Tamil Islamic Media ::: PRINT
பழையன கழிதலும் புதியன புகுதலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ரஜப் மாதத்தை அடைந்தால் கீழ்காணும் து ஆவை ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமளான்.

இறைவனின் மிகப்பெரும் கிருபைகளில் ஒன்று நமக்கு மனச்சாந்தி அளிக்கின்ற சில காலங்களை ஏற்படுத்திக்கொடுத்தது. அவற்றில் முஸ்லீம்களால் மிக சந்தோஷமாக வரவேற்கப்பட்டு (குழந்தைகளாலும்) சோசகமாக அனுப்பப்படகூடிவற்றுல் முதன்மையானது ரமளான் என்றால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அந்த ரமளான் வர இரண்டும் மாதம் இருக்கும் பொழுதே நபியர்கள் அப்புனித மாதத்தை வரவேற்க கற்றுத்தந்த பாடம் இந்த ஹதீஸ். வீட்டில் நடைபெறும் வைபவத்திற்கு சில மாதங்களுக்கு முன்னிருந்தே நம் ஏற்பாடுகள் ஆரம்பிப்பதுபோல், வல்ல இறைவன் தன் அளப்பெரும் கருணை மாதமாக இந்த ரமளானை ஆக்கியுள்ளான்.

அந்த மாதம் வருகிறது என்பதற்காக உலகில் உள்ள சூழ்நிலைகள் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளான். இறைவழிபாட்டிற்கு மாற்று சிந்தனை ஏற்படுத்துகிற ஷைத்தான்கள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. சுவனத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. என்பதற்கெல்லாம் மேலாக இரண்டு மாதத்திற்கு முன்னே நம் சமூகம் மனோரிதியில் இதற்கு தயாராக வேண்டும் என்பது தான் நபிவாக்கு.

மனோரீதியில் தயாராவது என்பது, வருகிற மாதத்திற்கு எவ்விதத்திலும் கண்ணியக்குறைவு ஏற்படாத வண்ணம் முழுமையான இபாதத்தில் கழிப்பதாகும். அந்த மனநிலையையும், உடல் நிலையையும் தயார்படுத்தும் காலமாக இரண்டு மாதத்தை இஸ்லாம் கணிக்கிறது. தயாராக வேண்டும் என்பதை வெறும் வார்த்தைகளாக விரும்பவில்லை. வார்த்தைகளுக்கு வரிவடிவம் கொடுக்கும் சக்தி இறைவன் ஒருவனையே சாரும் என்பதையும் சுட்டிக்காட்டும் முகமாக, இந்த நபியின் வார்த்தைகளை ஒவ்வொரு வக்திலும் முன்வைக்க சொல்கிறது.

யா அல்லாஹ் எல்லா நிலைகளையும் முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். இந்த ரஜபிலும், ஷபானிலும் நீ உன் அருளை எல்லாவிதத்திலும் என் மீது பொழிவாயாக. இதில் உடல், மனம், உணர்வு எல்லாம் அடக்கம். இதில் எந்த வகையிலும் உனக்கு மாறுசெய்யும் எண்ணம் தோன்றினாலும் என்னை காப்பாயாக என்று மூன்று மாதம் தொடரும் பிராத்தனையில் வெளிப்பாடு. ரமளானை மிக சிறப்பாக அடையச்செய்கிறது.

இந்த இடத்தில் இன்னும் ஒரு நபி மொழி மிக பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். பல இடங்களில் நபியவர்கள் எச்சரித்தசெய்தி, இன்னும் ரமளானுக்கு முன் நம் பயிற்சி கொண்டு வரவேண்டியது. காருண்ய நபியவர்கள் கூறுவார்கள்:

பாவகாரியங்களை (சிறிய பாவங்களை) மிக லேசாக கருதுவதை விட்டும் நான் உங்களை கடுமையாக எச்சரிக்கிறேன். நீங்கள் அப்படி லேசாக கருதுவதற்கு ஒரு உதாரணத்தையும் கூறுகிறேன். ஒரு கூட்டத்தார் ஒரு பள்ளத்தாக்கிலே தங்கினார்கள், அங்கே கிடக்கிற சிறு சிறு குச்சிகளை ஒன்றாக சேர்த்தார்கள். அப்படி சேர்க்கப்பட்ட குச்சிகளில் நெருப்பு மூட்டியபோது அதைக்கொண்டு அந்த கூட்டத்தினருக்கே உணவு தயாரிக்கும் அளவிற்கு அது நெருப்பை தந்தது. அப்படித்தான் சிறு சிறு பாவங்களை கொஞ்சமும் பயமின்றி செய்கிற மனிதனை கடைசியில் அந்த சிறு நெருப்பு போன்ற பாவம் பெரும் ’தீ” யாக ஆகி அவனையே கொன்றழித்து விடும்”.

நம் புழக்க பாஷையில் சொல்வதானால் சிறு துளி பெரு வெள்ளமாக ஆகுவது போன்று. பாவம் என்று தெரிந்து நம் அலட்சியமாக மறுமையில் அல்லாஹ்விடம் பார்த்துக் கொள்ளலாம் என்றோ, அல்லது அல்லாஹ் இந்த பாவத்திற்காக வெல்லாம் நம்மை தண்டிக்க போகிறானா என்ன? என்ற எண்ணம் தான் சிறு சிறு துளிகளாக சேர்ந்து நம்மை மொத்தமாக நரகம் என்ற கடலில் தள்ளிவிடுகின்றது. இமாம் கஜ்ஜாலியின் (ரஹ்) வார்த்தையில் சொல்வதானால்:

“ சிறு பாவங்கள் இரண்டு காரணங்களால் பெரும் பாவங்களாக மாறுகின்றன 1. லேசாக கருதுவது 2. தெரிந்தும் அதில் நிலைத்திருத்தல்.

மனிதனின் பார்வையில் பாவம் லேசாகிற போது இறைவன் பார்வையில் பெரிதாகிறது. மனிதனின் பார்வையில் பாவம் பெரிதாகிற போது இறைவனின் பார்வையில் சிறிதாகிறது.” - என்ன ஒரு அழகான தத்துவப்பார்வை.

பாவங்களில் அல்லாஹ்வின் தூதரால் பெரிய, சிறிய பாவம் என்று வகுத்துத்தரப்பட்டாலும். எப்பொழுது ஒரு சிறுபாவம் மனிதனால் எந்த ஒரு குற்றவுணர்வற்று செய்யப்படுகிறதோ, அது அல்லாஹ்வின் பார்வையில் பெரும் பாவத்தை மிகைத்துவிடுகிறது என்பது தான் உண்மை. ஆகையால், இந்த ரமளானை நமதாக்க, நம் குற்றவுணர்வற்று செய்யும் சிறு குற்றங்களை பட்டியலிடுவோமாக. இந்த இரண்டு மாதத்தில் நபியவர்கள் காட்டிய வழியில் துஆவை இறைவனிடம் கேட்டுக்கொண்டே.....

நாள் ஒன்றுக்கு ஒரு சிறு குற்றம் ( நம் சிந்தனையில் அதன் குற்ற உணவு மங்கியிருந்தாலும் சரி) கழைய முற்படுவோமாக. சிறு பாவங்களை நம் ஏட்டில் இல்லாமல் ஆக்குவோம், ரமளானை நமதாக்குவோம் ஈருலக வாழ்வையும் நலமாக்குவோம். முயற்சியை நமதாக்குவோம் முறையிடுதலை இறையிடம் ஆக்குவோம்.

உங்கள் துஆவில் என்னையும் சேர்க்க வேண்டுபவனாய்!!!!!

- பேரா. ஹஸனீ

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.