Tamil Islamic Media ::: PRINT
இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்

காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற மனிதர் அண்ணல் நபி (ஸல்)அவர்களிடம் வந்து, “”அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”உனக்கு என்னென்ன தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் கேள்” என்று கூறினார்கள். வந்த மனிதர் சுமார் 23 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார். அவை அனைத்தும் கருத்தான கேள்விகள். அவற்றிற்கு அண்ணல் நபி (ஸல்) அளித்த பதில்கள் மிகவும் பொருத்தமாகவும் தத்துவம் நிறைந்தவையாகவும் உள்ளன.

இந்த நீளமான ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதனைப் பற்றி இமாம் முஸ்தஃக்பிரி (ரஹ்) அவர்கள் கருத்து தெரிவிக்கும்பொழுது, “”இறைமார்க்கத்தின் நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய, அதிகப் பயனுடைய நபிமொழி” என்று கூறியுள்ளார்கள். நீங்களும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இவை போன்ற கேள்விகள் உங்கள் சிந்தையில் என்றாவது தோன்றியது உண்டா, இந்த அறிவுரைகள் முன்னரே உங்கள் வாழ்க்கையில் இடம் பெற்று இருக்கின்றனவா என்பது பற்றி உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு பதிலைத் தேடிக்கொள்ளுங்கள்.

 வந்தவர் :     மக்கள் அனைவரிலும் நானே அறிவுஞானம் மிக்கவனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     அல்லாஹ்வை அஞ்சி நடந்திடு; மக்களிலேயே அறிவுஞானம் மிக்கவனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     மக்கள் அனைவரிலும் நானே செல்வந்தனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     நீ நிறைமனம் உடையவனாக இரு. மக்கள் அனைவரிலும் நீ செல்வந்தனாக ஆகலாம்.

 வந்தவர் :     மக்கள் அனைவரிலும் நானே நீதி மிக்கவனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     உனக்கு விரும்புவதையே பிறருக்கும் நீ விரும்பு. அப்பொழுது மக்களிலேயே நீதி மிக்கவனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     மக்கள் அனைவரிலும் நானே சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     மக்களுக்கு நற்பயன் அளிப்பவனாக நீ ஆகு. அப்பொழுது மக்களிலேயே சிறந்தவனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     மக்கள் அனைவரை விடவும் நானே அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பு உடையவனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     அல்லாஹ்வை அதிகம் அதிகம் நினைவுகூர்ந்து கொண்டே இரு. அப்பொழுது மக்கள் அனைவரிலும் அவன் பக்கம் நெருக்கம் உடையவனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     எனது ஈமான் (இறைநம்பிக்கை) நிறைவானதாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     நற்குணத்தைக் கடைப்பிடி. அப் பொழுது உனது இறைநம்பிக்கை நிறைவாக இருக்கும்.

 வந்தவர் :     நான் இஹ்ஸான் எனும் அழகிய வழிபாடு செய்பவர்களின் கூட்டத்தில் உள்ளவனாக இருக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்ற உணர்வுடன் வணங்கிடு. நீ அவனைப் பார்க்கவில்லை என்றாலும் நிச்சயமாக அவன் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (எனும் உறுதியுடன் வணங்கிடு) இப்படிப்பட்ட நிலைக்கு நீ உயர்ந்து விட்டால், அழகிய வழிபாடு செய்பவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.

 அண்ணலார் :     அல்லாஹ் விதித்துள்ள கடமை களை நிறைவேற்று. அப்பொழுது அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர்களின் கூட்டத்தில் நீயும் ஒருவனாக ஆகலாம்.

வந்தவர் :     பாவங்களை விட்டும் பரிசுத்தமான நிலையில் அல்லாஹ்வை (மறுவுலகில்) நான் சந்திக்க விரும்புகிறேன்.

அண்ணலார் :     குளிப்பது கடமையாகி விட்டால் குளித்து முழுமையாகச் சுத்தமாகி விடு. பாவங்களிலிருந்து தூய்மையானவனாக நீ அவனைச் சந்திப்பாய்.

வந்தவர் :     மறுமை நாளில் ஒளியுடன் எழுப்பப்பட நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     எவருக்கும் நீ அநீதி இழைத்திடாதே! அப்பொழுது மறுமை நாளில் நீ ஒளியுடன் எழுப்பப்படுவாய்.

வந்தவர் :     மறுமை நாளில் எனது இறைவன் எனக்குக் கருணை புரிந்திட நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     உனக்கும் பிற மனிதர்களுக்கும் நீ கருணை புரிந்திடு. மறுமை நாளில் அல்லாஹ் உனக்குக் கருணை புரிவான்.

வந்தவர் :     என்னுடைய பாவங்கள் குறைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டே இரு. உன் பாவங்கள் குறைந்து விடும்.

வந்தவர் :     மக்கள் அனைவரிலும் கண்ணியம் உடையவனாக இருக்க நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     உனது எந்தப் பிரச்னையையும் பிற மனிதர்களிடம் முறையிடாதே. மக்கள் அனைவரிலும் கண்ணியம் உடைய வனாக நீ ஆகலாம்.

வந்தவர் :     மக்கள் அனைவரிலும் ஆற்றலுடையவனாக ஆவதற்கு நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     அல்லாஹ்வை முழுவதும் சார்ந்து வாழ்ந்திடு. நீயே மக்கள் அனைவரிலும் ஆற்றல் மிக்கவனாக ஆகலாம்.

வந்தவர் :     அல்லாஹ் எனக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்கிட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

 அண்ணலார் :     எப்பொழுதும் தூய்மையுடன் நீ இருந்திடு. அல்லாஹ் உனக்கு அதிகம் வாழ்வாதாரம் வழங்குவான்.

வந்தவர் :     அல்லாஹ் ரசூலின் அன்பைப் பெற்றவர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.

 அண்ணலார் :     அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நீ நேசித்திடு. அவ்விருவரின் அன்பைப் பெற்றோர் கூட்டத்தில் நீ சேர்ந்திடலாம்.

வந்தவர் :     மறுமை நாளில் அல்லாஹ் ரசூலின் கோபத்திற்கு ஆளாகாதிருக்க நான் விரும்புகிறேன்.

 அண்ணலார் :     அல்லாஹ்வின் படைப்புகளின் மீது நீ கோபம் கொள்ளாதே. மறுமை நாளில் அல்லாஹ் ரசூலின் கோபத்திற்கு நீ ஆளாக மாட்டாய்.

வந்தவர் :     என் பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப் பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     `விலக்கப்பட்ட ஹராமான உணவுகளை நீ தவிர்த்திடு. உனது பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படும்.

வந்தவர் :     மறுமை நாளில் என்னுடைய பாவங்களை அல்லாஹ் மறைத்திட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அண்ணலார் :     உலகில் உன் சகோதரர்களின் பாவங்களை நீ மறைத்திடு. மறுமை நாளில் உன் பாவங்களை அல்லாஹ் மறைத்து விடுவான்.

வந்தவர் :     பாவங்களிலிருந்து (அல்லது குற்றங்களி லிருந்து) ஈடேற்றம் அளிக்க வல்லது எது?

அண்ணலார் :     (பாவத்தை எண்ணி) அழுவதும் அடக்கமும் பிணிகளும்.

வந்தவர் :     எந்த நன்மை அல்லாஹ்விடத்தில் மகத்துவம் மிக்கது?

அண்ணலார் :     நற்குணம், பணிவு, சோதனைகளைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வது.

வந்தவர் :     எந்தத் தீமை அல்லாஹ்விடத்தில் மிகவும் கடுமையானது?

அண்ணலார் :     கெட்ட குணமும் வடிகட்டிய கஞ்சத்தனமும்

வந்தவர் :     இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்க வல்லவை யாவை?

 அண்ணலார் :     மறைமுகமான தர்மமும் உறவினர்களுடன் இணைந்து வாழ்வதும்.

வந்தவர் :     மறுமை நாளில் நரக நெருப்பைத் தணிக்க வல்லவை யாவை?

அண்ணலார் :     இவ்வுலகத்தில் சோதனைகளின் மீதும் துன்பங்களின் மீதும் பொறுமை கொள்வது.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.