Tamil Islamic Media ::: PRINT
செவி கொடு ; சிறகுகள் கொடு !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் - Cell No. : 9444272269  )


இறைவா !


பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.

அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை.

சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டிவரும் நான் � வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன்.

என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன; ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் எழுச்சியாகிவிடுவதை உணர்கின்றேன்.

நீ இருப்பது பொறுமையாளர் பக்கம் அல்லவா ! என்னையும் அப்பக்கம் முன்னிலைப்படுத்த உன் கண்ணிய அருளுக்காக கையேந்துகிறேன்.

இறைவா !

தாமரை தண்ணீரில் பூப்பதுபோல என்னையும் சகிப்புத் தன்மைக்குள் தடம் பதிக்க வைப்பாயாக ! வாழை எளிமைக்குள் வசிப்பதைப் போல என்னையும் இந்த இயல்புக்குள் இடம்பெற வைப்பாயாக ! தென்னை உயரத்துக்குள் காய்ப்பதைப்போல என்னையும் உச்சத்தில் சரங்கொள்ள வைப்பாயாக ! மல்லிகை வாசனைக்குள் உவகை கொள்ள வைப்பாயாக !

 

என் கோரிக்கைகள், கோஹினுர் வைரங்களுக்காக அல்ல,
உன் எச்சரிக்கைகளின் உச்சரிப்புக்காகவே !


இறைவா !

 

நீ நினைத்தால் உப்புக் கல்லையும் வைரக்கல்லாக உயர்த்தி விடுகிறாய்.
நீ விரும்பினால் செப்புக் காசையும் தங்கக் காசாகச் செல்லுபடியாக்கி விடுகிறாய்.
நீ சினந்தால் கோபுரங்களையும் குப்பை மேடாக குறுகிடச் செய்து விடுகிறாய்.
நீ அரவணைத்தால் வெறும் ஈயையும் தேனீயாக விளங்க வைத்து விடுகிறாய்.

 


தொந்தரவு தராத தூய உறவுகளை நிலைக்கச் செய்து போதும்.
ஆதரவு தருகின்ற அன்பான நட்புகளை அருகிருக்கச் செய், அதுபோதும்.


இறைவா !

சகலமும் அகலட்டும். உன் அருள் மட்டும் இருக்கட்டும்.
உலகமும் துலங்கட்டும். உன் மறுமையும் விளங்கட்டும்.
மாறான வழி செல்ல எனக்குள் பயம் பிறக்கட்டும்.
நேரான வழிவாழ எனக்கு ஜெயம் கிடைக்கட்டும்.
அடியார்களின் வேண்டல்களை அதிகம் விரும்பும் நீ, இந்த எளியவனின் வேண்டல்களை, விண்ணப்பங்களைக் கிடப்பில் போடாமல் உடனடி உத்தரவிடுவாயாக.

பிரபஞ்சப் பேராளனே,
இந்தச் சிறுபிள்ளையின் வேண்டல்களுக்குச் செவி கொடு; சிறகுகள் கொடு;

என் வேண்டுகோள்,

என் வாசல்களில் கழுதைகள் கத்த வேண்டாம், சேவல்கள் கூவட்டும்.
என் நேசங்களில் வான்கோழிகள் வசப்பட வேண்டா, கோலமயில்கள் தோகை விரியட்டும். என் பாசங்களில் வேப்பங்காய்கள் வேண்டாம், வெள்ளரிக்காய்கள் வரட்டும்.
நான் தடுமாறுவதும் இல்லாமல் தடம் மாறுவதும் இல்லாமல் சமுதாயத்தில் நடமாட விரும்புகிறேன்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.