Tamil Islamic Media ::: PRINT
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !

( மெளலவி. அல்ஹாஜ் A. முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி நீடூர் )

 

‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’                    - அல்ஹதீஸ்

 இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமது தலையில் இறைமுனிவை வாரிக் கொள்கின்றனர். தமக்கிடையேதான் இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றால், படைத்த இறைவனுக்குப் பணிந்து அவனுக்கு கடமையாற்றுவதிலும் வரம்பு மீறிய மெத்தனத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

ஹஜ் கடமையான ஒருவரை நோக்கி இக்கடமையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள் எனக் கூறினால், ‘ஹஜ்ஜுச் சென்று வந்து விட்டால், மிக்க ஒழுங்காக வாழ வேண்டுமே, அதற்குப் பின்பும் தவறு புரிந்தால் சமுதாயம் எம்மைக் காறித் துப்புமே’ எனக் கூறி நழுவப் பார்க்கின்றார்.

அப்படியானால் நான் ஹஜ்ஜுக்குச் செல்லவும் மாட்டேன், ஒருக்காலமும் நான் திருந்தியும் வாழ மாட்டேன் என்பது இவர்களின் வாதமா? காலமெல்லாம் பாவ அழுக்காற்றில் புரண்டு அதே நிலையிலேயே மண்டையைப் போடுவேன் என்பது இவர்களின் பிடிவாதமா? ஒரு ஹாஜி மட்டும்தான் பாவங்களில் ஈடுபடக் கூடாது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது இவர்களின் நினைப்பா…?

ஒரு ஹாஜியின் வாய், புறம் – கோள் பேசக் கூடாது. ஒரு ஹாஜி நீதி நேர்மையிலிருந்து பிறழக் கூடாது. இறைக் கடமையாற்றுவதில் இம்மியும் பிசகக் கூடாது என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான்.

ஆயினும் ஒருவர் ஹஜ் செய்யாது அதனைக் கிடப்பில் போட்டுக் கொள்ள, இதனை ஒரு சாக்காகவே பயன்படுத்தி தப்பித்துக் கொள்ள நினைப்பதுதான் அநாகரீகச் செயலாகும். ‘ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றவில்லையானால் அவர் யூதராகவோ, கிருத்துவராகவோ மரித்துப் போகட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்த இழிவு நிலைக்கு ஆளாகுவதைவிட ஒருவருக்கு வேறு துர்பாக்கியம் இருக்க முடியாது. நபிகளாரின் இந்த எச்சரிக்கை வீண் சாக்குகள் மூலம் ஹஜ்ஜை தள்ளிப்போடும் சீமான்களுக்கு சாதாரணமாகத் தெரிகிறதா?

தவிர, தாம் ஹஜ் செய்யாதவரை எப்படியும் வாழலாம் என்று கூறி அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் இந்த விதாண்டாவாதிகளுக்கு இலவசமாக விநியோகித்தவர்கள் யார்? தாம் ஹஜ் செய்யாதிருக்க இப்படிப்பட்ட மோசடி வாதங்களையெல்லாம் முன்வைப்பது தவறல்லவா? ஹஜ் செய்யும் முன்பும், பின்பும் எல்லா முஸ்லிம்களும் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டுமென்பதே இஸ்லாத்தின் கட்டளையாகும்.

  ‘அல்லாஹ்வுக்காக நீங்கள் முறையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவன்றி (வாழ்ந்து) மறைய வேண்டாம்’ என்ற திருமறையின் வசனங்களெல்லாம் இக்கட்டளைகளையே எடுத்தியம்புகின்றன.

இவ்வுண்மையை உணர்ந்து இறையோனுக்குப் பயந்து இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சாக்குபோக்கு கூறுவதை தவிர்த்து திருந்தி வாழ அனைத்து முஸ்லிம்களும் முன் வர வேண்டும்.

 

  தொழுகையிலும் மெத்தனம்

 

ஆயுளில் ஒருமுறை மட்டும் நிறைவேற்றும் ஹஜ் கடமையில் இம்மெத்தனம் என்றால், நாளொன்றுக்கு சில மணித்துளிகள் மட்டும் செலவாகும் ஐவேளைக் கடமையிலும், வரம்பு மீறிய சோம்பலும் சமுதாயத்தில் நிலவுகிறது.

ஒரு முஸ்லிம் உயிர்வாழ, இன்புற்று வளர அவன் உண்பதும், உறங்குவதும், எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது தொழுகை. பசியும், பட்டினியும் கோரத்தாண்டவமாடிய அண்ணலார் காலத்தில் அதனை பொருட்படுத்தாமல், இறைவணக்கத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். அன்றைய இஸ்லாமியப் பெருமக்கள் !

அவர்களிடம் உடுத்த ஒரு துணியே இருந்தது. மேலுடம்புக்கு தனியாடையெல்லாம் அவர்களிடம் இருக்கவில்லை. ஒரே துணியைத்தான் அவர்கள் கழுத்துவரை இழுத்துக் கட்டி தங்களது மானத்தை மறைத்துக் கொண்டனர். ‘அஸ்ஹாபுஸ் ஸுப்பா’ எனப்படும் திண்ணைத் தோழர்கள் பலரது நிலை இவ்வாறே இருந்துள்ளது. ஆனால், அவர்கள் இந்த வறுமையைப் பொருட்படுத்தாமல் இறைவனைத் தொழுது போற்றினார்கள்.

 இன்று இறையோனை ஐவேளை தொழாத முஸ்லிம்கள் பலர், தொழாததற்கு பல நொண்டிக் காரணங்களைக் கூறுவதில் இறங்கியுள்ளனர்.

 ‘இப்பொழுது என்ன குடியா முழுகிவிட்டது அவசரமாகத் தொழ ! எல்லாம் வயசாகும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்’ என்கின்றனர் சிலர்.

 ‘தொழனும்னு ஆசைதான், ஆயினும் ஒரு வேலை ஜோலி வியாபாரக் கடையிலிருந்து சற்றேனும் அசைய முடியாத பிஸி’ எனக்கூறி சிலர் மண்டையைச் சொரிகின்றனர்.

‘நாமென்ன பாவமா செய்கிறோம், பள்ளிக்குச் சென்று தொழ? பாவத்தைக் கழிக்கத்தானே பள்ளி அப்படியே தொழுதாகனும் என்றாலும் என் மனதுக்குள்ளேயே தொழுது கொள்வேன்’ இப்படி சிலரது வேதாந்தம்.

‘அல்லாஹ் இன்னும் எங்களுக்கு ஹிதாயத் கொடுக்கவில்லை. ஹிதாயத் வந்தபிறகு தொழுது கொள்வோம், துஆச் செய்யுங்கள்’ இப்படி சிலரது கிண்டல்.

 

இவர்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? மரணத்தூதுவர் வயதான பின்தான் எல்லோரிடமும் வருகிறாரா? ஒரு சிறுவனிடமோ, வாலிபரிடமோ வருவதில்லையா? உலகிலிருந்து உயிர் பிரியும் அத்துணை பேரும் உடல் தளர்ந்து மூப்பெய்திய பின்தான் மரணமடைகின்றனரா? இளம் பாலகர்களும், இளமையில் மிதப்பவர்களும் இறந்துபோவதை இவர்கள் கண்டதே இல்லையா? நீண்ட காலம் வாழப்போவதாக இவர்கள் எண்ணினால், அந்த நீண்ட வாழ்க்கைக்கு இவர்களுக்கு உத்தரவாதம் அளித்தவர் யார்?

வேலையால் இவர்களுக்குத் தொழ நேரமில்லையென்றால், தொழுகை ஒரு முக்கிய வேலையாக இவர்களுக்கு தெரியவில்லையா? வேலையில்லாதவனின் வெட்டி வேலை தொழுகை என இவர்கள் கருதுகிறார்களா? பாவம் செய்தால்தான் தொழுகை. நாமென்ன பாவம் செய்கிறோம்? என சிலர் கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இவர்கள் தொழாமலிருப்பதே எவ்வளவு பெரிய பாவம். இதனை இவர்கள் உணரமாட்டார்களா !

 ‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களாகும். அவர்களில் திருந்தி இறையோனிடம் மீள்பவரே நன்மக்களாகும்’ என்ற நபிபோதனையை எவர் மறுக்க முடியும்? அல்லாஹ்வுடைய முழுக் கண்காணிப்பில் வளர்ந்த அன்பியாக்களே, இப்படிப்பட்ட மேதாவிலாசம், தற்புகழ்ச்சிகளில் ஈடுபடாதபோது இவர்கள் எம்மாத்திரம்?

ஹிதாயத் வரும் பொழுது தொழுவோம் என சிலர் தொழாமல் தட்டிக் கழிப்பதும் மிகப்பெரும் மோசடியாகும். ஹிதாயத் (நேர்வழி) என்பது காயலான் கடை – கடைச்சரக்குமல்ல. எதிர்பாராமல் கிடைக்கும் அதிர்ஷ்டப்பரிசோ, தங்கப் புதையலோ அல்ல.

எவர் நேர்வழி நின்று திருந்தி வாழ எண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் ‘ஹிதாயத்’ எனும் வெகுமதியைத் தருகிறான். இதனைப் பற்றிய சிந்தனையின்றி பணப் பேராசை, பதவிப்பேராசை பகட்டுப் பேராசை பிடித்து அலைவோருக்கு ஹிதாயத் என்பது காலம் பூராவும் எட்டாக் கனியாகவே தொலைவில் நிற்கும்.

அல்லாஹ் கூறுகிறான் : ‘நிச்சயமாக இந்த குர்ஆன் நேர்மையான நிலையான நற்சிந்தனைக்கே நல்வழி காட்டும்’       - அல்குர்ஆன்

ஒரு சிலர், பள்ளிக்குச் செல்வோரெல்லாம் மிகப்பெரும் யோக்கியர்களா? என வினவுகிறார்கள். ஆனால் பள்ளித் தொடர்பு இல்லாதவரை விட, தொடர்புடையவர் பெரும்பாலர் நல்லவராகவே இருப்பார் என்பது திண்ணம்.

காரணம், ‘நிச்சயம் தொழுகை மானக் கேடான செயல்களை விட்டுத் தடுத்து நிறுத்தும்’ என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது. பாவம் செய்து வரும் தொழுகையாளி இன்றில்லாவிட்டாலும், ஒருநாள் மனம் திருந்தி பாவத்தை உணர்ந்து மீட்சி பெற்று மக்கள் மன்றத்தில் மதிப்பு மரியாதை பெறுவது திண்ணம். ஆனால் பள்ளிக்கும் வராமல், பாவம் செய்து கொண்டு இவ்வாறு குறைகூறித் திரிவோர் திருந்துவது எங்ஙனம்…?

 ஒரு பிரயாணத்தில் ஹள்ரத் அம்மார் பின் யாஸர் (ரலி) அவர்களும், ஹள்ரத் உமர் பாரூக் (ரலி) அவர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். ஓரிரவு அவ்விருவரும் தூங்கி விழித்தபொழுது ஜனாபத் குளிப்புக் கடமையாகிவிட்டது. பஜ்ரு தொழுகை வேளையில் அவர்களிடம் குளிக்கத் தண்ணீரில்லை. எங்கே தொழுகை, களாவாகி விடுமோவென அஞ்சி இருவரும் கை பிசைகிறார்கள்.

 ஹள்ரத் அம்மார் அவர்கள் ஓர் உபாயம் செய்தார். ஒழுச் செய்ய தண்ணீர் இல்லாவிட்டால், அதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்வது போல், குளிப்புக்குப் பகரமாக மண்ணில் கிடந்து புரண்டு அவர் தொழுகையை நிறைவேற்றினார்.

 நபிகளார் சமூகம் திரும்பியபொழுது இதனை எடுத்துரைத்தார். நபிகளார் புன்னகைத்துவிட்டு கை, முகத்தில் மட்டும் தயம்மும் செய்து கொண்டால் போதுமே என விளக்கினார்கள்.

ஒருவருக்கு குளிப்புக் கடமையாகி தண்ணீர் இல்லாத பொழுது தயம்மும் செய்து தொழுவதால், கடமை நிறைவேறிவிடும் என்ற சட்ட ஞானத்தை கற்றுத்தரும் இந்நிகழ்ச்சி, தொழுகையுடன் நபித்தோழர்கள் கொண்டிருந்த நெருக்கத்தை பறைசாற்றக் கூடியதாக அமைந்துள்ளது. இவர்கள் போன்ற எத்தனையோ சஹாபாக்கள் தொழுத வண்ணமே தமது உயிர்போக வேண்டுமென ஆவல் கொண்டிருந்தார்கள். பல மணிநேரம் தொழுது பேரின்பம் கண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தாம் தொழாமல் இருந்துக் கொண்டு, அதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் நொண்டிச் சாக்குகளைத் தேடுவது முகப்பில் கண்ட தலைப்பைதானே நமக்கு நினைவுபடுத்துகிறது.

ஐவேளை தொழுவதன் மூலம் நம் இம்மை மறுமை வாழ்வினை வெற்றி பெறச் செய்வோமாக !

 

  

நன்றி : 
நர்கிஸ் மாத இதழ்; மே 2012

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.