Tamil Islamic Media ::: PRINT
கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை

மதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.

இதன் மூலம் மதம் என்பது மனம் சார்ந்த ஒன்று என்பது தெளிவு.இந்த பதிவானது மதம் என்ற தலைப்பில் மனங்களை அலசுவதால்,இது மதம் சார்ந்த பதிவென்பதை விட,மனம் சார்ந்த பதிவாகக் கொள்ளலாம்.

மதம்:

மனித வாழ்கையில் மதம் என்பது பிரிக்கவியலாத காரணியாகும்.அது மனித வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை வகுத்து,நன்மை தீமையை பகுத்து ,அவனது வாழ்வை சீர் செய்துகொள்ள பயன்படுகிறது.

மதம் என்ற ஒன்றை பயன்படுத்தாது,தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் உலகில் இல்லாமல் இல்லை.அவர்கள் நாத்தீகர்கள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்போர்.அவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் வெகு சொற்பமேயாகையாலும்,நாத்தீகம் இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல என்பதாலும்,உலகின் பெரும்பான்மை மக்களின் மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மதம் மற்றும்,மதமாற்றம் சார்ந்த விடயங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.

இன்று உலகின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதங்களை பார்க்கின்ற போது, குறிப்பாக ஹிந்துமதம் பலதெய்வ வழிபாடும், கிருஸ்தவ மதம் மூன்று தெய்வ வழிபாடும், இஸ்லாம் ஒரு தெய்வ வழிபாடும் கொண்டது.

மதம் என்பது கடவுள் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப் படுகிறது. அந்தந்த மதம் சார்ந்த மக்கள்,தாங்கள் வழிபடும் கடவு(ள்க)ளின் மீது நம்பிக்கை கொண்டு, அந்த கோட்பாடுகளின் படி தங்களது வாழ்க்கையை செழுத்த முயல்கின்றனர்.

மதமாற்றம்:

மதம் என்பது நாம் முன்னரே சொன்னது போல் மனம் சார்ந்த ஒன்றாவதால், மதமாற்றம் என்ற வார்த்தை, பொருத்தமான ஒன்றாக இல்லை. மாறாக மனமாற்றம் என்ற பதமே பொருத்தமானது. மேலும் உண்மையான மதமாற்றம் என்பது மனமாற்றமே.

இஸ்லாம் - முந்தைய காலங்களில் அதன் கொள்கைகளால் கவரப்பட, உலகில் வியாபித்தது ஒரு புறம் இருந்தாலும், தற்காலங்களில் இஸ்லாம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களாலும், சர்ச்சைக்குரிய கேள்விகளாலும், இஸ்லாம் புதிய பரிமாணத்தில் வளர்கிறது என்றால் மிகையல்ல.

அதெப்படி, எதிர்மறையான விமர்சனங்கள் வளர்ச்சிக்கு உதவிடமுடியும்?.. என்றால், - முடியும். எதிர்மறையான கேள்விகளுக்கு, முறையான பதில்களாலும், தெளிவான விளக்கங்களாலும், அதன் உண்மை நிலையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட, இந்த வளர்ச்சி சாத்தியப்படுகிறது.

சரி தலைப்புக்கு வருவோம். இஸ்லாம், என்ற உடனேயே மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் "வாளால் பரப்பப்பட்ட மதம்".என்ற ஒரு கருத்து வேரூன்றி இருப்பது உண்மை. இது சாத்தியமா? வன்முறை கொண்டு உலகில் கட்டமைக்கப்பட்ட எந்த ராஜ்ஜியமும் வீழ்ச்சியை சந்திக்காமல் இருந்ததில்லை என்பதை வரலாற்றின் பக்கங்கள் பதியாமல் விட்டதில்லை. அதுமட்டுமல்லாது மதம் என்பது மனிதன் மனங்கொண்டால் மட்டுமே முதலில் அவனைக் கடக்க,பின் வளர, பரவ சாத்தியப்படும். இது குறித்து அனைவரும் கருத்து தெரிவித்திருக்க, பேசு பொருளான இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது, என்பதை பார்ப்போம்.....

கட்டாய மதமாற்றம் என்ற சொல்லாடல், மிக நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. கட்டாய மதமாற்றம் என்பது எப்படி இருக்க முடியும்?

அனைத்திற்கும் மேலாக இப்படி ஒரு மதமாற்றம்,யாருக்கு எப்பயனை அளிக்கிறது. மதம் மாற்றுபவருக்கும் சரி. மதம் மாற்றப்படுபவருக்கும் சரி, எள்ளின் முனையளவும் இதில் பயன் இல்லை. ஒருவேலை பணத்திற்காக மதம் மாற்றும், அல்லது மதம் மாறும் மக்களுக்கு,அந்த பணம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இங்கு மதம் மனம் சார்ந்த ஒன்றாவதால், மதத்தை பணம் சார்ந்த ஒன்றாக பாவிப்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியமற்றது. ஏனெனில் அவர்களுக்கு வாய்த்த மதமும், அவர்கள் வந்த மதமும் பொருளற்ற, மற்றும் பொருள் சார்ந்த ஒன்றே.

முஸ்லீம்கள் இஸ்லாத்தை, உலகமக்களுக்கு அறிமுகப்படுத்த, அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்க பணிக்கிறது. ஆனால் ஒரு முஸ்லிம் எந்த எல்லை வரை இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைக்க முடியும் என்பதற்கான வரைமுறைகள் உண்டு.

கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதனால் எப்பயனும் இல்லை என்பது கண்கூடு. இஸ்லாத்தை பொருத்தவரை ஒருவர் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஏற்காதவரை அவர் பிறவி முஸ்லீமாக இருந்தாலுமே, அவர் முஸ்லிம் அல்ல. பெயரளவிலான முஸ்லிமை, முனாஃபிக் (நயவஞ்சகன்) என இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது. அதாவது உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல், உதட்டளவில் முஸ்லிமாக இருப்பவனை இஸ்லாம் இங்ஙனம் சாடுகிறது. அதுமட்டுமல்லாது, இறைவனாலும் இவர்கள் வெறுக்கப்பட்டவர்கள்.

கட்டாய மதமாற்றம் மூலம் வருபவர்கள் இப்படிப்பட்டவர்களே. இவர்களை இழுத்துவருவதால், கொண்டுவந்தவனுக்கு, இவ்வுலகிலும் பயனில்லை, மறுமையிலும் பயனில்லை.மேலும் இவர்களால் இஸ்லாத்திற்கு ஆபத்தே தவிர நன்மை இல்லை. இவர்கள் குறித்த நேரத்தில், காலை வாரி, மதம் மாற்றியவனை குழியில் தள்ளிவிடுவார்கள். அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. தன்னை கட்டுக்குள் வைக்க முயலும் ஒருவனை யாரும் சமயம் பார்த்து அழிக்கவே முயல்வர்.

மனிதர்கள் யாவரும் முஃமீன்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்த முடியுமா? அல்குர்ஆன் - 10 : 99.

என அல்லாஹ் நபியை பார்த்து கேட்கிறான். மேலும்

நபியே நீர் கூறுவீராக! நான் (உங்களை கட்டாயப்படுத்தி) உங்களின் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.
அல்குர்ஆன் - 10 : 108

எனவாரான மேற்கண்ட வசனங்கள் மூலம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாமிய அணுகுமுறையே அல்ல என்பதை உணரமுடியும்.

இஸ்லாம் அழைப்புப்பணி செய்ய சில அழகிய வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு அளிக்கிறது.அவ்வழிமுறையை பின்பற்றி, ஒவ்வொரு முஸ்லிமும் மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திவைக்கும் கடமையை கொண்டுள்ளார்.

அதன் எல்லை எதுவரை எனில், இஸ்லாம் குறித்து விளக்கி, அதில் ஏற்படும், சந்தேகங்களை கலைந்து அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு கடமையாகிறது. அத்துடன் அவரது பணி முற்றுப்பெறுகிறது.

(நபியே அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான)ஒரு பொதுவான விஷயத்தின் பக்கம் வாருங்கள் (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்" எனக் கூறும் (முஃமீன்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் "நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

அல்குர்ஆன் - 3:64, மற்றும் 16:125 ஆகிய குர்ஆன் வசனங்கள் மூலம் மக்களை எங்ஙனம் அழைப்பது, அவர்களுடன் எப்படி அழகிய முறையில் உரையாடுவது, என இறைவேதம் எடுத்தியம்புகிறது.

இதன் பின் அவர் இஸ்லாத்தை ஏற்பது, மறுப்பது குறித்த கவலை அவருக்குறியதல்ல. அவருடைய உள்ளத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் வராததும், வல்ல இறைவனின் நாட்டம்.

அல்லாஹ் அனுப்பிய இறுதித்தூதர், முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் அறிவுறுத்துகிறான்.

நபியே ! நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
(அல்குர்ஆன் 6-107)

மேலும் உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு (அல்குர்ஆன் 109-6)

என அழகிய முன்மாதிரியாக சமூக நல்லிணக்கத்தை கற்றுத்தருகிறது இஸ்லாம்.

வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பி,மக்கள் முஸ்லிம் (முனாஃபிக்)களாவதை இறைவன் விரும்பவில்லை. வாட்களை வீசி முனாஃபிக்களை இஸ்லாத்தின் அங்கத்தினராக்கி இருந்தால், இன்று இஸ்லாம் என்ற ஒன்று இல்லாமல் போய் இருக்கும். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்)

( அல்லாஹ் உள்ளத்தை பார்க்கக் கூடியவனாக இருக்கிறான்)

அப்படி வாள் முனையில் மதம் மாறியவர்கள், சமயம் கிடைக்கும் போது தனது பழைய மதத்துக்கு போக வெகு நேரம் ஆகாது. எத்துனை தலைமுறையானாலும், தனது வாரிசுகளுக்கு சொல்லிவிட்டு போக முடியும். இது நம் மதம் அல்ல, நாம் கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள். இவர்களை வீழ்த்தி,"தாய்மதம் திரும்புக”என அவர்களை எச்சரித்திட முடியும்.ஒரு தலைமுறை கழிந்தாலும், மறு தலைமுறை, மதத்தில் இருந்து வெளியேரும்.

மேலும் உலகில் ஏகாதிபத்தியம், இன, நிற அடக்குமுறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரங்கேறி, பின் அவை வழுவான போராட்டம் மற்றும் புரட்சியின் கரம் கொண்டு, காலாவதியாக்கப்பட்டதை நாம் அறியாமல் இல்லை. இஸ்லாம் இத்தகைய வாள்முனை பரலாக இருந்திருப்பின் உலகில் எங்கேனும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும், புரட்சிகளும் வெடித்து, அது அந்த அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவந்திருக்குமல்லவா?அவ்வாறான செய்திகளை நமக்கு வரலாறுகள் காணத்தராததில் இருந்தே, வாள் முனை மதமாற்றம் என்பது மத அரசியலின் அற்பமான பிரச்சார யுக்தி என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அப்படி ஒரு நிலை இருந்திருப்பின், குப்பன், சுப்பனாக இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற எனது முன்னோர்கள், அவர்களின் அடக்குமுறை உடைந்தபின் மாறி இருப்பார்கள். இல்லை, இன்று என் கழுத்தில் யாருடைய கத்தி இருக்கிறது, நான் இஸ்லாத்தில் நிலைத்திருக்க. வெளிப்படையாக அகங்காரமாக ஆணவமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேற எனக்கென்ன தடை இருக்கிறது (அது எனக்கு கைசேதமே). இன்றையதினம் இஸ்லாத்தை பொய்ப்பித்து ஒருவன் வெளியேறுவதை விட தலைப்புச்செய்தியாக உலகை கலக்க வேரொன்று தேவை இல்லை.

அப்படி இருக்க நாளுக்கு நாள், எது என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்த வண்ணம் இருக்கிறது. எது என்னை இஸ்லாத்தில் நிலைபெற்றிருக்கச் செய்கிறது?? உண்மையான இறைக்கொள்கையும், தெளிவான வழிகாட்டலும், நன்மை தீமை பிரித்தறிவித்தலும், வாழ்வின் அத்துனை சூழலுக்குமான தீர்வுகளும், இஸ்லாத்தை விட, உலகின் எந்த மதமும் தீர்க்கமாக தருவதற்கில்லை, இனி தரப்போவது இல்லை. இது மட்டுமே நான் இஸ்லாத்தில் நீடிக்கவும், இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவிக்கொள்ளவும் ஆதாரமாக நிற்கிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது, வாள் ஏந்திய மன்னர்களால் அல்ல. அவர்களின் நோக்கம் நாடு பிடிப்பதேயொழிய இஸ்லாத்தை பரப்புவதல்ல. இந்தியாவில் இஸ்லாம் பரவியது சூஃபிக்கள் எனப்படும் இஸ்லாமிய ஞானிகளாலும், வியாபாரிகளாலும் தான். அவர்களின் இறைக்கொள்கை, மற்றும் அவர்கள் வியாபாரத்தில் காட்டிய நேர்மை, அவர்களது பழக்கங்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களே இந்திய முஸ்லீம்கள்.

அப்படி இஸ்லாத்தை ஏற்றதாலே, இன்றும் அது இந்திய முஸ்லீம்களின் மனங்களையும், வாழ்வையும் வழிநடத்தும் காரணியாக இருக்கிறது. இன்னும் உலகமக்களின் மனங்களை கவர்ந்து கொண்டே வெற்றிகரமாக வளர்கிறது.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.