Tamil Islamic Media ::: PRINT
பாடலியில் ஒரு புலி

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

"பாடலியில் ஒரு புலி"
----------------------------------
1857 - சிப்பாய் கலகம் வட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலகட்டம் முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவரக்கூடாது என்ற தடை உத்தரவினை ஆங்கில அரசு விதித்திருந்தது. ஒரு நாள் பாடலிபுரம் நகரில் "பீர்அலி" என்ற இளைஞனின் வீட்டின் முன் தடை உத்தரவை மீறி 200 முஸ்லிம்கள் கூடுகின்றனர்.
கூடிய மக்கள் முன் பீர்அலி எழுச்சிமிக்க உரையாற்றுகிறார். பின்னர் அனைவரும் தேசியக் கொடியைக் கையிலும், விடுதலைக் கோசத்தை நாவிலும் ஏந்தியவர்களாக ஊர்வலமாப் புறப்படுகின்றனர். ஊர்வலத்தினரைக் கைது செய்ய ஆங்கில அதிகாரி லயால் ராணுவத்துடன் வருகிறான். ஊர்வலத்தை வழிமறித்த லயாலை பீர்அலி சுட்டு வீழ்த்துகிறார். நகரெங்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. பீர்அலி கைது செய்யப்படுகிறார்.

ராணுவக் கோர்ட்டில் பீர்அலிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இறுக்கிப் பூட்டப்பட்ட விலங்குகளால் அவர் கைகளிலிருந்து ரத்தம் கசிய இழுத்து வரப்பட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார். ஒரு பிறவி வீரனுக்குரிய புன்முறுவலுடன் தூக்குமேடையில் நின்ற பீர்அலிக்கு தன் குழந்தையின் ஞாபகம் வர ஒருகண நேரம் அவர்முகத்தில் சோகம் படர்கிறது. இதனைக் கவனித்த அதிகாரிகள், இதுதான் தக்க சமயம் என்று பீர்அலியை, "பீர்அலி! கிளர்ச்சித் திட்டத்தில் இறங்கியுள்ள மற்ற தலைவர்களின் பெயர்களை நீ இப்போது வெளியிட்டால், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!" என்றனர். அதற்கு மறுத்த பீர்அலி,

நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார்.

பீர் அலியின் மரணச் செய்தி கேட்டு தனபுரி ராணுவ முகாமில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஜுலை 25-ஆம் தேதி மிகப்பெரும் புரட்சியை ஆரம்பித்தனர்.

பீர் அலி லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். பாடலிபுரத்தில் புத்தக வியாபாரம் செய்து வந்தார். பாடலிபுரத்தில் தேசபக்தர்களைத் திரட்டி ஆயதங்களுடன் அத்தேசிய வீரர்களைத் தயார் செய்து வைத்திருந்தார். "எந்த நேரத்திலும் தேசவிடுதலைக்காக தங்கள் உயிரையும் இழப்போம்" என்று அனைவரும் பீர் அலியிடம் சத்யப்பிரமாணம் செய்திருந்தனர். பீர்அலியின் மரணத்திற்குப் பின் இவ்வீரர்கள் பாடலிபுரம், தனபுரி பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பழிவாங்கும் மிகப்பெரும் கிளர்சிசியில் ஈடுபட்டனர்.
- (வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம் 272-274)

தகவல்: http://pinnoottavaathi.blogspot.com/2012/08/blog-post.html

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.