை மொழிந்த அவரது திரு உதடுகள் இதையும் சொல்லத் தொடங்கின… தூதரே… (முன்பு முஹம்மதே… என்று பெயர் சொல்லி அழைத்தவர் இப்போது “ரசூலே…” என்று எவ்வளவு அமைதியாய் அழைக்கிறார்… ஆ…இதுவல்லவா… உண்மையான உயர்மாற்றம்…,
இந்த பூமியிலேயே மிக மிக வெறுப்புக்குறிய பூமியாக இந்த மதீனா இருந்தது. இந்த பூமியிலேயே மிக மிக வெறுப்புக்குறிய மார்க்கமாக இந்த இஸ்லாம் இருந்தது. இந்த பூமியிலே மிகமிக வெறுப்புக்குறிய முகமாக உங்கள் முகம் இருந்தது. ஆனால் இவை யாவுமே இப்போது முழுவதுமாக அப்படியே மிகமிக பிரியத்திற்குறிய, பிரிந்தும் இருந்துவிட முடியாத ஒன்றாக எனக்குள் மாறிப்போய்விட்டது… உண்மையிலேயே இதயங்களை ஆள்பவன் இறைவன்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லவேயில்லை ஆனந்தக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார் சுதந்திரமிகு ஃசுமாமா.
“தூதரே…! கொலைகள் சில செய்திருக்கிறேனே… என்ன தண்டனை எனக்கு”?
இஸ்லாமுக்கு முன் செய்தவை யாவும் முன் செய்தவையே ! அவற்றிற்காக பழி வாங்கல் என்பதெல்லாம் இனி இல்லை. இனி நீ செல்லலாம்…! என்றார்கள். மீண்டும் அங்கிருந்து இறை ஆலயத்தை தரிசிக்க புறப்பட்டுச் சென்றார் ஆனால் இப்போது அவரது இதயத்திலிருந்து திரு உருவச்சிலைகள் முழுப்பிம்பங்கள் யாவும் முற்றிலுமாக மூர்ச்சையாகிப் போய் இருந்தன.
இஸ்லாமிய இனிமை மிகு ஆடையான இஹ்ராமிய ஆடை அணிந்து கொண்டு அடியெடுத்து வைக்கத் தொடங்கினார் அவரது உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின. லப்பைக்… அல்லாஹும்ம லப்பைக் பிறகு நடந்த வரலாறுதான் உங்களுக்குத் தெரியுமே…!
மக்கத்து மக்கள் மாநபிக்கு எமாமாவின் “பொருளாதாரத்தடை” குறித்து உருக்கமாய் ஒரு கடிதம் எழுத… மீண்டும் கருணைமிகு கன்னல் நபி ஃசுமாமாவுக்கு “தானியத்தடை நீக்கம்” குறித்து கடிதம் எழுத அதன்பிறகுதான் “மக்கத்துப்பஞ்சம்” நீங்கியது என்கிறது இஸ்லாமிய இன் சுவை வரலாறு. ஆதாரம்: ஹயாதுஸ்ஸஹாபா அரபு நூல்
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப வள்ளல் நபியின் வாழ்வியலை அறிந்து கொள்ள இந்த ஒரே ஒரு நிகழ்வு நமக்குப் போதுமானதுதான்.
இன்றைக்கு கலகங்களும், கலவரங்களும், கொலைகளும், கொள்ளைகளும் பெருகப் பெருக கைதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் பெருகிக் கொண்டே தான் வருகிறது. சிறைச்சாலைகளே கைதிகளின் நெருக்கடிகளால் சிரமப்பட்டு தனது சுதந்திரங்களை முழுமையாக இழக்கத் தொடங்கிவிட்டன.
கைதிகளுக்கான தீர்வு என்ன? சர்வதேசமெங்கும் இதற்கான விடையைத் தேடித்தான் விழிபிதுங்கி நிற்கிறது. இதற்கான விடை மிக எளிதானது என்றாலும் நடைமுறை வாழ்வு சிக்கல் படுத்தி வைத்திருக்கிறது எனினும் “முடியாதது” என்று உலகில் எதுவுமே இல்லை” என்பதுதான் உண்மை.
ஃசுமாமாவை ஈகை நபி கட்டிப்போட்டது ஈச்சமரக்கயிறுகளால் அல்ல ஈகைமிகு இஸ்லாமியக் கயிறுகளால் தான் என்பதை எவ்வளவு எளிதாய் அவரது “மனமாற்ற இஸ்லாமியத் தழுவல்” ஒரு பேருண்மையை நிரூபித்துச் சென்று விடுகிறது. மதபோதகங்கள் நின்று நிதானித்து அசை போட்டுப்பார்த்துச் செல்ல வேண்டிய நேரம் இது.
உங்களிலிருந்தே ஒரு தூதர் திட்டமாக உங்களிடம் வந்துவிட்டார். நீங்கள் வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். உங்களின் மீது பேராசை கொண்டவர்.
இறை நம்பிக்கையாளர்களின் மீது கருணையும், கிருபையும் உள்ளவர் (அல்குர்ஆன் 9:128) இந்த ஒற்றை வசனம் ஒன்றே போதும் நபிகள் நாயகத்தின் நற்பண்பை நல்லபடி எடுத்தியம்ப…
நபிகளார் தீனுல் இஸ்லாமை திக்கெங்கும் பரப்பும் நோக்கில் அருகேயுள்ள “தாயிஃப்” நகருக்குச்சென்றபோது அவ்வூர் மக்கள் கடும் சொற்களாலும், கடும் கற்களாலும் அடிக்கத் தொடங்கினார்கள். அவ்வேளை மலைகளின் அதிபதி மீக்காயீல் (அலை) அவர்கள் “நபியே…! சொல்லுங்கள் இவர்களை இவ்விரு மலைகளுக்கிடையே வைத்து, அழுத்தி அழித்து விடுகிறேன்” என்று சொன்னபோது சொர்க்கத்து நபி என்ன சொன்னார்கள் தெரியுமா… வேண்டாம் ! எவரையும் அழிப்பதற்காக நான் அனுப்பப்படவில்லை. அனைவருக்கும் அருள்பாலிப்பதற்காகத்தான். நான் இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன். இவர்கள் திருந்தாவிட்டாலும் இவர்களது “சந்ததிகள்” நிச்சயம் திருந்தக்கூடும்” என்றார்கள்.
ஆஹா… என்னே அற்புதமான வைரவரிகள்… வாழ்வியல் வழிகள்… இதைக்கேட்டவுடன் மீக்காயீல் (அலை) அவர்கள் சொன்னார்களாம்.
“நபியே… நிச்சயமாக நீங்கள் அல்லாஹ் தங்களை தனது அருள் மறையில் குறிப்பிட்டுள்ளது போலவே ரஊஃப் (கருணையாளர்) ஆகவும் ரஹீம் (கிருபையாளர்) ஆகவும் இருக்கிறீர்கள்” என்றார்களாம்.
(நூல் : தப்சீர் ரூஹுல் பயான் பாகம் 3 –பக்-691)
ஆங்காங்கு வெகு ஜோராக (?) மீலாது விழாக்களை தொன்று தொட்டு, விட்டுவிடாது கொண்டாடி வரும் “இறைக் காதலர்கள்” மீண்டும் ஒரு முறை தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும் மீலாதுவிழா என்பது அன்று ஒரு நாள் மட்டுமா? என்று.
“நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா (அப்படியானால்…) இறைத்தூதரையே பின்பற்றுங்கள்” என்கிறது எழில் மறைக்குர்ஆன்.
இன்றைக்கு “நபியின் சுன்னத்” நம்மிடம் எவ்வளவுக்கு எவ்வளவு அமலில் உள்ளது…? பிள்ளைச் செல்வங்கள் மீது பெற்றோர்கள் காட்டும் பாசத்தைவிட நபிகளார் இச்சமுதாயத்தின் மீது காட்டிய பரிவும் பாசமும் மிகமிக அதிகம் என்பது எல்லோரும் புரிந்த ஒன்றுதான் ஆனாலும் நாம் அவர் மீது “ஸலவாத்” சொல்ல யோசிக்கிறோம்… ஏன் நம்முடைய பெயரில் “முஹம்மத்” என்று முழுமையாக எழுதிச்சேர்க்கவோ வாயால் சொல்லவோ கூட யோசிக்கிறோம் என்றால் நாம் என்ன முஸ்லிம்கள்? அவர் இன்றி நாம் இல்லை என்பது மடும் சர்வ நிச்சயம்!.
ஒளிரட்டும் பன்மைமிகு மீலாது விழாக்கள் !
ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
நன்றி : ரஹ்மத் – ஜனவரி 2014
© TamilIslamicAudio.com