Tamil Islamic Media ::: PRINT
இளையான்குடியில் உருது மக்கள்


(இவர்கள் பூர்வீகமாக உருதுவினை தாய்மொழியாக கொண்டவர்களா அல்லது இடையில் நவாபுகளுக்கு பணியெடுக்க சென்றவர்களா என தெளிவாக தெரியவில்லை)

முன்பொருமுறை அத்தா கூறியது

"பரமக்குடி செட்டியார் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த போது ஆங்கில வாத்தியார் ஒருத்தர் இருந்தார், நம்ம தென்பாங்கு தமிழை நம்மைவிட படுஅழகாக பேசுவார், ஒருமுறை பள்ளியில் அவர் அவரது மகன்களை அழைத்து இந்தியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார் (அவரது மகனில் ஒருவர் எனக்கு நண்பன்), அப்போது அவர் பேசியதை கேட்டு எங்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. என்ன சார் இந்தி பேசுறீங்க என கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே இது இந்தி இல்லை, உருது என்றார். அவர் கூறுவது வரை எங்களுக்கு அவரது தாய்மொழி உருது என்றே தெரியாது. அவரது மகன்களும் சக மாணவர்களுக்கு இதுபற்றி ஒருமுறை கூட கூறியதில்லை" என்றார் அத்தா.

அந்த உருதுக்கார வாத்தியாருக்கு இருப்பிடம் இளையான்குடி என்பதும், அவர் ஆசிரியப்பணி நிமித்தமாக பரமக்குடியில் இருப்பது வசித்ததும் அத்தா சொல்ல கேள்விப்பட்டேன். அதேபோல முன்பொருமுறை இளையான்குடியில் 'பட்டாணி' விறகு கடை என இருந்த ஒரு பெயர் பலகையை குறித்து என் கணவர் கூறியதையும் கேட்டுக்கொண்டேன் . இப்போது தற்காலிகமாக இளையான்குடி, புதூரில் நான் இருந்துவருவதால் , புதூர் பெண்கள் மதரஸாவிற்கு அரபு பாடங்களின் சிலபஸ் தயார் செய்யும் உஸ்தாத் , உருது மொழி வாயிலாக அரபிலக்கணம் போதிப்பதாகவும், தற்போது உருது மொழியினை மதரஸா பாடதிட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் அந்த மதரஸாவை சேர்ந்த ஆலிமா ஒருவர் கூறியதை வைத்து, இளையான்குடி, பரமக்குடி ஆகிய
இந்த வட்டத்தில் உருது பேசும் மக்கள் இங்கே இருப்பார்களா என்ற தேடலோடு சிலரை அணுகிய போது

அதில் ஒருவர் இளையான்குடி "உதயம் எலக்ட்ரானிக்ஸ்" எதிரே "சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர்" என்ற பெயரில் (அத்தர் மற்றும் சிங்கப்பூர் பொருட்களை விற்பனை செய்கிறார்) கடை நடத்தும் உரிமையாளரை சந்தித்து விசாரித்தோம். அதற்கு அவர், அவரது வீட்டிற்கு மேலே வாடகைக்கு குடியிருந்தவர்கள் பட்டாணிகள் (உருது முஸ்லிம்) என்றும், அவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்றும் தற்போது கொரனா காரணமாக பிள்ளைகளது வீட்டிற்கு (மதுரைக்கு) சென்றுவிட்டதாக கூறினார். மேலும் ஒரு ஐந்து குடும்பத்தார் இங்கே தலைமுறைகளாக இருந்துவருவதாகவும் கூறினார். அவர்களின் மூத்தோர் யாருமில்லை, இளையவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் கூறினார். எனக்கு தகவல் கொடுத்த கடை உரிமையாளருக்கு வயது 84, அவர் தன்னுடைய சிறிய வயது தொட்டு உருது முஸ்லிம்களை இளையான்குடியில் காண்பதாகவும் கூறினார்.

உருது மக்கள் தான் ஷாபி பள்ளிவாசல் கட்டினார்களா ? என்பது பற்றி கேட்டபோது, இல்லை... அது நம்ம ஆளுங்களும் தொழுவாங்க, ஆனால் நம்ம தென்னாட்டில் ஹனபி மதுஹபுதான் பிரதானம், வடக்கத்திய தொடர்புள்ளவர்களுக்கு தான் ஷாபி மதுஹபு தொடர்பிருக்கும்... அவர்களுடைய படிப்படியான வருகைக்கு பிறகு இங்கும் ஷாபி மதுஹபு வந்திருக்கலாம்...இங்குள்ள ஷாபி பள்ளியில் பெரும்பாலும் நம்ம தமிழ் முஸ்லிம் ஆட்கள் தான் தொழுவுவாங்க என்றார். நன்னாவிடமிருந்து தகவல் பெறுவது சற்று கடினமாக இருந்தது, பத்து வேள்வியில் ஒன்றுக்கு மட்டுமே ஆர்வமாக பதிலளித்தார் (ஒருவேளை அவருக்கு விபரம் அதிகம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கொரனா காலத்தில் வந்து நம்மை அநாவசிய கேள்வி கேட்டு தொல்லை செய்கிறாரே என நினைத்திருக்கலாம்).

உருது முஸ்லிம் என ஒருவரை எப்படி பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என சிலரிடம் கேட்டதற்கு...

#பர்தா
****

கொஞ்ச காலத்துக்கு முன்ன பட்டாணி முஸ்லிம் பொம்பளைங்க தான் படுதா (புர்கா என்பது தற்போது உச்சரிக்கப்படும் சொல்) போடுவாங்க, முகத்தையும் மூடிக்குவாங்க, நம்ம பொம்பளைங்க சேலை முக்காடு தான் போடுவாங்க, கண்களில் கட்டாயம் சுருமா போடுக்குவாங்க... ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயசு வரை கண்ணில் சுருமா தீட்டுவாங்க, அவர்களில் வயசான ஆண்களும் சுருமா போட விரும்புவாங்க... (எங்க கடையில் சௌதி சுருமா கட்டி, அது தீட்ட பளிங்கு/கண்ணாடி குச்சி வைத்து விற்போம், அதை அவங்க தான் விரும்பி வந்து வாங்குறது வழக்கம் - என்ற தகவலும் கொடுத்தார்).

#பையத்து மோதிரம்
********

ஆண்களில் விரல்களில் பல வண்ண கற்கள் அல்லது சூடம் வைத்து வெள்ளி மோதிரம் அணிவார்கள், அப்படி நம்மவர்கள் யாரும் அணிய நான் கண்டதில்லை, இப்போது எல்லாரும் அந்த மாதிரி வெள்ளி மோதிரம் போட்டுக்கொள்கிறார்கள் என்றார். (இவ்வளவு தான் இளையான்குடி உருது மக்கள் குறித்த எனது தரவு - மேலும் தேட வேண்டும்)

#சேலைக்கட்டும்_தாலியும்
*********

நம் தமிழகத்து பெண்கள் இடப்புறமாக மாறாப்பு போட்டு சேலை கட்டுவதை போல வடநாட்டு பெண்கள் குறிப்பாக மார்வாடிகள் , குஜராத்தி,ராஜஸ்த்தானி பெண்கள் வலப்புறம் மாராப்பு போட்டு ,பாவாடை தாவணி (லெஹங்கா ச்சோலி) அல்லது சேலை அணிவார்கள். அதே பழக்கத்தை இங்கும் சில முஸ்லிம் பெண்கள் கையண்டுள்ளாள்கள், இளையான்குடி, புதூர் ஸ்டைலில் பத்தை கைலி தாவணி உடுத்தினாலும் தாவணியை வலப்புற மாறாப்பாக போட்டுக்கொள்கிறார்கள்.

தமிழ் முஸ்லிம் பெண்களுடைய தாலியில் கர்சமணி-பவளம் மற்றும் மஞ்சள் கட்டி போல ஒரு தங்கத்திலான துண்டு அலங்கரிப்பதை போல, இளையான்குடி உருது பெண்கள் தாலியில் இரண்டு மெல்லிய வரிசையில் பொடிசான கர்சமணியும் பட்டையான பிறை-நட்சத்திர (மூன்று முதல் ஐந்து ) வடிவமும் அலங்காரமாக கோர்க்கப்பட்டிருக்குமாம்.

#மெட்டியும்_மூக்குப்பொட்டும்
**********

அவர்களில் திருமணத்திற்கு பிறகு வெள்ளி மெட்டி அணிவார்களாம், வயதிற்கு வந்த பெண்களுக்கு மூக்கு குத்திவிடுவார்களாம் (வலப்புறம்) , மூக்குத்தி என்பதை இங்கு "மூக்குப்பொட்டு" என்கிறார்கள். மூக்குப்பொட்டு போடுதல் தமிழ் முஸ்லிம் பெண்களிடையே அப்போது இல்லை, காதில் வரிசையாக வாளி மாட்டுதல் மட்டுமே இருந்தது. உருது மக்கள் பச்சிரிசி சோறு உண்பவர்களாக அறியப்படுகிறார்கள், தமிழகத்தில் பெரும்பாலும் (பிராமணர்கள் தவிர ) அனைவரும் புழுங்கல் அரிசியையே சோறு ஆக்க பயன்படுத்துகிறோம். பரமக்குடி , இளையான்குடி பகுதிகளில் சௌராஷ்டிரியர்களும் செட்டியார்களும் அதிகம், அவர்களில் தெலுங்கு செட்டியார்கள் பச்சரிசி சோறு உண்பார்கள் எனப்பட்டது.

திருமணங்களில் முதல் நாள் தான் மங்னி எனும் நிச்சயதார்த்தம் செய்கின்றனர். திருமணத்தன்று மணமகன்களுக்கும் ,மணமகள்களுக்கும் தலையில் பூச்சரம் போட்டு மூடூவார்கள், தமிழ் முஸ்லிம் திருமணங்களில் அப்படி பரவலாக பூச்சரம் போட்டு மூடுவதில்லை என்கின்றனர்.

"இந்திய சுதந்திர போரில் முஸ்லிம் பெண்களின் பங்கு" -- என்ற எனது தொகுப்பில் இளையான்குடி பகுதியில் இருந்த ஒரு பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை பற்றி எழுத நேர்ந்தது, இப்போது வரை அவருடைய படமோ அல்லது எதுவும் கல்வெட்டோ கிடைக்குமா என்று தான் தேடித்திரிகிறேன். (அந்த புத்தகத்தில் அடுத்த எடிஷனில் கீழுள்ள தரவுகளை சேர்க்க வேண்டும், முன்னர் தகவல் கிடைக்காமல் விடுபட்டுள்ளது).

முஹம்மதலி - சௌக்கத்தலி எனப்படும் அலி சகோதரர்களின் தாயான ஆபிதா பீவி அவர்கள், காந்தியடிகளின் வேண்டுகோளினை ஏற்று இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து நிதி சேகரித்தார்கள், அவர்களது பிரயாணத்தில் அவர் இளையான்குடிக்கும் வருகை தந்துள்ளார். இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளை பிரயாணக்குறிப்பில் எடுத்து கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த முர்தஸா சாஹிப் எனும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். அப்படி அவர்கள் இளையான்குடி வந்தபோது அப்போது இளையான்குடியில் "பங்களாக்காரர்" என அழைக்கப்பட்ட ஏ.எஸ்.டி.இபுராம்ஷா என்பவருடைய மனைவி பல்கீஸ் பீவி அவர்கள் தான் ,ஆபிதா பீவி அவர்கள் செய்த உருது பிரச்சாரத்தை தமிழில் மொழிப்பெயர்த்து மக்களுக்கு அறிவித்துள்ளார். இபுராம்ஷா பங்களாவில் தான் அவர் தங்கியும் உள்ளார். (இளையான்குடி அலங்காரத்தோப்பு எனுமிடத்தில் இருந்த இபுராம்ஷா அவர்களின் பிரம்மாண்ட பங்களா இருந்த இடம், அவரது குடும்பத்தாரால் அரசின் காவலர்கள் குடியிருப்பு கட்டிக்கொள்ள தானம் கொடுக்கப்பட்டுவிட்டது, தற்போது அங்கு இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட அனகத்து கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ய பெரிய பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி கட்டி பயன்பாட்டில் உள்ளது.)

இபுராம்ஷா மனைவி பல்கீஸ் பிவி தனது எல்லா நகைகளையும் கழற்றி அவருக்கு கொடுத்து உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. (இந்த தகவலை கூறியவர் திரு.யாஸீன் - இவர் பங்களாக்காரர் இபுராம்ஷா அவர்களின் மகன் அபுபக்ரு அவர்களின் மகன். அபுபக்ரு அவர்கள் திமுகவில் நகரமன்ற செயலாளராக இருந்தவர், அபுபக்ரு அவர்களுடைய மனைவி ஆயிஷா அவர்கள் இளையான்குடி சேர்மனாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பங்களாக்காரர் இபுராம்ஷா அவர்களுடைய பெரும் முயற்சியால் தான் இளையான்குடி கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அந்த கூட்டுறவு வங்கி தான் உலக வங்கி போல இன்றும் தடையின்றி சேவையாற்றி வருகிறது)

குறிப்பு : உருதுக்கள் தான் படுதா போடுவார்கள் என்ற அந்த மக்களின் நம்பிக்கை போலவே நம்மிலும் பலர் நினைக்கின்றோம், ஆனால் உருதுக்களில் புர்காவே போடாதவர்களும் உண்டு. இன்றும் கூட தலையில் முக்காடும் போடாத நவீன உருது பெண்களும் உண்டு. சென்னையில் நான் வாழும் பகுதியில் புர்கா போட்ட/ புர்கா போடாத உருதுக்காரர்களும் உண்டு
தார்காவிற்கு போகும்/ தர்காவை வெறுத்த உருத்துக்கள், முஹர்ரம் கொண்டாடும் உருதுக்கள்/ பஞ்சாவை ஹராம் எனும் உருத்துக்கள் ,பச்சரிசி உண்ணும் / மூன்று வேளையும் கோதுமை அல்லது ராகி ரொட்டிஉண்ணும் உருதுக்கள் என அனைவரும் கலந்தே வாழ்கின்றனர். (சென்னையின் எனது அனுபவம் குறித்த மற்றொரு பதிவில் விரிவாக)

பழைய ஞாபகம் :

எனது நன்னி (அம்மாவின் அம்மா) பேசும் போது...

"குர்சியில் இரி" ( நாற்காலியில் உட்காரு)
" கம்சு மாட்டு ( மேல்சட்டை போட்டுக்கொள்)
" சல்வார் மாட்டு " ( கால்சட்டை போடு)
" காசீர் விரி " (பாய் விரி)
" தஸ்தர் விரி" (சாப்பிடுவதற்கு உட்கார தரையில் விரிப்பு போடு)
" கொட்ராவில் ஊற்று" (கிண்ணத்தில் ஊற்று)
"காடி ஓட்டு" (வாகனம் ஒட்டு)
முசீபத்து (ஆபத்து)
பலாய் (சாபம்)
கார்வாரு (தகராறு)

போன்ற சொற்களை உபயோகிப்பார், இது கூட இளையான்குடியில் உருது மக்களின் தாக்கமாக இருக்கலாம்.

இதுபற்றி இன்னும் கூட நிறைய தேட வேண்டும், அடிக்கடி இப்படி எனது தேடுதலுக்காக கூட்டிக்கொண்டு அலையும் எனது கணவர் என்னை கேட்கிறார்..."என்னம்மா போதுமா இல்லை இன்னும் போகணுமா" எனும் போது எனக்கு அவரை காண பாவமாக உள்ளது. மற்றொரு பதிவில் கூடுதல் தகவல்களுடன்..... இன்ஷா அல்லாஹ்.
S. Nasarath Rosy

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.