குர்ஆன் ஓர் அறிமுகம்.

குர்ஆன் என்னும் பெயர்


வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.

அருளப்பெற்ற நாள்


நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.

மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.

குர்ஆனின் அமைப்பு 


திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.

கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.

இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.

ஜுஸ்வுகள்

ஒவ்வொருவரும் திருக் குர்ஆனைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் ஓதி முடிப்பதற்கேற்றவாறு, திருக் குர்ஆனிலுள்ள வசனங்கள்யாவையும் ஏறத்தாழ சமமான முப்பது “ஜுஸ்வு” (பாகங்)களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.

ஜுஸ்வுகளின் பெயர்கள்

ஒவ்வொரு பாகத்திற்கும், “ஸயகூல்”, “தில்கர்ருஸுலு” போன்ற அந்தந்தப் பாகத்தின் தலைப்பிலுள்ள சொற்களையே பெயராகக் கூறப்பெறுகின்றது.  எனினும், “அல்ஹம்து” (தோற்றுவாய்) என்னும் முதல் அத்தியாயம், திருக் குர்ஆனிலுள்ள 30 பாகங்களுக்குமே ஒரு முன்னுரையைப் போன்று அமைந்திருப்பதனால், முந்திய பாகத்திற்கு, “அல்ஹம்து ஜுஸ்வு” என்று பெயர் கூறாமல், இரண்டாம் அத்தியாயத்தின், முதல் வாக்கியமாகிய “அலிஃப் லாம் மீம்” என்பதையே பெயராகக் கூறப்பெறுகிறது.

ருகூவுகள்

தவிர, திருக் குர்ஆனின் பிற்பகுதியில் உள்ள 35 அத்தியாயங்களைத் தவிர, மற்ற அத்தியாயங்களை- தொழுகையின் சாதாரண ஒரு ரகாஅத்தில் ஓதக்கூடிய ஒரு மத்தியதர அளவில் - பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு “ருகூவு” (அதாவது, “மாயுக்ரவு பிர்ரகஅதி” ஒரு “ரகாஅத்”தில் ஓதக் கூடியது) என்று பெயர். இந்தப் பிரிவைக் குறிக்க ஆங்காங்கே “அய்ன்” அடையாளமிடப்பட்டிருக்கிறது. அந்த “அய்ன்” உடன் குறிக்கப்பட்டிருக்கும் எண், அந்த அத்தியாயத்தில் அது எத்தனையாவது ருகூவு என்பதை குறிக்கும்.

மக்கீ - மதனீ 

திருக் குர்ஆன் அருளப் பெற்று 23 ஆண்டுகளில், பெருமானார் அவர்கள், முதல்பத்தாண்டுகளில் மக்காவிலும், பிந்திய பதிமூன்று ஆண்டுகள் மதீனாவிலும் வாழ்ந்திருந்தார்கள்.

அவர்கள் மக்காவில் வாழ்ந்திருந்த 10 ஆண்டு காலத்தில் மக்காவிலும், அதையடுத்து அவர்கள் சென்றிருந்த மற்றைய இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மக்கீ” (மக்காவில் அருளப் பெற்றவை) என்றும், அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 13-ஆண்டு காலத்தில் மதீனாவிலும், அதையடுத்து அவர்கள் சென்ற மற்ற இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மதனீ” (மதீனாவில் அருளப் பெற்றவை) என்றும் கூறப்பெறும்.

திருக் குர்ஆனில் உள்ள மொத்த அத்தியாயங்களில் 86 “மக்கீ” அத்தியாயங்களும், 28 “மதனீ” அத்தியாயங்களும் இருக்கின்றன. இவ்வாறு பொதுவே அத்தியாயங்களை “மக்கீ” “மதனீ” என்று பிரித்து குறிப்பிட்ட போதிலும், “மக்கீ” அத்தியாயங்கள் சிலவற்றில், “மதனீ” காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே “மதனீ” அத்தியாயங்கள் சிலவற்றில் மக்கா காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன.


ஸஜ்தா திலாவத் 
திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது (-சிரம் பணிந்து வணங்க வேண்டுமென்பது) நம் மார்க்க விதி. இவ்வாறு சிரம் பணிய வேண்டிய வசனங்கள் 14 இருக்கின்றன.
-----------------------------------------

வாசிப்பதற்கு முன்


திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்நிருக்கும்?

•இதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.

•சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.

•சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.

•செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைபிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.

•இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.

•தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.

•முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார். அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார். அதற்கும் மறுநாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.

இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்குத் அறிவுரை கூறுவதில்லை. மகனுக்கு தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.

இது போலவே திருக்குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.

எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.

பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.

எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! “இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை” எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென உன்னை என்று முன்னிலைக்கு மாறுவார். ‘இவர்' என்பதும் ‘உன்னை’ என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது. 

இது மேடைப் பேச்சக்களில் மட்டும் இல்லை வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம். 

“உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது” என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று “இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி” எனக் கூறுவார். முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.

ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆளிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காணலாம்.

‘நீங்கள்’ என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து ‘அவர்கள்’ என்று படர்க்கைக்கு மாறும்.

பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டதே குர்ஆன் என்பதே இதற்குக் காரணம்.

அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.

நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் “வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன” என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.

இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இருவேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். அவை வெவ்வேறு நிலைகளில் கூறப்பட்டவை.

குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே ‘நான்‘ எனக் கூறுகிறான். பெரும்பலான இடங்களில் ‘நாம்‘ என்றே கூறுகிறான்.

தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.

‘இது என் வீடு’ என்று கூறும் இடத்தில் ‘இது நம்ம வீடு‘ என்று கூறுகிறோம். இதை மற்றவர்களுக்கும் பங்கு உண்டு எனப் புரிந்து கொள்ள மாட்டோம்.

சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது ‘நம்ம பையன்’ என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் ‘நாம்’ ‘நம்மை’ ‘நம்மிடம்’ என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி: http://www.tamililquran.com/intro_2.asp .

குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை படிப்பதற்கு இந்த இணைய தளத்தைப் பார்க்கவும்.: http://www.tamililquran.com/intro_2.asp



 




1 அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
 

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

 
2 குர்ஆன் ஓரு இறை வேதம், முஹம்மத் நபி (ஸல்) ஓர் இறைத்தூதர்
 

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.