Tamil Islamic Media ::: PRINT
என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன்.

1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான்.அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன்.

மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன்.

மற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன்.இப்போ வருவான்,அப்போ வருவான் என்று.வருடம் 15 ஆகிவிட்டது இன்றுவரை என்மகன் ஊருக்கு வரவே இல்லை.

அங்கிருந்து வரும் மற்ற மக்களிடம் கேட்பேன் என்மகன் எப்படி இருக்கான்?

அவர்கள் சொல்லும் பதில் இதுதான்,உங்கள் மகன் கைநிறைய சம்பாதிக்கிறார்,மனைவி,பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறார்.

ஊரில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாரே..உங்களுக்கு தெரியாதாம்மா?என்று பரிதாபப்படும் நான் பெற்றெடுக்காத பிள்ளைகளை நினைத்து ஆறுதல் அடைகிறேன்.

மகனை காணாத துயரத்தில் இருந்த எனக்கு,எனது தோழி ஒருத்தி சொன்னாள்:நீ ஹஜ்ஜுக்கு போக முயற்சி செய்.ஒரு வேளை அங்கே வந்து உன் மகன் உன்னை சந்திக்க வாய்ப்பிருக்கும் அல்லவா?

எனது தோழியின் சொல் மட்டுமல்ல,வாழ்வில் ஒருமுறையேனும் காஃபாவை நேரில் பார்த்து விடவேண்டுமென்ற ஹாஜத்தும் எனக்குள் இருந்ததால்..கடந்த 2வருஷத்திற்கு முன்பு நான் ஹஜ்ஜுக்கு போனேன்.அப்போது என்மகனும் அங்கே தான் இருந்தான் ஆனாலும் என்னை வந்து பார்க்கவில்லை.

ஹஜ்ஜு கடமைகளை முடித்துவிட்டு மகனை காணாத கவலையிலேயே...ஊரும் வந்துவிட்டேன்.

என்மகனை பார்க்காமல் இன்றோடு 13 வருஷமாச்சு.

எனது வயது ஒத்த தோழிகளின் பிள்ளைகளும்,பேரப்பிள்ளைகளும் வெளிநாட்டிலிருந்து வந்த செய்தியறிந்து வீடுதேடி போய் பார்க்கும் போதெல்லாம்...என்றாவது ஒரு நாள் என்மகனும் இப்படி வருவான் என எதிர்பார்க்கிறேன்.

என்மீது கோபம் வரும் அளவுக்கு நான் என்மகனிடம் நடந்து கொள்ளவில்லை.பாச,நேசத்தோடு இருந்த என்மகனின் மனசை மாற்றிய தீயசக்தி எதுவென்றும் எனக்கு புரியல.

நான் என்மகனிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான்.அவனிடம் இருக்கும் சொத்துக்களையோ,பணத்தையோ அல்ல.

இவ்வுலக வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் எனக்கு கடந்த 13வருசமா செலவுக்கு 10பைசா தராதவனின் அந்தப்பணமும்,காசும் எனக்கு எதற்கு தம்பீ?

நான் உயிருடன் இருக்கும்போதே என்னை வந்து பார்க்காதவன்,எனது மரணத்திற்கு பிறகு வந்து பார்த்து எந்த புண்ணியத்தை தேடிக்கொள்ள போகிறான்?

இப்போதும் என்மகனின் மீது எனக்கு கோபமில்லை,உன்னைப்போன்ற பிள்ளைகளாவது எனது மனக்குமுறலை என்பிள்ளையின் காதுகளுக்கு கொண்டு சென்று என்னை வந்து அவன் பார்த்து விடமாட்டானா?என்ற நப்பாசையில் தான் உன்னிடமும் சொல்கிறேன் என்றார் அந்த தாய்.

குறிப்பு:இந்த தாயை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் பேரூந்து நிலையத்தில் எதார்த்தமான சந்திப்பின் போது இந்த மனக்குமுறலை உள்வாங்கினேன்.அந்த தாய் யார்?அவரது மகன் யார்?அந்த தாய் தற்போது இருக்கிறாரா?அவரது மகன் அந்த தாயை சந்தித்தாரா?என்ற விபரமெல்லாம் நமக்கு கிடைக்கவில்லை.

ஆனாலும் எனக்குள் ஒரு மன உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதால்...ஒருவேளை அந்த பாக்கியவதி உயிரோடு இருந்து,அந்த மகனும் அவரை பார்க்காமலேயே இருந்தால்..

இந்த மடல் அவரின் செவிகளில் பட்டு,அவரது இதயத்தை கிழிக்காதா?என்ற சிந்தனையிலேயே எழுதி உள்ளேன்.

ஒரு தாயின் கவலையுடன்,
கீழை ஜஹாங்கீர் அரூஸி

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.