ரமளானும், அல்குர்ஆனும், நாமும்

 

( மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி  திருப்பூர் )

 

சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,


ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
-அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான்.

அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது


நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான  குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.

அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன்

 குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.

புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்) 2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள் 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள் 5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.


இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள். 
அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்.


குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது.


உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான் என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.


 பழங்கதை புத்தகமல்ல 

திருக்குர்ஆனை வேதம் என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின என்று கூறினர்.


இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம்.
                      -அல்குர்ஆன் (21:30)


 தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு 

தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் ஸ்டோமென் (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், ஓவன்ஸ் (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான்.ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ்படைத்துள்ளான். அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.


ஆணிகளாக சிகரங்கள் 

 பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
-அல்குர்ஆன் (78:6, 21:31)


 இனிக்கும் கடல்நீர்

உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலாபல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் ஜிப்ரால்டர் என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான்.

அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.
                        -அல்குர்ஆன் (25:53)

திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் கப்தான் லாக் குஸ்ஸோ என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.


ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த கப்தான் அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு வகையான தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்?


 தேன்,தேனீ, திருகுர்ஆன்

மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் வான் பிரிஸ்க் என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.


உம்முடைய இறைவன் தேனீக்கு மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்? என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான். 
அல்குர்ஆன் (16:68)

இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது நீ சாப்பிடு நீ நுழைந்து கொள் என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள குலீ ஃபஸ்லுகீ என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !


 மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது


பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து  குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது. என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள். ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான். 

காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.
                     -அல்குர்ஆன் ( 15:22 )


இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.


அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா?  அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.


 குர்ஆனும் நாமும்  

 மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது. அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால்  அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம்  அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள். இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.


மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.
                     -அல்குர்ஆன்( 30:41 )


மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது. அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.


முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும்.  அல்குர்ஆன் (8:46)


முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. உயர்வான உம்மத் என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.


 என்ன செய்ய வேண்டும் ?

உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுடனான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். சடங்கு நூலாக திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு ( ) களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி  விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !  

 

நன்றி : குர்ஆனின் குரல் மாத இதழ்

 




1 The Importance of Ramadan: A Month of Spiritual Renewal
  Fasting during Ramadan is not merely about abstaining from food and drink — it is about developing self-control, patience, and awareness of Allah. When we fast, we strengthen sincerity, knowing that even when no one else sees us, Allah does. This builds a personal and powerful connection with Him.
 
2 Ramadan a centuries old American tradition
  African Slaves Were the 1st to Celebrate Ramadan in America
 
3 Three Ameens - Remindar from Hadeeth
  Prophet (peace be upon him) said Ameen thrice when Jibreel come and said..