அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3)

மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபு மொழிதான் தேவமொழி என்பதோ அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும் எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்நாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழ்கின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும்போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விசயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேலே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம்தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்
 
•நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!

•கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்!

•பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!

•குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!

•காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!

•பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!

•தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்தது!

•சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!

•நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!

•அரபு மொழிதான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள்(கால்நடைகள்) என்று கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.

•மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.!

•தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செய்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.

அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)

இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

“இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்” உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

 நன்றி: http://www.tamililquran.com/revelation.asp?file=history.html






1 The Amazing Quran
 

Calling the Qur’an amazing is not something done only by Muslims, who have an appreciation for the book and who are pleased with it; it has been labeled amazing by non-Muslims as well. In fact, even people who hate Islam very much have still called it amazing.